தேடுதல்

2021.ஆம் ஆண்டு தாக்கப்பட்ட மியான்மர் ஆலயம் 2021.ஆம் ஆண்டு தாக்கப்பட்ட மியான்மர் ஆலயம்  

மியான்மாரில் தாக்கப்பட்ட புனித வியாகுல அன்னை ஆலயம்

மியான்மாரிலுள்ள கயா மற்றும் ஷான் மாநிலங்களிலுள்ள கத்தோலிக்கர்கள் உட்பட 1,50,000-க்கும் அதிகமான பொதுமக்கள் வழிபாட்டுத்தலங்கள், முகாம்கள் மற்றும் காடுகளில் புகலிடம் தேடுகின்றனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மியான்மாரின் தலத்திருஅவைத் தலைவர்கள் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்காக Hague மாநாடுகளை எடுத்துக்காட்டி அழைப்புவிடுத்த போதிலும், பிப்ரவரி 4, சனிக்கிழமையன்று, மற்றொரு ஆலயம் அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் கயா மாநிலத்திலுள்ள ஹவாரிகு என்ற கிராமத்திற்கு அருகே, இராணுவத்திற்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து Pekhon  மறைமாவட்டத்தில் உள்ள புனித வியாகுல அன்னையின் ஆலயத்தின்மீது இரண்டு பீரங்கி குண்டுகள் விழுந்தன என்று அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலின்போது, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், ஆனால் ஆலயத்தின் உள்கூரையும் கூரையின் மேல்பக்கமும் சேதமடைந்துள்ளன என்றும் தெரிவிக்கும் இச்செய்தி நிறுவனம், இச்சம்வத்தின்போது ஏறத்தாழ 10 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

கயா மற்றும் ஷான் மாநிலங்களின் எல்லையில் இராணுவத்தின் இந்தக் கண்மூடித்தனமான தாக்குதல்களைத் தொடர்ந்து அப்பங்கைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹவாரிகு பங்குத்தளம் தெற்கு ஷான் மற்றும் கயா மாநிலங்களை உள்ளடக்கி உள்ளது.

Pekhon மறைமாவட்டம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் ஒன்றாகும்.  இங்கு ஏறத்தாழ 10 கத்தோலிக்க வழிபாட்டுத்தலங்கள் இராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளன. இம்மறைமாவட்டத்தில் ஏறக்குறைய ஆறு வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ளன. அதேவளையில், இங்குள்ள திருஇருதய ஆண்டவர் ஆலயம் உள்பட பல்வேறு ஆலயங்கள் பலமுறை தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், கயா மற்றும் ஷான் மாநிலங்களில் உள்ள கத்தோலிக்கர்கள் உட்பட 1,50,000-க்கும் அதிகமான பொதுமக்கள் வழிபாட்டுத்தலங்கள், தற்காலிக முகாம்கள் மற்றும் காடுகளில் புகலிடம் தேடவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று இவர்களுக்கு உதவி வரும் குழுக்கள் தெரிவிப்பதாகவும் இச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கின்றது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2023, 14:49