தேடுதல்

கர்தினால் மால்கம் இரஞ்சித் கர்தினால் மால்கம் இரஞ்சித்  (AFP or licensors)

நீதிக்காகப் போராடுவதே உயிர்த்தெழுதலின் அடையாளம்

அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகள் எதுவாக இருந்தாலும், இந்த நாட்டில் நாம் விரும்பும் மாற்றத்தை அடைய இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் : கர்தினால் இரஞ்சித்,

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிறிஸ்தவம் என்பது பிரச்சனைகளின் மத்தியிலும் சிரிக்கத் தெரிந்த மக்களின் நம்பிக்கை. இதுவே உயிர்த்தெழுதல். அதைத்தான் இயேசு சிலுவையில் காட்டினார் என்றும், வாழ்க்கையின் எதிர்மறையான அணுகுமுறைகளை அவர் சவாலுக்கு உட்படுத்தினார் என்றும் கூறினார் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித்.

ஏப்ரல் 9, இஞ்ஞாயிறன்று, தான் தலைமையேற்று நிகழ்த்திய உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், நாட்டின் நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கை மக்கள் தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளும் போராட்டமானது உயிர்த்தெழுந்த ஆண்டவர் கடந்து சென்ற புதிய வாழ்வுக்கான சாட்சியமாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

நாட்டில் சிலர் மாற்றத்தை விரும்பாத நிலையில், பாராளுமன்றத்தின் முன் நமது இளைஞர்கள் தங்களின் மனவலிமையை பறைசாற்றியுள்ளனர் என்றும், இதுதான் உண்மையான உயிர்த்தெழுதல் என்றும் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள்,  நாம் தீமையுடன் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள இயலாது என்றும் கூறியுள்ளார்.  

“தற்போதைய அரசும் பல்வேறு சட்டங்கள் வழியாக மக்கள் போராட்டத்தை பயங்கரவாதமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதைக் காண்கிறோம், ஆனால் நாம் அவர்களுக்கு அஞ்சமாட்டோம் என்று உரைத்த கர்தினால் இரஞ்சித் அவர்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகள் எதுவாக இருந்தாலும், இந்த நாட்டில் நாம் விரும்பும் மாற்றத்தை அடைய இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்" என்றும் கூறினார்

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள், மூன்று தங்கும் விடுதிகள் சேதமடைந்ததுடன் 250 பேர் உயிரிழந்தனர் என்பதும் 500 பேர் படுகாயமுற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (ASIAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 April 2023, 14:28