தேடுதல்

நீதித்தலைவியான தெபோரா நீதித்தலைவியான தெபோரா  

தடம் தந்த தகைமை - தெபோராவும் பாராக்கும்

இஸ்ரயேலருக்கு இறைவாக்கினரும் இலப்பிதோத்தின் மனைவியுமான தெபோரா நீதித் தலைவியாக இருந்தார். தீர்ப்புப் பெறுதற்காக இஸ்ரயேலர் அவரிடம் செல்வர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஏகூது இறந்தபின், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை மீண்டும் செய்தனர். ஆட்சோரை ஆண்ட கானானிய மன்னன் யாபினிடம் ஆண்டவர் அவர்களை ஒப்படைத்தார். அவனுடைய படைத்தலைவன் சீசரா அரோசத்கோயிமில் வாழ்ந்து வந்தான். இஸ்ரயேலர் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். ஏனெனில், அவனிடம் தொள்ளாயிரம் இரும்புத் தேர்கள் இருந்தன. அவன் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலரைக் கடுமையாக ஒடுக்கினான்.

அச்சமயத்தில் இஸ்ரயேலருக்கு இறைவாக்கினரும் இலப்பிதோத்தின் மனைவியுமான தெபோரா நீதித் தலைவியாக இருந்தார். அவர் எப்ராயிம் மலைநாட்டில் இராமாவுக்கும் பெத்தேலுக்கும் இடையில் “தெபோராப் பேரீச்சை” என்ற மரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். தீர்ப்புப் பெறுதற்காக இஸ்ரயேலர் அவரிடம் செல்வர். நப்தலியில் இருந்த கெதேசில் வாழ்ந்த அபினொவாமின் மகன் பாராக்கை அவர் ஆளனுப்பிக் கூப்பிட்டார். அவர் அவரிடம், “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உமக்குக் கட்டளையிடுகிறார்; நீர் போய் நப்தலி, செபுலோன் மக்களைத் தாபோர் மலையில் ஒன்று கூட்டி அவர்களிலிருந்து பத்தாயிரம் பேரைச் சேர்த்துக்கொள்ளும். யாபினின் படைத்தலைவன் சீசராவையம் அவன் தேர்களையும் படையையும் கீசோன் ஆற்றின் அருகே இழுத்து வந்து உம் கையில் கொடுப்பேன்” என்றார். பாராக்கு அவரிடம், “நீர் என்னுடன் வந்தால் நான் செல்வேன். நீர் என்னுடன் வராவிடில் நான் செல்லமாட்டேன்” என்றார். அவர் அவரிடம், “நான் உம்முடன் உறுதியாக வருவேன். ஆயினும், நீர் செல்லும் வழி உமக்குப் பெருமை தராது. ஏனெனில், ஆண்டவர் ஒரு பெண்ணிடம் சீசராவை ஒப்படைப்பார்” என்றார். பின்பு, தெபோரா எழுந்து பாராக்குடன் கெதேசு நோக்கிச் சென்றார். பாராக்கு செபுலோனையும் நப்தலியையும் கெதேசில் ஒன்று கூட்டினார். பத்தாயிரம் பேர் அவர்பின் அணிவகுத்துச் சென்றனர். தெபோராவும் அவருடன் சென்றார்.

கேனியரான எபேர், மோசேயின் மாமனார் ஒபாபின் மக்களான கேனியரிடமிருந்து பிரிந்து, வாழ்ந்து வந்தார். அவர் கெதேசுக்கு அருகில் சானானிமிலிருந்த கருவாலி மரத்திற்கு அருகில் தம் கூடாரத்தை அமைத்திருந்தார். அபினோவாமின் மகன் பாராக்கு தாபோர் மலைமீது ஏறிவிட்டதைச் சீசராவுக்கு அறிவித்தனர். சீசரா தன்னிடமிருந்த மொத்தம் தொள்ளாயிரம் இரும்புத்தேர்களையும், தன்னுடன் இருந்த மக்கள் எல்லாரையும் அரோசத்கோயிமிலிருந்து கீசோன் ஆற்றின் அருகே ஒன்று திரட்டினான். தெபோரா பாராக்கிடம், “எழுந்திரும்; இந்நாளில் ஆண்டவர் சீசராவை உம்மிடம் ஒப்படைப்பார். ஆண்டவர் உம்முன் செல்லவில்லையா?” என்றார். பாராக்கு தாபோர் மலையிலிருந்து இறங்கினார். பத்தாயிரம் பேர் அவரைப் பின்தொடர்ந்தனர். ஆண்டவர் சீசராவையும் அவனுடைய தேர்கள் அனைத்தையும் படை முழுவதையும் வாள் முனையில் பாராக்கின் முன்னால் சிதறடித்தார். சீசரா தன் தேரிலிருந்து இறங்கித் தப்பி ஓடினான். பாராக்கு தேர்களையும், படையையும் அரோசத்கோயிம் வரை துரத்தினார். சீசராவின் படை முழுவதும் வாள்முனைக்கு இரையாயிற்று. ஒருவர்கூட தப்பவில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 April 2023, 14:01