தேடுதல்

கிபயோன் நிலப்பகுதி கிபயோன் நிலப்பகுதி 

தடம் தந்த தகைமை - ஏமாற்றிய கிபயோனியரை மன்னித்தல்

யோசுவா கிபயோனியரை அழைத்து, “நீங்கள் எங்களுக்கு மிக அருகில் வாழ்கின்றீர்களே! பின்னர், நாங்கள் உங்களிடமிருந்து வெகு தொலையில் வாழ்பவர்கள் என்று கூறி எங்களை ஏன் ஏமாற்றினீர்கள்? ” எனக் கேட்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இஸ்ராயேலின் சபைத் தலைவர்கள் கிபயோனியருடன் உடன்படிக்கை செய்துகொண்ட மூன்றாம் நாள் இஸ்ரயேல் மக்கள், அவர்கள் தங்களுக்கு அருகில் உள்ளவர்கள் என்றும், அடுத்து வாழ்பவர்கள் என்றும் கேள்வியுற்றனர். இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு, மூன்றாம் நாள் அவர்கள் நகருக்கு வந்தனர். கிபயோன், கெபிரா, பெயரோத்து, கிரியத்து எயாரிம் ஆகியவையே அந்நகர்கள். இஸ்ரயேல் மக்கள் அவர்களைக் கொல்லவில்லை. ஏனெனில், சபையின் தலைவர்கள் அவர்களுக்கு இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் ஆணையிட்டு வாக்களித்திருந்தார்கள். சபை முழுவதும் தலைவர்களுக்கு எதிராக முணுமுணுத்தது. எல்லாத் தலைவர்களும் சபையின் அனைவரிடமும், “அவர்களுக்கு இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயரால் வாக்குறுதி அளித்துவிட்டோம். இப்பொழுது நாங்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. நாம் இவ்வாறு செய்வோம்: அவர்களை வாழ விடுவோம். நாம் அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் குறித்து ஆண்டவரின் சினம் நம்மீது விழாமலிருக்கும்” என்றனர்.

யோசுவா அவர்களை அழைத்து, “நீங்கள் எங்களுக்கு மிக அருகில் வாழ்கின்றீர்களே! பின்னர், “நாங்கள் உங்களிடமிருந்து வெகு தொலையில் வாழ்பவர்கள்” என்று கூறி எங்களை ஏன் ஏமாற்றினீர்கள்? நீங்கள் இப்போது சபிக்கப்பட்டவர்கள். உங்கள் அடிமைத்தனம் நீங்காது. மரம் வெட்டுபவர்களாகவும் என் கடவுளின் இல்லத்திற்குத் தண்ணீர் எடுப்பவர்களாகவும் இருப்பீர்கள்” என்றார். அவர்கள் யோசுவாவிற்கு மறுமொழியாக, “உங்கள் கடவுளாகிய ஆண்டவர், தம் ஊழியர் மோசேக்கு எல்லா நாட்டையும் உங்களுக்குக் கொடுக்கவும், உங்கள் முன்னிலையில் நாட்டில் வாழ்பவர்கள் அனைவரையும் அழிக்கவும் கட்டளையிட்டார் என்று உங்கள் பணியாளர்களுக்குக் கூறப்பட்டது. ஆகவே, நாங்கள் மிகவும் அஞ்சி இவ்வாறு செய்தோம். இப்பொழுது இதோ! நாங்கள் உங்கள் கையில் உள்ளோம். எது நல்லதும் நீதியும் ஆனதோ அதைச் செய்யுங்கள்” என்றனர். அவர் அவர்களுக்குச் செய்தது; அவர் இஸ்ரயேல் மக்களின் கைகளினின்று அவர்களை விடுவித்தார். இஸ்ரயேல் மக்கள் அவர்களைக் கொல்லவில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 April 2023, 13:31