விவிலியத் தேடல்: திருப்பாடல் 37-12 நெருக்கடியில் காக்கும் கடவுள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘சான்று பகரும் சான்றோர்!’ என்ற தலைப்பில் 37-வது திருப்பாடலில் 37 முதல் 38 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 39 முதல் 40 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொண்டு வருவோம். இப்போது இறைபிரசன்னத்தில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே. ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார் (வசங்கள் 39-40)
சீனாவில் ஹூஹான் என்றொரு நகரம் உண்டு. இங்கே சீற்றத்துக்குப் பேர் போன மஞ்சளாறு சுழித்துக்கொண்டு ஓடும். நமது ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது போல, ஆண்டுக்கு ஒருமுறை இந்த ஆற்றில் இளைஞர்கள் குதித்து ஆற்றின் போக்கை எதிர்த்து எதிர்நீச்சல் போடுவது வீர மரபாக அங்கே பின்பற்றப்பட்டு வருகிறது. 1966-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16-ஆம் நாள், சீன மக்கள் குடியரசின் தலைவர் மாவோ அவர்கள், ஹூஹான் நகருக்கு வருகை தந்தார். மஞ்சளாற்றுப் பகுதிக்கு வந்து அந்த எதிர்நீச்சல் திருவிழாவைத் தொடங்கி வைத்தவர், திடீரென தானும் ஆற்றில் குதித்தார். அப்போது, சீறிக்கொண்டு வந்த நீரோட்டத்தில் மாவோவும் எதிர்நீச்சல் போட ஆரம்பிக்க, வேறு வழியின்றி அவரது பாதுகாவலர்களும் நீரில் குதித்து, கரையேறச் சொல்லி அவரை வற்புறுத்தினார்கள். ஆனால், மாவோவோ, மற்ற சீன இளைஞர்களுக்குப் போட்டியாக ஏறத்தாழ பதினைந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு நீந்தினார். அப்போது அவரது வயது 73 என்பது குறிப்பிடத்தக்கது.
உடனே உலகம் முழுக்க மாவோவின் இந்த எதிர்நீச்சல் பற்றிய செய்தி பரவத் தொடங்கியது. இந்தச் சாதனையை தன் அரசியலுக்கும் அவர் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. அப்போது அவர்மீது சுமத்தப்பட்டிருந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்தச் சாதனை எதிர்நீச்சலின் காரணமாகத் தவிடு பொடியானது. கடுமையான அரசியல் நெருக்கடி நேரத்தில் எல்லாம் ‘நீச்சல்’தான் மாவோவைக் கரையேற்றியது என்றே சொல்லவேண்டும். “சிறுவயதிலேயே என்னுடைய அப்பா எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தார் என்றும், நீந்தும்போதுதான் எப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு காணக்கூடிய சிந்தனைகள் எனக்கு ஏற்படுகிறது” என்றும் கூறினார் மாவோ. அவருடைய புரட்சிகர சிந்தனைகளில் பெரும் பகுதி, அவருடைய நீச்சலின்போது தோன்றியவையே. அவருடைய இறுதிக் காலத்தில், “மாவோவின் அத்தியாயம் முடிந்தது. இனி அவரால் நடக்கக்கூட முடியாது” என்று மேற்கத்திய ஊடகங்கள் எழுதிக் கொண்டிருந்தன. அப்போது, எழுந்து நடமாடியதோடு மட்டுமன்றி, அதே மஞ்சளாற்றை இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திக் கடந்து சீன மக்களுக்கு தன்னுடைய மன வலிமையைப் பறைசாற்றினார் மாவோ. தனது 82-வது வயதில் இத்தகைய அரிய சாதனையை அவர் நிகழ்த்தினார். உலகின் மகத்தான தலைவர்கள் அனைவருக்குமே இந்த ‘Never Ever Give Up’ என்கிற மனோபாவம் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் எத்தகைய நெருக்கடியும் தங்களைச் சாய்த்து விடாமலும், வெற்றி தோல்வியைக் கருத்தில் கொள்ளாமலும் எதிர்த்து நின்று போராடுவார்கள். ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா, பிடல் காஸ்ட்ரோ, காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, பெரியார் போன்ற எல்லாத் தலைவர்களுமே நெருக்கடி வேளைகளில் மாபெரும் வெற்றியை கைகொண்டவர்கள்தாம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
நெருக்கடியான வேளையில் நேர்மையாளர்களுக்கு ஆண்டவர் வலிமையைத் தருவதுடன், துணையாய் இருந்து பொல்லாரிடமிருந்து அவர்களை மீட்கின்றார் என்பதை தாவீது அரசர் மிகவும் சுருக்கமாக எடுத்துரைக்கின்றார். இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் நெருக்கடிகளைச் சந்திக்காமல் இருக்கவே முடியாது என்பது திண்ணம். இந்த நெருக்கடிகளைத் தாவீது அதிகமாகவே சந்தித்தார் என்றுதான் சொல்ல வேண்டும் கோலியாத்தை கொன்று இஸ்ரயேல் மக்களைக் காப்பாற்றுவதில் அவருக்கு நெருக்கடி இருந்தது. பின்னர் சவுல் அரசர் தன்மீது பொறாமையும் காழ்ப்புணர்வும் கொண்டு தன்னைக் கொல்லத் தேடியபோது, அவரிடமிருந்து தப்பிப்பதில் மிகப்பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தார். தனது போர்த்தளபதி உரியாவைக் கொன்று அவரது மனைவி பத்சபாவைத் தனதாக்கிக் கொண்டபோது கடவுளின் தண்டனைக்குத் தப்ப முடியாமல் நெருக்கடிகளை மேற்கொண்டார். தனக்கும் பதசபாவுக்கும் பிறந்த முதல் குழந்தை நோயில் சிக்குண்டு இறந்தபோது நெருக்கடிகளைச் சந்தித்தார். தனது மகன் அப்சலோம் தனக்கு எதிராக எழுந்து ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தபோதும், அதன் காரணமாக, அவன் கொடிய மரணத்தைச் சந்தித்தபோதும் நெருக்கடிகளைச் சந்தித்தார். இப்படி அவரது வாழ்வில் அவர் சந்தித்த நெருக்கடிகள் ஏராளம். ஆனால், தான் சந்தித்த அத்தனை நெருக்கடிகளிலும் அவர் ஆண்டவரைத் தனது உரிமைச் சொத்தெனப் பற்றிக்கொண்டார். தானொரு அரசர், தனக்கு எதையும் செய்வதற்கு உரிமையுண்டு, என்னை யார் கேள்விகேட்க முடியும் என்றெல்லாம் தலைகனத்தில் ஆடாமல், ஆண்டவரிடத்தில் அவர் பணிவுடன் நடந்துகொண்டார். குறிப்பாக, தான் பாவத்தில் வீழ்ந்தபோது, நெற்றிக்கண் பட்டாலும் குற்றம் குற்றமே என்று இறைவாக்கினர் நாத்தான் அவரின் பாவச் செயலை இடித்துரைத்த வேளை, மனத்தாழ்மையுடன் அதனை ஏற்றுக்கொண்டு, கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப் படுத்தியருளும்; ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். (திபா 51:1-4a) என்று மனம்வெதும்பி அழுது மன்னிப்பு வேண்டினார்.
நெருக்கடிகள் என்பது பாவியான மனிதருக்கு மட்டுமல்ல, புனித நிலையில் வாழும் மாந்தருக்கும் ஏற்படும் என்பதையும் நாம் காண முடிகின்றது. கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்கு உரைத்த மங்கள வார்த்தையின்போது அவர் கலக்கமுற்றார் என்று பார்க்கின்றோம். “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” (காண்க லூக் 1:34) என்ற அவரின் வார்த்தைகள் அவர் நெருக்கடிக்கு ஆளானார் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. ஆனாலும், கடவுள் வழிநடத்துவார் என்ற ஆழமான நம்பிக்கையில், அந்த நெருக்கடியைச் துணிவுடன் சந்திக்கும் விதமாக, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” (காண்க லூக் 1:38). என்றுரைக்கின்றார். அவ்வாறே, யோசேப்பும் மரியாவைக் காட்டிக்கொடுப்பதா, விலக்கிவிடுவதா, அல்லது விலகி நிற்பதா என்ற மனப்போராட்டங்கள் நிறைந்த நெருக்கடிநிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனாலும், மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டபோதுதான் (காண்க மத் 1:18-20) வானதூதர் வழிவந்த கடவுளின் வார்த்தையை நம்பி, அவர் மரியாவை ஏற்றுக்கொள்வதைப் பார்க்கின்றோம்.
நமதாண்டவர் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால், அவர் இறைத்தந்தைக்குப் பிரமாணிக்கமாக இருந்து செயல்பட்டதால் அலகை கொடுத்த மூன்று சோதனைகளிலும் ஏற்பட்ட நெருக்கடிகளின்போது வெற்றிப்பெறுகின்றார் (காண்க லூக் 4:1-11) அவ்வாறே, கெத்சமனித் தோட்டத்தில் இயேசு இறைவேண்டலில் ஈடுபட்டிருந்தபோது மிகப்பெரும் நெருக்கடிக்கு ஆளாகின்றார். ஆனாலும், “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும், என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்” (காண்க மத் 26:39) என்று முழுவதுமாகத் தந்தையிடம் சரணடைந்ததால் சாவை வென்று வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார்.
நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம். இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம். (காண்க 2 கோரி 4:8-11) என்று புனித பவுலடியார் தனக்கும் தனது நண்பர்களான ஏனைய திருத்தூதர்களுக்கும் ஏற்பட்ட நெருக்கடிகளைப் பாட்டியலிடுகின்றார். ஆக, தாவீது கூறுவதுபோன்று நெருக்கடிகளின் வேளையில் ஆண்டவர் வலிமையும் துணையும், அரணுமாய் இருப்பதைப் பார்க்கின்றோம்.
ஆகவே, எனது வாழ்வில் நான் நெருக்கடிகளைச் சந்திக்கும்போதெல்லாம் நான் எப்படிப்பட்ட மனநிலையில் நடந்துகொள்கிறேன் என்பதை ஆன்ம பரிசோதனை செய்வோம். மேலும், அத்தகைய தருணங்களில் எல்லாம் நான் கடவுளிடம் மட்டுமே சரணடைந்தேனா? அவரை மட்டுமே நம்பி இருந்தேனா? அவருக்கு முழுதுமாகப் பிரமாணிக்கமாக இருந்தேனா? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவோம். நெருக்கடிகளின்போது ஆண்டவரின் துணைகொண்டு நாம் எடுக்கின்ற சரியான முடிவுதான் நம்மை நீடித்த மகிழ்ச்சியில் நிலைபெறச் செய்யும் என்பதை உணர்வோம். இத்தகைய நிலையில் வாழ்வதற்கான இறையருளை இந்நாளில் இறைவனிடம் இறைஞ்சுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்