கேள்விக்குறியாகும் சிரியா குழந்தைகளின் எதிர்காலம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்டுள்ள நில நடுக்கத்தால் ஏராளமான குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்றும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதே தங்களது முதல் வேலை என்றும் கூறியுள்ளார் யுனிசெப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் Catherine Russell
பிப்ரவரி 6ஆம் தேதி திங்கள் கிழமை அதிகாலை சிரியா மற்றும் துருக்கி பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வரும் யுனிசெப் அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் பற்றிக் கூறுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் Russell.
"சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் மனதை உறைய வைக்கின்றன என்றும் அதிகாலையில் பல குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்த போது ஏற்படத் தொடங்கிய இந்நிலநடுக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த Catherine Russell, பள்ளிகள், மருத்துவமனைகள் நிலநடுக்கத்தால் சேதமடைந்தும் அழிக்கப்பட்டும் உள்ளதால் இது குழந்தைகளின் எதிர்காலத்தை மேலும் பாதிக்கும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
உலகின் மிக சிக்கலான மனிதாபிமான சூழ்நிலைகளில் ஒன்றை சிரியாவில் குழந்தைகள் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர் என்றும் மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி, மோதல்களுக்குப் பிறகு உள்ளூர் மயமாக்கப்பட்ட குற்றங்கள், இடப்பெயர்வுகள், பேரழிவுகள் ஆகியவை மூன்றில் இரண்டு பங்கு மக்களை உதவிக்காக ஏற்கனவே காத்திருக்க வைத்துள்ள நிலையில் இந்நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது பெரும் துன்பத்தைத் தருகின்றது என்றும் கூறியுள்ளார் Russell.
உணவுப் பாதுகாப்பின்மை, பாதுகாப்பற்ற நீர் போன்றவற்றால் சிறார் பள்ளியிலிருந்து இடையிலேயே நிற்கும் சூழலும் எண்ணிக்கையும் அதிகமாகும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார் Russell.
சிரியாவில், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று அறிவிக்கப்பட்ட காலரா தொற்றுநோய் நாடு முழுவதும் வேகமாகப் பரவி குறிப்பாகக் குழந்தைகளைப் பாதித்துள்ளதை எடுத்துரைத்த அவர், இச்சூழல் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு மற்றொரு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார் Catherine Russell.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்