திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தையர் 12ஆம் லியோ, 8ஆம் பயஸ்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
நேயர்களே! திருத்தந்தையர் 6ஆம் பயஸ் மற்றும் 7ஆம் பயஸைத் தொடர்ந்து, திருஅவையை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருத்தந்தை 12ஆம் லியோ. இவர் இத்தாலியின் Spoleto நகர்ப்பகுதியில் 1760ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி பிறந்தார். 10 குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் ஆறாவதாகப் பிறந்த இவர், தன் 23ஆம் வயதில் 1783ஆம் ஆண்டு அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 6 பெயர்களை உள்ளடக்கிய நீண்ட பெயராக இவரின் பெயர் இருந்தது (ANNIBALE FRANCESCO CLEMENTE MELCHIORE GIROLAMO NICOLA DELLA GENGA). நாம் இவரை Annibale என்றே அழைப்போம். திருத்தந்தை 7ஆம் பயஸின் அன்புக்கு பாத்திரமான இவர், 1792ல் வத்திக்கான் பணியில் நியமிக்கப்பட்டு, பின்னர் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டதுடன், பலகாலம் வெளிநாடுகளில் திருப்பீடத் தூதுவராகவும் செயலாற்றினார். திருத்தந்தை 7ஆம் பயஸ், பிரெஞ்ச் துருப்புகளால் கைது செய்யப்பட்டபோது, இவர் Monticelli துறவுமடத்திற்குச் சென்று, அமைதியில் தன் இறுதிநாட்களைச் செலவிட விரும்பினார். ஆனால், 1814ல் நெப்போலியன் வீழ்ச்சியடைந்தபோது, இவர் பிரான்ஸ் தலைநகருக்கு திருப்பீடத் தூதுவராக அனுப்பப்பட்டார். அங்கிருந்து திரும்பி வந்தபோது திருத்தந்தை 7ஆம் பயஸ் இவரை கர்தினாலாக உயர்த்தினார். 1820ல் உரோம் நகருக்கான திருத்தந்தையின் துணைஆயராகவும், இலாத்ரன் பேராலய பேராயராகவும், பல்வேறு திருப்பீட துறைகளின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
திருத்தந்தை 7ஆம் பயஸ் உயிரிழந்தபோது கூடிய கர்தினால்கள் அவை, 1823ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி, கர்தினால் Annibale அவர்களை திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தது. அவரும் 12ஆம் லியோ என்ற பெயரை எடுத்துக்கொண்டார். 63 வயதில் திருத்தந்தையான இவர், முதலில் இப்பொறுப்பை ஏற்றுக் கொள்ள மறுத்தார். தன்னை விட்டுவிடும்படி கர்தினால்களிடம் கெஞ்சினார். ஆனால் கர்தினால்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி, இறைச்சித்தம் என அதனை ஏற்றுக் கொண்டார். இவர் காலத்தில்தான் 1825ன் ஜூபிலி ஆண்டு கொண்டாடப்பட்டது. உரோம் நகரில் இயங்கிவந்த உரோமன் கல்லூரியை இயேசு சபையினரிடம் ஒப்படைத்தவர் இவரே. உரோம் நகரின் புனித பவுல் பசிலிக்காப் பேராலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினார். 1829ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நோயில் விழுந்த திருத்தந்தை 12ஆம் லியோ, இறுதி அருள்சாதனங்களைப் பெற்றபின், 10ஆம் தேதி அதிகாலையில் இறைபதம் சேர்ந்தார். நல்ல குணங்களைப் பெற்றிருந்த இத்திருத்தந்தை, அன்றைய ஐரோப்பிய ஆட்சியாளர்களின் போக்குகளை சரியாகப் புரிந்து கொள்ளத் தவறியதால், உரோம் நகரில் புகழ்பெற்று விளங்க முடியவில்லை.
திருத்தந்தை 12ம் லியோவிற்க்குப்பின் பொறுப்பேற்றார் திருத்தந்தை 8ஆம் பயஸ். 1761ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி Francesco Xaverio Castiglione என்ற இயற்பெயருடன் பிறந்த இவர், பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர். Osimoவின் இயேசு சபை பள்ளியில் பயின்றபின் இத்தாலியின் பொலோஞ்ஞா மற்றும் உரோம் நகர்களில் திருஅவைச் சட்டமும் பயின்ற இவர், 1800ஆம் ஆண்டு திருத்தந்தை 7ஆம் பயஸால் Montalto ஆயராக நியமிக்கப்பட்டார். ஆனால், இத்தாலிய மன்னருக்கு பிரமாணிக்கமாக இருப்பேன் என்ற வாக்குறுதியை எடுக்க மறுத்ததற்காக பிரெஞ்ச் படைகளால் கைது செய்யப்பட்டு, பிரான்ஸ் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டார். 1816ல் திருத்தந்தை இவரை கர்தினாலாக உயர்தினார். 1823ஆம் ஆண்டு இடம் பெற்ற பாப்பிறைத் தேர்விலேயே இவரின் பெயரும் இருந்தது. இருப்பினும் 12ஆம் லியோவே தேர்ந்தெடுக்கப்பட்டார். 1829ஆம் ஆண்டில் திருத்தந்தை 12ஆம் லியோவின் இறப்பிற்குப்பின் இடம்பெற்ற கர்தினால்கள் அவையின் 5 வாரத் தேர்வு முயற்சிகளுக்குப்பின் தேர்ந்தெடுக்கப்பட்டார் பாப்பிறை 8ஆம் பயஸ். இவர் 18 மாதங்களே திருஅவையை வழிநடத்திச் சென்றார்.
இவர் காலத்தில்தான் இங்கிலாந்தில், கத்தோலிக்கர்களுக்கான வழிபாட்டு உரிமை பெறப்பட்டது. கத்தோலிக்கர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட சட்டங்களை இங்கிலாந்து பாராளுமன்றம் திரும்பப் பெறத் துவங்கியது இத்திருத்தந்தை 8ஆம் பயஸின் காலத்தில்தான். இந்த நேரத்தில் பிரான்ஸ் மன்னர் பத்தாம் சார்லஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டு லூயி பிலிப் புதிய மன்னரானார். இத்தகைய புரட்சி மாற்றங்கள், திருப்பீட ஆட்சிப் பகுதிகளிலும் தன்னாட்சிக்கான விதைகளை விதைத்து புரடசிக்கு வித்திட்டன. திருப்பீட ஆட்சிக்கு எதிரான போக்குகள் முளைவிடத் தொடங்கிய இக்காலக்கட்டத்தில் 1830ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி காலமானார் திருத்தந்தை எட்டாம் பயஸ்.
நேயர்களே! 18 மாதங்களே திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை எட்டாம் பயஸ்க்குப்பின் பொறுப்பேற்ற திருத்தந்தை 16ஆம் கிரகரி குறித்து வரும் வாரம் நோக்குவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்