தேடுதல்

நைஜீரிய கிறிஸ்தவர்கள் நைஜீரிய கிறிஸ்தவர்கள்   (ANSA)

நைஜீரியாவில் துன்புறும் கிறிஸ்தவர்கள்

நைஜீரியாவில் 89 விழுக்காடு கிறிஸ்தவர்கள் இதுவரை கிறிஸ்தவ நம்பிக்கைக்காக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். - இன்டர்சொசைட்டி அறிக்கை

மெரினா ராஜ் – வத்திக்கான்

நைஜீரியாவில் 50,000 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளதாகவும், 18,000 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் 2,200 கிறிஸ்தவ பள்ளிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் இண்டர்சொசைட்டி என்னும் நைஜீரியாவின் மனித உரிமைகள் குறித்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 14 ஆண்டுகளில் ஏறக்குறைய 52,250 நைஜீரிய கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய தீவிரவாதச் செயல்பாடுகளினால் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், நைஜீரியாவில் 2009ஆம் ஆண்டு போகோ ஹராம் இஸ்லாமிய கிளர்ச்சி வெடித்ததில் இருந்து 50,000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இன்டர்சொசைட்டி என்னும் இந்த நைஜீரிய அரசு சாரா அமைப்பினால் புதிதாக வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

ஆப்ரிக்காவில் உள்ள கிறிஸ்தவர்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றாக நைஜீரியா மாறியுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட 52,250 நைஜீரிய கிறிஸ்தவர்களில் 30,000க்கும் அதிகமானோர் முன்னாள் நைஜீரிய அரசுத்தலைவர் முஹம்மது புஹாரியின் காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், ஏறக்குறைய 707 கிறிஸ்தவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

வடக்கு நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் 200, அடுனுவில் (பைகோரோ) 100, கடுனாவில் 101 கிறிஸ்தவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். மேலும், கட்சினா, தாராபா, எடோ, ஓகுன், நசராவா, குவாரா, கோகி, போர்னோ, யோபே மற்றும் அடவாமா பௌச்சி, எனுகு, இமோ, கெப்பி, கோம்பே, பேயல்சா மற்றும் கிராஸ் ரிவர் ஆகியவையும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் அடங்கும்.

ஏறக்குறைய 50 இலட்சம் கிறிஸ்தவர்கள் நைஜீரியா உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும், மண்டலம் மற்றும் துணை மண்டல  எல்லைகளில் உள்ள குடிபெயர்ந்தோர் முகாம்களிலும் வாழ்கின்றனர் என்றும் நைஜீரியாவில் 89 விழுக்காடு கிறிஸ்தவர்கள் இதுவரை கிறிஸ்தவ நம்பிக்கைக்காகத் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்றும்  இன்டர்சொசைட்டி அறிக்கை கூறுகிறது.

நைஜீரியாவில் கிறிஸ்தவ நம்பிக்கைக்காகத் துன்புறுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களுக்காக ACN எனப்படும் தேவையிலிருக்கும் தலத்திருஅவைகளுக்கு உதவும் அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. அதுமட்டுமன்றி, கத்தோலிக்க விசுவாசிகள், துன்புறுத்தப்படும் பிற கிறிஸ்தவர்களை ஆதரிக்கும் திருப்பீட அறக்கட்டளை 2021 ஜனவரி முதல்2022 ஜூன் வரை 7,600 க்கும் மேற்பட்ட நைஜீரிய கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 April 2023, 14:12