கடவுள், தன் மக்கள் அடிமைகளாக நடத்தப்படுவதை விரும்புவதில்லை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"கடவுள் தம்முடைய பிள்ளைகள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார் என்றும் அவர்கள் ஒடுக்கப்படவோ அல்லது அடிமைகளாக நடத்தப்படவோ கூடாது என்றும் தனது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது ஹைட்டியின் Port-au-Prince உயர் மறைமாவட்டம்.
ஏப்ரல் 13, வியாழனன்று, ஹைட்டியிலுள்ள புனித பார்த்தலோமேயோ ஆலயத்தில் பேராயர் Max Leroy Mesidor அவர்களால் நிறைவேற்றப்பட்ட திருப்பலியின் முடிவில், ஆயுதமேந்தியவர்கள் ஆலயத்திற்குள் நுழைந்து, பலரைக் கடத்திச் சென்றதுடன், மேலும் சிலரை காயப்படுத்தியுள்ள வேளை இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடத்தல் செயல், ஒரு புனிதமான வழிபாட்டுத் தலத்தின் ஒருமைப்பாடு மற்றும் நாட்டில் உள்ள மக்களின் நடமாட்ட சுதந்திரம் ஆகிய இரண்டையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள அவ்வறிக்கை, அரசு அதிகாரிகள் உயிர்கள் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், கடத்தல் தொழிலை நடத்துபவர்கள் மற்றும் அதன் வழியாக இலாபம் ஈட்டுபவர்கள் மீது வழக்குத் தொடுத்து அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது
திருத்தத்தை பிரான்சிஸ் அவர்கள், தனது உயிர்ப்பு விழா ஊர்பி எத் ஓர்பி செய்தியில் குறிப்பிட்டுள்ள பல நாடுகளில் ஹைட்டியும் ஒன்று என்றும், அரசியல், சமூக, மற்றும் மனிதாபிமான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்நாட்டைப் பாதிக்கும் பல பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வைக் காண அனைத்துலகச் சமுதாயம் சமூகம் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் Save the Children என்ற மனிதாபிமான உதவி அமைப்பானது, ஹைட்டியின் 50 விழுக்காடு குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
கும்பல் வன்முறை, அரசியல் உறுதியின்மை, அதிகரித்து வரும் பணவீக்கம் ஆகியவற்றால் நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது என்றும், அண்மைய புள்ளிவிபரங்கள் படி, 50 இலட்ச மக்கள் (இவர்களில் 19 இலட்சம் பேர் குழந்தைகள்) உணவுப் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர் என்றும் மேலும் அவ்வறிக்கை எடுத்துக்காட்டியது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்