தேடுதல்

ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் கிறிஸ்தவர்கள்   (ANSA)

கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் அரசால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடகாவில் பா.ஜா.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கர்நாடக மாநில பா.ஜா.க. அரசின் பாகுபாட்டுக் கொள்கைகளாலும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு நடவடிக்கைகளாலும் அம்மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கவலையை வெளியிட்டார் பெங்களூருவின் கத்தோலிக்க தலைவர் வேளாங்கண்ணி பால்ராஜ்.

2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடகாவில் பா.ஜா.க. கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறுபான்மையினருக்கு எதிரான, குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், கடந்த ஆண்டு, அதாவது 2022ஆம் ஆண்டு மே மாதம் நடைமுறைக்குவந்த மதமாற்ற தடைச் சட்டமும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான, குறிப்பாக பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு உதவியுள்ளன என்றார் ராஜ்.

எவ்வித சட்டவிரோத நடவடிக்கைகளிலோ, வன்முறைகளிலோ ஈடுபடாமல் நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஈடுபடும் கத்தோலிக்க தலத்திருஅவையை, மதமாற்றத் தடைச்சட்டம் வழியாக அரசு தண்டித்து வருவதாக மேலும் கூறினார் ராஜ்.

மக்களை மதம் மாற்றியதற்காக கிறிஸ்தவர்களை தாக்கவேண்டும் எனவும், அவ்வாறு தாக்குபவர்களை சட்டத்திலிருந்து தான் காப்பதாகவும் கூறிய கர்நாடக அமைச்சர் முனிரத்தின நாயுடு அவர்களின் கூற்றையும் ராஜ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைப் போக்கைக் கடைப்பிடித்துவரும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இந்த அமைச்சரின் பேச்சு என்றார் பங்களூரு உயர் மறைமாவட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி காந்தராஜ்.

6 கோடியே 10 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட கர்நாடகாவில் 1.87 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள்.

கர்நாடக வாக்காளர் பட்டியலில் 13 விழுக்காட்டினராக இருக்கும் சிறுபான்மையினர் மனது வைத்தால், மாநிலத்தில் வெறுப்புணர்வற்ற, பாகுபாடுகளைச் செயல்படுத்தாத நல்லாட்சியைக் கொண்டுவரலாம் என கருத்துத் தெரிவித்துள்ளனர் அம்மாநிலக் கிறிஸ்தவத் தலைவர்கள்.

கர்நாடகத்தில் 224 சட்டமன்றப் பிரதிநிதிகளுக்கான தேர்தல் மே மாதம் 10ஆம் தேதி இடம்பெற்று 13ஆம் தேதி வாக்குப் பதிவுகள் எண்ணப்படும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 April 2023, 14:51