திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தையர்கள் 16ஆம் கிரகரி, 9ஆம் பயஸ
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
நாம் இன்று காணவிருக்கும் திருத்தந்தை 16ம் கிரகரியின் வரலாறு கொஞ்சம் நீளமானதுதான். இருப்பினும் நேரம் கருதி மிகச்சுருக்கமாக நோக்குவோம். இத்தாலியின் வெனிஸ் பகுதியில் Belluno எனுமிடத்தில் 1765ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி பிறந்தார் Bartolomeo Alberto Cappellari. இவர் 18 வயதாக இருந்தபோதே Camaldolese துறவு சபையில் இணைவதற்கான தன் விருப்பத்தை வெளியிட, வீட்டிலோ எதிர்ப்பு. அதையும் மீறி துறவு சபையில் இணைந்து தனது 23ஆம் வயதில் அருள்பணியாளரானார். துறவு சபையில் இவர் எடுத்துக்கொண்ட பெயர் Mauro. அறிவாளியாக இருந்த இவர் Camaldolese துறவு சபையில் மெய்யியலும் இறையியலும் கற்பித்தார். 1825 மார்ச் 21ஆம் தேதி இவரை கர்தினாலாக உயர்த்தினார் திருத்தந்தை 12ஆம் லியோ. விசுவாசப்பரப்பு திருப்பேராயத்தின் தலைவராகவும் கர்தினால் மவ்ரோ செயலாற்றினார். 1829ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி திருத்தந்தை 10ஆம் லியோ காலமானார். அதைத் தொடர்ந்து பொறுப்பேற்ற திருத்தந்தை 8ஆம் பயஸும் 1830ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி உயிரிழக்க, 15 நாட்களுக்குப்பின் கூடிய கர்தினால்கள் அவைக் கூட்டம், திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் பணியில் 7 வாரங்கள் நீடித்தது. 45 கர்தினால்கள் கூடியிருந்த அவையில் 31 வாக்குகளைப் பெற்று திருத்தந்தையானார் கர்தினால் மவ்ரோ என்று அழைக்கப்பட்ட கர்தினால் Capillaria. இவர் 16ஆம் கிரகரி என்ற பெயரை எடுத்துக்கொண்டார். இவர் பதவியேற்ற சிலநாட்களிலேயே திருப்பீடத்திற்கு சொந்தமான சில நிலப்பகுதிகளில் புரட்சி வெடிக்க ஆரம்பித்தது. பொலோஞ்ஞா நகரில் பாப்பிறை கொடி இறக்கப்பட்டு, அப்பகுதிக்குரிய கொடி பறக்கவிடப்பட்டது. புரட்சிப் பகுதிகளுக்கு திருத்தந்தையால் அனுப்பப்பட்ட கர்தினால் பென்வெனுத்தியும் சிறைபிடிக்கப்பட்டார். ஆனால், ஆஸ்திரியா நாட்டின் உதவியை திருத்தந்தை நாட, அவர்களும் உடனே உதவிக்கு வர, புரட்சி ஒடுக்கப்பட்டது.
திருப்பீடத்திற்கு கீழ் இருந்த நிலப்பகுதிகளில் எழுந்த பதட்ட நிலைகளை குறைக்கும் நோக்கத்தில் ஆஸ்திரியா, இரஷ்யா, பிரான்ஸ், Prussia மற்றும் இங்கிலாந்து இணைந்து பல சீர்திருத்தப் பரிந்துரைகளை முன்வைத்து, அவைகளுள் சில ஏற்றுக்கொள்ளவும்பட்டன. இவ்வேளையில், திருத்தந்தை 16ஆம் கிரகரி அகில உலக திருஅவையின் நடவடிக்கைகளிலும் சிறப்புக் கவனம் செலுத்தினார். சில பிரான்ஸ் நாட்டு இறையியலாளர்களின் தவறான படிப்பினைகளை வன்மையாகக் கண்டித்தார். இலண்டன் விவிலியக்கழகத்தின் தவறான படிப்பினைகளையும் தன் சுற்றுமடல் வழியாக வெளிக்கொணர்ந்தார். இந்த வேளையில் இஸ்பெயினில் கத்தோலிக்க அருள்பணியாளர்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டு துறவு மடங்கள் மூடப்பட்டன. சீர்திருத்த சபை என்ற ஒன்று உருவாக்கப்பட்டு, திருஅவைக்கு எதிரான அருள்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இஸ்பெயின் தலத்திருச்சபையில் அமைதியைக் கொணரமுயன்றார் திருத்தந்தை. பிரான்சிலும் போலந்திலும் திருஅவைக்கு எதிரான சித்ரவதைகளை தடுத்து நிறுத்தினார். 1843ல் Romagna, Umbria என்ற பகுதிகள் திருப்பீடத்திற்கு எதிராக புரட்சி செய்தபோது திருத்தந்தையின் படைகள் அவைகளை அடக்கி ஒடுக்கின. 1846ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி, நோயால் படுக்கையில் வீழ்ந்த திருத்தந்தை 16ஆம் கிரகரி அதே ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி காலமானார். பக்தி நிறைந்தவராக, இரக்கக் குணமுடையவராக, எளிமையானவராக, நட்பு பாராட்டுபவராக இருந்த இத்திருத்தந்தை, தன் பதவிக்காலத்தில் ஐந்து இறையடியார்களை புனிதர்களாகவும் 33பேரை அருளாளராகவும் அறிவித்துள்ளார்.
நாம் தற்போது பார்க்கவிருக்கும் திருத்தந்தை 9ஆம் பயஸின் இயற்பெயர் GIOVANNI MARIA MASTAI-FERRETTI. இவர் இளவயதில் திருத்தந்தையின் படையில் இணைய விரும்பினார். ஆனால் அதற்கு தகுதியில்லாதவர் என நிராகரிக்கப்பட்டார். குருவாக விரும்பினார். ஆனால் இவருக்கு காக்கா வலிப்புநோய் இருந்ததால் அதுவும் மறுக்கப்பட்டார். அதன்பின் இவராகவே கல்லூரியில் இறையியல் பயின்றார். இதற்கிடையில் காக்காவலிப்பு நோயிலிருந்து இவர் பூரண சுகம் பெற்றதால் குருவாவதற்கு இருந்த தடைநீங்கி குருவாகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். நான்கே ஆண்டுகளில், அதாவது 1823ஆம் ஆண்டு, சிலேயின் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியுடன் தணிக்கையாளராகவும் நியமிக்கப்பட்டு, அடுத்த நான்கு ஆண்டுகளில் இத்தாலியின் Spoleto நகர் பேராயராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்த மூன்று ஆண்டுகளில் இமோலா நகருக்கு மாற்றப்பட்டு, கர்தினாலுக்குரிய அந்தஸ்தையும் பெற்றார். 1846ல் திருத்தந்தை 16ஆம் கிரகரி இறந்தபோது, ஆஸ்திரியர்கள் தேர்தலில் தலையிடுவார்களோ எனப் பயந்த கர்தினால்கள், உடனடியாக அடுத்த திருத்தந்தையை தேர்ந்தெடுக்க அவசரப்பட்டனர். ஜூன் 16ஆம் தேதி, அதாவது தாங்கள் கூடிய மூன்றாவது நாளே, அந்த 50 கர்தினால்களும் கர்தினால் Mastai-Ferrettiயை திருத்தந்தையாக தேர்வுசெய்தனர். அவரும் 9ஆம் பயஸ் என்ற பெயரை எடுத்துக்கொண்டார்.
திருத்தந்தை 9ம் பயஸ் பதவிக்கு வந்தவுடனேயே, திருப்பீட ஆட்சிப்பகுதிகளில் அரசியல் மாற்றங்களை புகுத்த விரும்பினார். 2000 அரசியல் கைதிகளுக்கு விடுதலை அளித்தார். தோற்றதால் பயந்து ஓடியவர்களை நாட்டிற்குள் திரும்பி வரும்படி அழைத்தார். திருப்பீட ஆட்சிப் பகுதிகளில் இதுவரை அருள்பணியாளர்களால் மட்டுமே கவனிக்கப்பட்டு வந்த நிர்வாகப் பதவிகளை பொது நிலையினருக்கு வழங்கினார். உரோம் நகருக்கான பிரதமராக கர்தினால் Rossi என்பவரை நியமித்து அவரின் அமைச்சரவையில் பொதுநிலையினரை நியமித்தார். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு வித்தியாசமாக இருந்தது. ஓர் அரசியல் அமைப்புடன் கூடிய ஆட்சியாக அது இருக்கவேண்டுமென விரும்பினர். ஏனெனில் பாப்பிறை ஆட்சி என்பது மன்னர் ஆட்சிபோல் அக்காலத்தில் இருந்தது உண்மை. திருத்தந்தையின் சீர்திருத்தங்களால் திருப்தி அடையாத மக்கள் பாராளுமன்றம் செல்லும் வழியில் கர்தினால் Rossiயை கொன்றனர். திருத்தந்தையை தினமும் சந்தித்து வந்த ஓர் ஆயரையும் சுட்டுக்கொன்றனர். உரோம் நகரின் பதட்ட நிலைகளை சமாளிக்க முடியாத திருத்தந்தை 9ஆம் பயஸ், மாறுவேடத்தில் இத்தாலியின் கயத்தா என்ற நகருக்கு 1849ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி தப்பிச் சென்றார். ஏனைய கர்தினால்களும் அங்கு கூடினர். இதற்கிடையில் திருத்தந்தையின் உதவிக்கு வந்த பிரெஞ்ச் படைகள், உரோமுக்குள் புகுந்து அமைதியைக் கொணர, 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி உரோம் நகர் திரும்பினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்