தேடுதல்

திருத்தந்தை 8ஆம் கிளமெண்ட் திருத்தந்தை 8ஆம் கிளமெண்ட்  

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தையர் 8ஆம் கிளமென்ட்,11ஆம் லியோ

புனிதமான பாப்பிறைப் பதவியை பயன்படுத்தி, உறவினர்களுக்கு சலுகை காட்ட மாட்டேன் என மறுத்தவர் திருத்தந்தை 11ஆம் லியோ

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கடந்த வாரம் திருத்தந்தையர்கள் 7ஆம் உர்பான், 14ஆம் கிரகரி மற்றும் 9ஆம் இன்னசென்ட் குறித்து நோக்கினோம். இவ்வாரம் 1592ஆம் ஆண்டு வரலாற்றிலிருந்து, அதாவது ஏறத்தாழ 430 ஆண்டுகளுக்கு முன்னான வரலாற்றிலிருந்து நோக்குவோம். திருத்தந்தையர்கள் வரலாற்றில் ஏறத்தாழ 5ல் 4 பகுதியை நாம் இதுவரை நோக்கிவிட்டோம். மீதியிருப்பவை 5ல் ஒரு பகுதியே. இதில் முதலில் வருபவர் திருத்தந்தை 8ம் கிளமென்ட். இத்தாலியின் பிளாரன்ஸ் பகுதி உயர்குடும்பத்தில் 1536ஆம் ஆண்டு மார்ச் மாதம் Fano என்னுமிடத்தில் பிறந்தார் இப்போலித்தோ அல்தோபிராந்தினி என்ற இயற்பெயர் கொண்ட 8ஆம் கிளமென்ட். இவருடைய தந்தை ஒரு நீதிபதியாக இருந்தமையால் இவரும் சட்டக்கல்லூரி படிப்பில் முதன்மை பெற்றவராக இருந்தார். திருப்பீடத்தில் சட்டம் தொடர்புடைய பல பணிகளை ஆற்றிய இவர் 1585ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 1592ல் திருத்தந்தை 9ஆம் இன்னசென்ட் இறந்தபோது கூடிய கர்தினால்கள், இவரை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தபோது, இத்தாலிய மக்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஏனெனில் இளவயதிலிருந்தே இவர் அப்பழுக்கற்றவராக வாழ்ந்து வந்தார். இவரை வழிநடத்துபவராக இருந்த புனித பிலிப் நேரி, இவரின் ஆன்மீக குருவாக 30 ஆண்டுகள் செயலாற்றினார் என்பதே இவரின் ஆன்மீக வாழ்வை எடுத்துரைக்கும் சான்று. திருஅவை நிறுவனங்களில் இடம் பெறும் தவறுகளைகளை களையும் நோக்கத்துடன், அனைத்திற்கும் நேரடியாகச் சென்று பார்வையிட்டார் இப்பாப்பிறை எட்டாம் கிளமென்ட்.

    40 மணி நேர ஆராதனை என்ற பக்திமுயற்சியை துவக்கிவைத்தவர் இத்திருத்தந்தையே. அரசியல் பிரச்சனைகளை தெளிவாக புரிந்துகொண்ட இத்திருத்தந்தை, சுயநலம் நோக்காமல், பொதுநல நோக்கோடு சில உறுதியான முடிவுகளை எடுத்தார். 1595ஆம் ஆண்டு மன்னர் 4ஆம் ஹென்றியை மன்னித்ததன் வழியாக, பிரான்சின் 30 ஆண்டுக்கால மத அடிப்படையிலான போர் முடிவுக்குவர உதவினார். இதன்மூலம், இத்தாலியின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஹென்றி மன்னரின்  உதவியும் இவருக்குக் கிடைத்தது. 1597ல் இத்தாலியின் Ferrara கோமகன் இரண்டாம் அல்போன்சோ வாரிசின்றி இறந்தபோது, அப்பகுதி திருப்பீடத்தின் கீழ்வருவதற்கு, இஸ்பெயினின் எதிர்ப்பையும் தாண்டி உதவியவர் இந்த மன்னர் ஹென்றியேயாகும். அதேவேளை, தன் செல்வாக்கினைப் பயன்படுத்தி 1598ல் இஸ்பெயினுக்கும் பிரான்ஸ்க்கும் இடையே அமைதி ஒப்பந்தம் உருவாக்கப்பட உதவினார். 1600ல் இவர் ஜூபிலி ஆண்டை அறிவித்தபோது, ஏறக்குறைய 30 இலட்சம் திருப்பயணிகள், புனித தலங்களை பார்வையிட வந்ததாக வரலாறு கூறுகிறது. 1595ல் லித்வேனியாவின் Brest ல் கூட்டப்பட்ட ஆயர் பேரவையின் வழி உக்ரைன் பகுதியின் Ruthenian அருள்பணியாளர்கள்,  உரோமை திருஅவையில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. மூட்டுப்பிடி நோயால் அவதியுற்றாலும், திருஅவைக்கென 13 ஆண்டுக்காலம் தலைமைப்பதவியில் இருந்து இவர் சிறப்புப் பணியாற்றினார். 1605ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ந்தேதி இறைபதம் சேர்ந்தார் திருத்தந்தை 8ஆம் கிளமென்ட்.

1605ஆம் ஆண்டு பதவிக்கு வந்தார் Alessandro Ottaviano de Medici என்ற இயற்பெயர் கொண்ட 11ஆம் லியோ. 1535ஆம் ஆண்டு பிளாரன்சில் பிறந்த இவர், முன்னாள் திருத்தந்தை 10ஆம் லியோவின் தங்கையின் மகளின் மகன். இப்போது புரிந்திருக்கும் நேயர்களுக்கு. இவர் ஏன் 11ம் லியோ என்ற பெயரை தேர்ந்துகொண்டார் என்று. இளம் வயதிலேயே மிகுந்த பக்திமானாகத் திகழ்ந்த இவர், இறைஊழியத்திற்கு தன்னை அர்ப்பணிப்பதையே நோக்கமாக கொண்டிருந்தார். ஆனால் அருள்பணித்துவ வாழ்வுக்குச் செல்வதற்கு இவரின் தாய் சம்மதம் அளிக்க மறுத்தார். இவர் தாய் இறந்த பின்னரே அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். இவரும் புனித பிலிப் நேரியின் சிறந்த நண்பராக இருந்தார். இவர், Tuscan பகுதிக்கான திருப்பீடத் தூதராகப் பணியாற்றியபோதே, புனித பிலிப் நேரி முன்னுரைத்துவிட்டார் இவர் ஒருநாள் திருத்தந்தையாக வருவார் என்று. அத்தனை திறமையும், பக்தியும் நிறைந்தவர் இத்திருத்தந்தை. 1605ல் திருத்தந்தை 8ம் கிளமென்ட் உயிரிழந்தபோது கூடிய 62 கர்தினால்களும், இஸ்பெயின் மன்னர் மூன்றாம் பிலிப்பின் விருப்பத்திற்கு எதிராக, அலெசாந்த்ரோவையே தேர்ந்தெடுத்தனர். இவருக்குப் பிரான்ஸ் மன்னரின் ஆதரவு இருந்தது. ஏனெனில், பிரெஞ்ச் மன்னர் நான்காம் ஹென்றியின் மனைவி Maria de' Medici திருத்தந்தையின் உறவினர் ஆவார்.

  1605ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி 11ஆம் லியோ என்ற பெயருடன் பதவியேற்றபோது இவரின் வயது 70. பதவியேற்ற சில நாட்களிலேயே உடல் சுகவீனமுற்றார். இவர் மிகவும் அன்பு செய்து கல்வி கற்பித்த, இவரின் உடன் பிறப்புகளின் பேரக்குழந்தைகளுள் ஒருவரை கர்தினாலாக்கும்படி பலர் இவரை வற்புறுத்தினர். சில நாடுகளின் தூதுவர்கள் கூட இக்கருத்துக்காக இவரிடம் தூது சென்றனர். ஆனால் புனிதமான இப்பதவியை பயன்படுத்தி, உறவினர்களுக்கு சலுகை காட்ட மாட்டேன் என மறுத்துவிட்டார் இத்திருத்தந்தை. இவரின் ஆன்மீக குருவும் இதனை வலியுறுத்தியபோது, அவரையே மாற்றி, தன் மரணத்திற்கு தயாரிக்க பிறிதொரு ஆன்மீகக் குருவை நியமித்தார் இத்திருத்தந்தை 11ம் லியோ. தான் திருத்தந்தையாக தேர்வுசெய்யப்பட்ட 27ஆம் நாள் 1605ஆம் ஆண்டு ஏப்ரல் 27ந்தேதி உரோம் நகரில் காலமானார் திருத்தந்தை 11ஆம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2023, 12:22