தேடுதல்

சிறையில் யோசேப்பு சிறையில் யோசேப்பு  

தடம் தந்த தகைமை – சிறையில் கனவுகளுக்கு விளக்கம்

எகிப்து மன்னனுக்கு மது பரிமாறுவோனும், அப்பம் தயாரிப்போனும் ஒரே நேரத்தில் கண்ட இரு வேறு கனவுகளுக்கு விளக்கமளித்தார் யோசேப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஒருமுறை எகிப்து மன்னனுக்கு மது பரிமாறுவோனும், அப்பம் தயாரிப்போனும் தங்கள் தலைவனாகிய எகிப்திய மன்னனுக்கு எதிராகக் குற்றம் செய்தனர். பார்வோன் அவர்களை, காவலர் தலைவன் வீட்டிலிருந்த சிறைச்சாலைகளில் அடைத்து வைத்தான். யோசேப்பு அடைபட்டிருந்த இடமும் அதுவே. எகிப்திய மன்னனால் சிறைப்பட்டிருந்த மது பரிமாறுவோன், அப்பம் தயாரிப்போன் இருவரும் ஒரே இரவில் கனவு கண்டனர். ஒவ்வொரு கனவும் வெவ்வேறு பொருள் கொண்டிருந்தது. காலையில் யோசேப்பு அவர்களிடம் வந்தபோது அவர்கள், “நாங்கள் இருவரும் கனவு கண்டோம்; அதை எங்களுக்கு விளக்கிச் சொல்வார் யாருமில்லை” என்று கூறினர்.

மதுபரிமாறுவோர் தலைவன் தன் கனவைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான்; “என் கனவில் ஒரு திராட்சைக் கொடி எனக்கு முன் தோன்றியது. அந்தத் திராட்சைக் கொடியில் மூன்று கிளைகள் இருந்தன. அவை அரும்பிப் பூத்து, கொத்துக் கொத்தாய்ப் பழுக்கக் கண்டேன். கையில் பார்வோனின் கிண்ணம் இருந்தது. நான் பழங்களைப் பறித்து, பார்வோனின் கிண்ணத்தில் பிழிந்து, அந்தக் கிண்ணத்தைப் பார்வோனின் கையில் கொடுத்தேன்” என்றான். யோசேப்பு அவனை நோக்கி, “கனவின் பொருள் இதுவே: மூன்று கிளைகளும் மூன்று நாள்களைக் குறிக்கும். இன்னும் மூன்று நாள்களில் பார்வோன் உன்னைத் தலைநிமிரச் செய்து உன்னை மீண்டும் முன்னைய பதவியில் அமர்த்துவான்” என்றார்.

அப்பம் தயாரிப்போரின் தலைவன் அவரிடம் “நானும் ஒரு கனவு கண்டேன். இதோ மூன்று அப்பக் கூடைகள் என் தலையில் இருந்தன. மேற்கூடையில் பார்வோனுக்காகச் சுட்ட பலவகை அப்பங்கள் இருந்தன. பறவைகள் வந்து என் தலை மேலிருந்த கூடையிலிருந்து அவற்றைத் தின்றுவிட்டன” என்றான். அதற்கு யோசேப்பு, “மூன்று கூடைகளும் மூன்று நாள்களைக் குறிக்கும். இன்னும் மூன்று நாள்களில் பார்வோன் உனது தலையை வெட்டி உன்னைக் கழுமரத்தில் ஏற்றுவான். பறவைகள் வந்து உன் சதையைத் தின்னும்” என்றார். மூன்றாம் நாள், பார்வோனின் பிறந்த நாள் விழா. அன்று யோசேப்பு அவர்களுக்கு விளக்கிச் சொன்னபடியே எல்லாம் நடந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 February 2023, 13:41