தேடுதல்

வழிப்பாட்டில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் வழிப்பாட்டில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்   (ANSA)

பாகிஸ்தானில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கிறிஸ்தவர்

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட Humayun Allahrakha-க்கு இப்போதும் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவர் பாதுகாப்பான இடத்தில தங்கவைக்கப்பட்டுள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பாகிஸ்தானில் ஏறத்தாழ எட்டு ஆண்டுகளாக தெய்வநிந்தனை சட்டத்தின் பேரில் சிறையில் வாடிய கிறிஸ்தவர் Humayun Allahrakha  என்பவர் லாகூர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது 32 வயதான Allahrakha, 2015-ஆம் ஆண்டு மே மாதம், இலாகூர் மாவட்டத்தில் உள்ள சண்டா என்ற நகரத்தில் செய்தித்தாளை எரித்துக் கொண்டிருந்தார், இதனைக் கண்ட இஸ்லாமியர் சிலர், அதில் திருக்குர்ஆன் வசனங்கள் இருப்பதாகக் கூறி, அவர்மீது அவதூறாகக் குற்றம் சாட்டியதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து உள்ளூர் புனித யோசேப்பு கத்தோலிக்க ஆலயம்  உட்பட கிறிஸ்தவ வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்லாமியக் கும்பல். இதனால் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பி ஓடினர் என்பது நினைவு கூரத்தக்கது.

தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் அமைப்பிடம், இதுகுறித்து கருத்துத் தெரிவித்த நீதி மற்றும் அமைதிக்கான தேசிய ஆணையத்தின் இயக்குநர் அருள்பணியாளர் Emmanuel 'Mani' Yousaf, இதுபோன்ற சூழ்நிலைகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவுவது வாழ்வா சாவா போராட்டம் போன்றது என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கத்தோலிக்கரால் நடத்தப்படும் வழக்கறிஞர் அமைப்பான நீதி மற்றும் அமைதிக்கான தேசிய ஆணையம் (NCJP), Allahrakha  குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க போராடியது. இறுதியாக இலாகூர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இப்போதும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவர் பாதுகாப்பான இடத்தில தங்கவைக்கப்பட்டுள்ளார். (ASIAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 March 2023, 13:40