தேடுதல்

தாவீது அரசர் தாவீது அரசர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 39-1, மானிடர் வாழ்வு நிலையற்றது!

தாவீதைப் போன்று, இவ்வுலகில் நாமும் நிலையற்றவர்கள் என்பதை உணர்ந்து நிலையான இறைவனைப் பற்றிக்கொண்டு வாழ்வதற்கான வழிகளைத் தேடுவோம்.

 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 39-1, மானிடர் வாழ்வு நிலையற்றது!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘தீமை விலக்கி நன்மை செய்வோம்!’ என்ற தலைப்பில் 38-வது திருப்பாடலில் 19 முதல் 22 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவு செய்தோம். இவ்வாரம் 39-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'மானிட வாழ்க்கையின் நிலையாமை' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தத் திருப்பாடல் மொத்தம் 13 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. தாவீது அரசர் வெளிப்படுத்தும் சிந்தனைகளின் அடிப்படையில் இதனை நாம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பகுதியில் தாவீது தான் நிலையற்றவன், ஒன்றுமில்லாதவன் என்றும், மானிடர் யாவரும் நீர்க்குமிழிபோல நிலையற்றவர்கள் என்றும் எடுத்துக்காட்டுகின்றார். இரண்டாவதாக, இந்த உலகம் நிலையானது என்ற நினைப்பில் தான் பாவத்தில் வீழ்ந்து அழிந்து வருவதாகவும், தான் புரிந்த பாவத்திற்கான தண்டனை கடவுளிடமிருந்து வந்ததாகவும் எண்ணி கதறுகிறார். மூன்றாவதாக, பாவத்தால் அழிவுற்றுக் கொண்டிருக்கும் தன்னைக் காக்குமாறு கடவுளிடம் விண்ணப்பித்து இந்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது அரசர். இப்போது 1 முதல் 4 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். அமைதியான மனநிலையில் இப்போது அவ்வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.

‛நான் என் நாவினால் பாவம் செய்யாதவண்ணம் என் நடைமுறைகளைக் காத்துக்கொள்வேன்; பொல்லார் என்முன் நிற்கும் வரையில், என் வாய்க்குப் பூட்டுப் போட்டுக் காத்துக் கொள்வேன்’ என்று சொன்னேன். நான் ஊமையைப்போல் பேசாது இருந்தேன்; நலமானதைக்கூடப் பேசாமல் அமைதியாய் இருந்தேன்; என் வேதனையோ பெருகிற்று. என் உள்ளம் என்னுள் எரியத் தொடங்கிற்று; நான் சிந்தனையில் ஆழ்ந்தபோது நெருப்பு மூண்டது; அப்பொழுது என் நா பேசியதாவது; ‛ஆண்டவரே! என் முடிவு பற்றியும் என் வாழ்நாளின் அளவு பற்றியும் எனக்கு அறிவுறுத்தும். அப்போது, நான் எத்துணை நிலையற்றவன் என உணர்ந்து  கொள்வேன். (வசனம் 1-4)

முதலாவதாக, தாவீது அரசர் தான் முன்னர் செய்த பாவத்தினால் விளைந்த துயரத்தை எண்ணி வருந்தி, இனி அப்படிப்பட்ட பாவச் சூழலுக்குத் தள்ளப்படாதவாறு தனது நாவைக் காத்துக்கொள்வேன் என்கின்றார். பொல்லார் முன் தன் வாய்க்குப் பூட்டுபோட்டுக்கொள்வேன் என்கின்றார் தாவீது அரசர். அப்படியென்றால், தான் பாவத்திற்குள் தள்ளப்படுவதற்குப் பொல்லாரும் ஒரு காரணமாக அமையலாம் என்பதைத் தாவீது இங்கே சுட்டுகின்றார். 'நீதான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம், உன்னாலதான் எனக்குப் பொல்லாப்புக்கு மேல் பொல்லாப்பு... உன்னாலேயே நாம் பாவத்தில் விழுந்து செத்துருவேன் போல' என்று நமது நடைமுறை வாழ்க்கையில் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். அத்தகையதொரு சூழல் இங்கே நிலவுவதைக் காண்கின்றோம். இரண்டாவதாக, நான் என் நாவினால் பாவம் செய்யாதவண்ணம் என் நடைமுறைகளைக் காத்துக்கொள்வேன் என்கிறார் தாவீது. உண்மையில் மனித உடலில் நா மிகவும் மோசமானது, அதை நாம் சரியாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவிட்டால் அது நம்மைப் பாவத்தில் தள்ளிவிடும் என்பது திண்ணம். இதன் காரணமாகவே, "சிறியதொரு தீப்பொறி எத்துணை பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது. நாவும் தீயைப் போன்றதுதான். நெறிகெட்ட உலகின் உருவே அது. நம்முடைய உறுப்புகளுள் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த நா நம் உடல் முழுவதையும் கறைப்படுத்துகிறது. அது நம் வாழ்க்கைச் சக்கரம் முழுவதையும் எரித்துவிடுகிறது; எரிப்பதற்கான நெருப்பை நரகத்திலிருந்தே பெறுகிறது" (யாக 3:5-7) என்கின்றார் திருத்தூதரான புனித யாகப்பர்

மூன்றாவதாக, இத்தகைய காரணத்தால், தான் ஊமைபோல் பேசாது இருந்ததாகவும், எந்தளவுக்கு என்றால் நலமானத்தைக் கூட பேசாமல் அமைதியாக இருந்ததாகவும் எடுத்துரைக்கின்றார் தாவீது. அப்படியெனில், இங்கே நலமானது எது என்று சிந்திக்கும்போது, மனிதரின் வாழ்வு நிலையற்றது என்பதை உணர்ந்து கொள்வதுதான் நலமானது என்று தாவீது கருத்துவதாக நாம் உணர்ந்துகொள்ளலாம்.

மனிதரின் வாழ்வு நிலையற்றது

ஒவ்வொரு ஆண்டும் திருநீற்றுப் புதனைத் தொடங்கும் வேளை, ‘மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும், ‘பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கிறோம் பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும், மரணம் வருவதை மனிதன் அறிவானோ தருணம் இதுவென இறைவன் அழைப்பானோ, இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர் அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கிறான் என்ற வரிகள் கொண்ட பாடலை நாம் பாட மறப்பதில்லை. இறைவனுக்கு முன்பு மனிதர் அனைவரும் ஒன்றுமில்லாதவர் என்பதை இந்த ஒட்டுமொத்த பாடலும் நமக்கு உணர்த்திவிடுகிறது. மெய்யாகவே, மானிடர் நீர்க்குமிழி போன்றவர்; மனிதர் வெறும் மாயை; துலாவில் வைத்து நிறுத்தால், அவர்கள் மேலே போகின்றார்கள்; எல்லாரையும் சேர்த்தாலும் நீர்க்குமிழியை விட எடை குறைகின்றார்கள் (திபா 62:9) என்றும், மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்; அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை (திபா 144:4) என்றும் தாவீது வேறு சில திருப்பாடல்களிலும் எடுத்துரைக்கின்றார். வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவர்களுள் யோபு மிகவும் முக்கியமானவர் என்பதை அவரது வாழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. எல்லாவற்றையும் இழந்து, அனைவராலும் கைவிடப்பட்ட நிலையிலும், தனது வாழ்வு நிலையானது அல்ல மாறாக, கடவுளே என்றென்றும் நிலையானவர் என்பதை அவர் மிகவும் ஆழமாக உணர்ந்திருந்தார். என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூர்வீர் என்றும் வெறுத்துப்போயிற்று; என்றென்றும் நான் வாழப்போவதில்லை; என்னைவிட்டுவிடும். ஏனெனில் என் வாழ்நாள்கள் காற்றுப்போன்றனவே (காண்க. யோபு 7:7,16) என்றும் கூறும் அவரின் வார்த்தைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

அறிவற்ற செல்வன் உவமை

லூக்கா நற்செய்தியில் ‘அறிவற்ற செல்வன்’ என்ற தலைப்பில், மானிடர் வாழ்வு நிலையற்றது என்பதை விளக்கும் விதமாக அருமையானதொரு உவமையைக் கூறுகின்றார் இயேசு. “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்” என்று கூட்டத்திலிருந்து கேட்கும் ஒருவருக்கு அளிக்கும் பதிலாகவே இந்த உவமை அமைகிறது. தனது களஞ்சியத்தை பெரிதாக்கி, அதிமான செல்வத்தைச் சேமித்து, உண்டு குடித்து மகிழ்ந்திருக்க நினைத்த அந்தச் செல்வந்தனின் வாழ்வு எப்படி அகோர நிலையில் முடியப்போகிறது என்பதை இவ்வாறு எடுத்துக்காட்டுகின்றார் இயேசு. ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை  யாருடையவையாகும்?’ (காண்க லூக் 12:13-20) என்கின்றார். ஆக, செல்வம், புகழ், வீண்பெருமை, செருக்கு, அகந்தை ஆகிய அனைத்தும் பாவத்திற்கு நம்மை இட்டுச்செல்லும் என்பதுடன், இவை நிலைவாழ்வுக்கான வழிகளாகவும் அமையாது என்பதையும் இந்த உவமையில் எடுத்துரைக்கின்றார் இயேசு. இதனைத்தான் கவிஞர் கண்ணதாசனும், “மனிதன் நினைப்பதுண்டு... வாழ்வு நிலைக்குமென்று... இறைவன் நினைப்பதுண்டு... பாவம் மனிதனென்று...” என மனிதரின் நிலையாமைக் குறித்து எழுதுகின்றார். இவ்வுலகில் நான் நீண்டகாலம் வாழ்வேன் என்று கூறும் மனிதர் திடீரென மரணித்துவிடுகின்றனர். ‘என்னங்க சொல்றீங்க... அண்ணே செத்துட்டாரா... என்னால நம்பவே முடியல... நேத்து இராத்திரிதாங்க என்கிட்ட நல்லா பேசிகிட்டு இருந்தாரு. அதெல்லாம் எனக்கு ஒன்னுமில்லய்யா... நான் நல்லா இருக்கேன். இப்போதைக்கு எனக்கு சாவெல்லாம் கிடையாதுன்னு சொன்னாரு... ஆனா. இன்னைக்குக் காலைல இப்படி ஆயிடுச்சு... என்னங்க வாழ்க்கை இது...!’ என்று நம்மில் பலர் கூறுவதுண்டு. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்று கிராமங்களில் பெரியவர்கள் கூறுவார்கள். இன்றைய உலகில், ‘எல்லாமே நிரந்தரம்’ என்று மனிதர் இறுமாந்திருக்கின்றனர். அதனால்தான் இவ்வுலகில் அனைத்துவிதமான தீமைகளும் உருவெடுக்கின்றன. ஆனால், இவ்வுலக வாழ்வு என்பது ஒரு மாயை என்றும், கடவுள் மட்டுமே நிரந்தரம் என்றும் நினைந்து வாழ்வர் மட்டுமே இந்த உலகில் தாங்கள் வாழ்ந்ததற்கான வழித்தடங்களை விட்டுச்செல்கின்றனர்.

ஒருநாள் ஞானி ஒருவரைச் சந்திக்க வந்த மன்னர், “சுவாமி! மனித வாழ்வு பற்றி எனக்கொரு வாசகம் எழுதித் தாருங்கள். நீங்கள் எழுதிக் கொடுப்பது வாழ்வின் உண்மையை வெளிப்படுத்துவதாக இருந்தால் சிறப்பாக இருக்கும்” என்று அவரிடம் வேண்டினார். ஞானியும் மறுக்காமல் ஒரு துண்டு காகிதத்தில் ஒரு வாசகத்தை எழுதிக்கொடுத்தார். அதை வாங்கிப் படித்த மன்னர் அதிர்ந்து போனார். காரணம், அந்தச் சீட்டில் 'உன் அப்பனும் இறப்பான்; பிள்ளையும் இறப்பான் அதன்பின் பேரனும் இறப்பான்’ என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் அம்மன்னருக்கு அதிர்ச்சியோடு, கோபமும் வெளிப்பட்டுவிட்டது. அப்போது, ஞானியைப் பார்த்து, “என்ன இது? இப்படி எழுதித் தந்துவிட்டீர்களே சாமி” என்று சினத்துடன் கேட்டார் மன்னர். அவனது கோபத்தைக் கண்டு மிரளாமல், நிதானமாக பதிலளித்தார் ஞானி. “நீ வாழ்வின் உண்மையை எழுதித்தரச் சொல்லிக் கேட்டாய். அழியாத, நிலையான உண்மை இதுதான். உன் தாத்தா எப்போதே இறந்துவிட்டார். உன் தந்தையும் சில நாள்களுக்கு முன்பு இறந்து போனார். நீயும் ஒரு நாள் இறப்பாய். அதேபோல் உன்னுடைய மகனும் கூட ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும். வாழ்வின் நிலையாமை இதுதான். எனவே, எப்போதும் எதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இரு” என்றார் ஞானி. அந்த விளக்கத்தைக் கேட்ட மன்னர், வாசகத்தை கண்ணில் ஒற்றியபடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்..

‘மாயா மாயா மாயா எல்லாம் மாயா.. சாயா சாயா சாயா எல்லாம் சாயா...வாசனை இருக்கும் வரையினில் சிரிக்கும் பூக்களின் கதை தான் பூமியில் நமக்கும் உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை’ என்றார் மறைந்த கவிஞர் வாலி. ஆகவே, தாவீதைப் போன்று, இவ்வுலகில் நாமும் நிலையற்றவர்கள் என்பதை உணர்ந்து நிலையான இறைவனைப் பற்றிக்கொண்டு வாழ்வதற்கான வழிகளைத் தேடுவோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2023, 12:33