தேடுதல்

புனித பேட்ரிக் புனித பேட்ரிக்  (© Diocesi di Bergamo)

நவீனகாலத் துறவியான புனித பேட்ரிக்

புனித ஜோசப்பின் பகிதாவுடன் சேர்ந்து, இன்று உலகில் மனித கடத்தலுக்கு ஆளானவர்களுக்கு பாதுகாவலராக புனித பேட்ரிக் திகழ்கின்றார். - பேராயர் Eamon Martin.

மெரினா ராஜ் - வத்திக்கான்  

செயிண்ட் பேட்ரிக் நவீன காலத்திற்கு ஒரு துறவி என்று தான் உண்மையாகவே நினைப்பதாகவும், இளம் வயதிலேயே நாடு கடத்தப்பட்டு மனித கடத்தலுக்கு பலியாகியதால், துன்பப்படுபவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் சுரண்டப்பட்ட மக்களின் உணர்வுகளை அறிந்தவர் என்றும் கூறியுள்ளார் பேராயர் Eamon Martin

மார்ச் 17 வெள்ளிக்கிழமை அயர்லாந்தின் பாதுகாவலாரான புனித பேட்ரிக் திருநாளை திருஅவை சிறப்பித்து மகிழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், அப்புனிதரைப் பற்றி வத்திக்கான் செய்திகளுக்கு அளித்துள்ள நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ளார் அயர்லாந்து ஆயர் பேரவையின் தலைவரும் அர்மாக் பேராயருமான  Eamon Martin.

Armagh இல் தலத்திருவை உருவாக அடித்தளமிட்ட புனிதர் பேட்ரிக் ஆயராக அயர்லாந்திற்குத் திரும்பியபோது, புதிதாக மாற்றப்பட்ட கிறிஸ்தவர்களைக் கடத்துவதற்கு எதிராக் குரல் கொடுத்தவர் என்றும், புனித ஜோசப்பின் பகிதாவுடன் சேர்ந்து, இன்று உலகில் மனித கடத்தலுக்கு ஆளானவர்களுக்கு பாதுகாவலராக இருக்கிறார் என்றும் கூறியுள்ளார் பேராயர் Eamon.

நவீன உலகின் இக்கட்டான நிலையைப் பற்றிய அனுதாபமும் புரிதலும் கொண்ட ஒருவராகப் புனிதர் பேட்ரிக்கைக் காண்பதாகவும், நவீன உலகத்தின்  துறவியாகவும், முழு உலகிற்கும் ஒரு புனிதராக திகழும் புனித பேட்ரிக் திருநாளினை விழிப்புணர்வு நடைபயணம், நற்கருணை வழிபாடு, போன்றவற்றின் வழியாகக் கொண்டாடி மகிழ்வதாகவும் கூறியுள்ளார் பேராயர் Eamon.  

திருத்தூதர் யாக்கோபிற்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் அர்ப்பணிக்கப்பட்ட பேராலயங்கள் கொண்டவரும் திருநாள்கள் கொண்டாடப்படுபவரும் புனித பேட்ரிக்குக்கே என்று கூறி மகிழ்ந்த பேராயர் Eamon  தன் ஆசீரையும் வத்திக்கான் செய்திகள் வழியாக மக்களுக்கு வழங்கி உள்ளார் .

மேலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைத்துவத்தின் பத்தாண்டுகளைக் கொண்டாடும் இந்த வாரத்தில் தான் மிகவும் விழிப்புடன், மகிழ்வுடன் இருப்பதாகக்  கூறிய பேராயர் Eamon, ஏழைகள், புலம்பெயர்ந்தோர், கடத்தப்பட்டவர்கள், போர் மற்றும் வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள், மற்றும் பூமியின் அழுகைக்கு நாம் அனைவரும் செவிசாய்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 March 2023, 13:27