தேடுதல்

போராட்டத்தில் இந்திய கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் இந்திய கிறிஸ்தவர்கள்  (AFP or licensors)

கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுக்க வலியுறுத்தல்

நீண்ட கால தடுப்புக்காவலுக்குப் பிறகு இறந்த இயேசுசபை அருள்பணியாளர் ஸ்டேன் சுவாமியின் வழக்கு, "கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பை" வெளிப்படுத்தும் நீதிபதியை சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமித்தது ஆகியவற்றை உள்ளடக்கிய கடிதம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நாடு முழுவதும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு 93 முன்னாள் இந்திய அதிகாரிகள் குழு, பிரதமர் நரேந்திர மோடிக்கு கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.  

அரசியலமைப்பின் நடப்புக் குழுவானது, நிர்வாகம், சட்டம் போன்றவற்றில் கிறிஸ்தவர்கள் பாரபட்ச முறையில் நடத்தப்படுவதை கண்டித்து சமமான முறையில் நடத்தப்பட உறுதியளிக்குமாறு பிரதமர் மோடியை வலியுறுத்தி எழுதப்பட்டுள்ள அக்கடிதமானது, டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் மற்றும் முன்னாள் வெளியுறவு செயலர் சுஜாதா சிங் ஆகியோரும் கையெழுத்திட்டு அனுப்பப்பட்டுள்ளது.

"இந்தியாவின் மக்கள்தொகையில் 2.3 விழுக்காடு கிறிஸ்தவர்கள் உள்ளனர், இந்த விழுக்காடு 1951 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் இருந்தது போல
ஏறக்குறைய அதே நிலையில் இருப்பதாகவும், “இருப்பினும் இந்த சிறிய எண், 80 விழுக்காடு உள்ள இந்து மக்கள் சிலரின் மனத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டாய மதமாற்றத்தின் பொய்யான குற்றச்சாட்டுகள், கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்களுக்கு எதிரான வாய்மொழி, உடல் மற்றும் உளவியல் வன்முறைகளுக்குக் காரணமாக அமைகின்றன என்றும், சத்தீஸ்கர், அசாம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் வாழும், "பழங்குடியினர் மற்றும் தலித் கிறிஸ்தவர்களின் ஆலயங்கள், வீடுகள், கல்லறைகள், கல்வி மற்றும் சுகாதார நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளதையும் அக்கடிதம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய நாட்டின் பிரதமர் என்ற முறையிலும், பாஜகவின் முன்னணி உறுப்பினர் என்ற வகையிலும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினர் உட்பட அனைத்து மக்களும் பாதுகாக்கப்பட, இந்த மூர்க்கத்தனமான செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்குமாறும், காவல்துறையும் மற்ற அதிகாரிகளும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“பாஜக, மத்திய அரசு மற்றும் ஒவ்வொரு மாநில அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களின் ஒரு வார்த்தையின் வழியாக அனைத்து வன்முறைகளையும் உடனடியாக நிறுத்த முடியும் என்றும், முன்னாள் அரசு ஊழியர்களாகிய தாங்கள், வன்முறைகளுக்கு எதிரான மௌனம் அதிக வன்முறையையே தூண்டும் என்பதை அறிவோம் என்றும் அக்கடிதத்தில் எடுத்துரைத்துள்ளனர் முன்னாள் அரசு அதிகாரிகள்.

அனைத்து இந்தியர்களைப் போலவே கிறிஸ்தவர்களும், நிர்வாகம் மற்றும் சட்டத்தின் முன் சமமான மற்றும் பக்கச்சார்பற்ற முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர் முன்னாள் தலைவர்கள்.

நீண்ட கால தடுப்புக்காவலுக்குப் பிறகு இறந்த இயேசுசபை அருள்பணியாளர் ஸ்டேன் சுவாமியின் வழக்கு, "கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பை" வெளிப்படுத்தும் நீதிபதியை சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமித்தது ஆகியவற்றை உள்ளடக்கியதாக அக்கடிதம் உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2023, 13:55