தேடுதல்

இயற்கை மருத்துவம் இயற்கை மருத்துவம்  

நேர்காணல் - இயற்கை மருத்துவத்தின் இனிமை - அன்னை நலவாழ்வு இல்லம்

மக்களுக்கு எளிய முறையில் இயற்கை மருத்துவம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ் நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள முத்துப்பட்டியில் தொடங்கப்பட்டதே அன்னை நலவாழ்வு இல்லம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஆனால் இக்காலகட்டத்தில் குறைவற்றதாகக் காணப்படுவது நோயும் அதன் வகைகளும் தான். எங்கு பார்த்தாலும் பல்வேறு வகையான நோய்களின் பிடியில் தான் மனிதகுலமே உள்ளது. மனித குலத்தை துன்புறுத்தும் நோய்களைக் கட்டுப்படுத்தவும், நோய்கள் வராமல் தடுக்கவும் ஆரோக்கியமான வாழ்க்கைக்க்கு உதவுவதும் இயற்கை மருத்துவம். சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற பாரம்பரிய இயற்கை மருத்துவத்தைதான் நமது முன்னோர்கள் அக்காலத்தில் பின்பற்றி வந்தனர். காலப்போக்கில் நாம் இவற்றை மறந்துவிட, மீண்டும் இயற்கை மருத்துவம் தற்போது எழுச்சி பெற்று வருகிறது.

பசியாற்றும் உணவை உயிர்காக்கும் மருந்தாகக் கொடுக்கும் சித்த மருத்துவ மருந்துகளை மூலிகை, தாதுப்பொருள்களில் இருந்து தயாரிக்கின்றனர். வாதம், பித்தம், கபம் என்னும் நம் உடலில் உள்ளவற்றைப் பொறுத்தே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. ஆயுட்காலம் காக்கும் அருமருந்தாகிய ஆயுர்வேதம் உடல்நலக் குறைவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படும் காலநிலை மாற்றங்களால் ஏற்படும் நோய்களுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. நோயின் அறிகுறிகளை மட்டுமல்லாமல் நோயாளிகளின் உடல், உளவியல் பண்புகள் குறித்தும் அறியப்படும் ஹோமியோபதியில் மருந்தின் அளவைக் குறைத்து வீரியத்தை அதிகமாக்கி நோய் குணப்படுத்தப்படுகின்றது.

இது போல பல நூற்றாண்டுகளாக கத்தியின்றி ரத்தமின்றி சிகிச்சை அளிக்கும் பாரம்பரிய மருத்துவங்கள் பல இருக்கின்றன. அவற்றின் அருமை அறிந்து இப்போதுதான் நாம் அதனை நாடிச்செல்கின்றோம். ஆனாலும் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு மருத்துவ சாலையில்தான் இதுபோன்ற இயற்கை மருத்துவ நிலையங்களை நம்மால் காணமுடிகிறது. அவசரத்திற்குக்கூட ஆலோசனை கேட்க அருகில் ஒரு இயற்கை மருத்துவ மையத்தைப் பார்க்க முடிவதில்லை. முறையாக பயின்று பதிவுசெய்த இயற்கை மருத்துவ நிபுணர்கள் மற்றும் தரமான மருந்துகள் கண்டறிவது இக்காலகட்டத்திலும் சவால் நிறைந்ததாக உள்ளது. இந்த நிலைமையை மாற்றுவதற்காகவும் மக்களுக்கு எளிய முறையில் இயற்கை மருத்துவம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள முத்துப்பட்டியில் தொடங்கப்பட்டதே முத்துப்பட்டி அன்னை நலவாழ்வு இல்லம்.

இன்றைய நாளில் இயற்கை மருத்துவம் பற்றியும் அன்னை நலவாழ்வு இல்லத்தின் செயல்பாடுகள் பற்றியும் நமக்கு ஏடுத்துரைப்பவர் மருத்துவர் அருள்சகோதரி லடிஸ்கா ரோஸ்லின். மரியின் ஊழியர் சபையைச் சார்ந்த அருள்சகோதரி லடிஸ்கா ரோஸ்லின் அவர்கள், சித்தமருத்துவராகப் பயிற்சி பெற்று கடந்த பத்து ஆண்டுகளாக முத்துப்பட்டி அன்னை நலவாழ்வு இல்லத்தில் சிறந்த முறையில் பணியாற்றி வருகின்றார்.

இயற்கை மருத்துவத்தின் இனிமை - மருத்துவர் அருள்சகோதரி லடிஸ்கா ரோஸ்லின் ம. ஊ. ச

நல்ல ஆரோக்கியம் என்பது மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையைப் பொறுத்தது. ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் வழியாக உடல் தன்னைத்தானே குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைவது இயற்கை மருத்துவம். இத்தகைய சிறப்பு மிக்க இயற்கை மருத்துவத்தின் நலனை மேன்மையை உணர்ந்து, வாழ்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2023, 12:19