தேடுதல்

இப்தார் விருந்தில் இஸ்லாமியர் இப்தார் விருந்தில் இஸ்லாமியர்   (ANSA)

பாகிஸ்தானில் பல்மத உறவை வளர்க்கும் இப்தார் விருந்து

இப்தார் விருந்து அறிவு, உரையாடல், மனித உறவுகள், உடனிருப்பு, ஒன்றாக உணவருந்துதல் ஆகியவற்றுக்கான ஒரு பயனுள்ள வழியாக அமைகிறது

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உணவைப் பகிர்ந்துகொள்வது, ஒன்றாக இறைவேண்டல் செய்வது, ஒருவரையொருவர் அன்புகூர்வது, எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளை அன்புகூர்வது, ஆகியவை பாகிஸ்தானிய சமூகத்திற்கு மிக முக்கியமான சாட்சியமாக அமைகிறது என்று கூறினார் பேராயர் Mario Travas.

இஸ்லாமியர்களின் இரமலான் மாதத்தை முன்னிட்டு இலாகூரின் அமைதியகத்தில் நடைபெற்ற இப்தார் விருந்தில் கலந்துகொண்டபோது இவ்வாறு உரைத்த பேராயர் Travas அவர்கள், ஏழைகளைக் கவனித்துக் கொள்ளவும், சகோதர அன்பு மற்றும் ஒருவருக்கொருவர் அக்கறை கொண்ட சிறந்த செய்திகளை அறிவிக்கவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் கூறினார்.

மதங்களுக்கு இடையிலான உரையாடலை ஊக்குவிக்கும் எண்ணமுடன் உருவாக்கப்பட்ட அமைதியகத்தின் இயக்குனரான புனித தோமினிக் சபையைச் சார்ந்த அருள்பணியாளர் James Channan ஏற்பாடு செய்த இந்த இப்தார் விருந்தில் பல்வேறு மதத் தலைவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாம் மதத்தவர் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய மதத்தின் புனித மாதமான இரமலான் மாதத்தில் நடைபெறும் இப்தார் விருந்தானது இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் பிற நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கவும், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், தொடர்ந்து நட்புறவைப் பேணவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது என்றும் இவ்விருந்தில் பங்குபெற்ற தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

இரமலான் மாதத்தில் பாகிஸ்தானில் உள்ள பல கத்தோலிக்க நிறுவனங்கள் இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்து இஸ்லாமிய விசுவாசிகளை அழைக்கின்றன என்றும்,  இது அறிவு, உரையாடல், மனித உறவுகள், உடனிருப்பு, ஒன்றாக உணவருந்துதல் ஆகியவற்றுக்கான ஒரு பயனுள்ள வழியாக அமைகிறது என்றும் எடுத்துக்காட்டப்பட்டது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 April 2023, 14:00