விவிலியத் தேடல்: திருப்பாடல் 37-3 ‘அமைதியுடன் காத்திருப்போம்!’
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘ஆண்டவரையே நம்பியிருப்போம்!’ என்ற தலைப்பில் 37-வது திருப்பாடலில் 4 முதல் 6 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 07 முதல் 09 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறையொளியில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு; தம் வழியில் வெற்றி காண்போரையும் சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே. வெஞ்சினம் கொள்ளாதே; வெகுண்டெழுவதை விட்டுவிடு; எரிச்சலடையாதே; அதனால் தீமைதான் விளையும். தீமை செய்வோர் வேரறுக்கப்படுவர்; ஆண்டவருக்காகக் காத்திருப்போரே நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர் (வச.07-09).
ஒரு நாள் குணா என்பவர் ஆசிரமத்தில் வாழ்ந்துகொண்டிருந்த துறவி ஒருவரைச் சந்தித்தார். “சாமி, எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போய்விட்டது. ஏன் வாழ்கிறோம் என்றே எனக்குத் தெரிவில்லை. அதனால் நான் வாழ்வை முடித்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்” என்று விரக்தியுடன் கூறினார். “நீ எதற்காக இந்த முடிவு எடுத்தாய்” என்று அந்தத் துறவி அவரிடம் வினவினார். அதற்கு அவர், என் எதிரிகள் என்னை பலவாறு துன்புறுத்துகின்றனர். எல்லாவிதமான தீமைகளையும் செய்யும் அவர்களுக்கு எல்லாமே நன்றாக நடக்கிறது. அவர்கள் உயர்ந்துகொண்டே போகிறார்கள். ஆனால், தெய்வ பயத்துடன் நான்கு பேருக்கு நன்மை செய்து வாழவேண்டும் என்று நினைக்கின்ற எனக்கு மட்டுமே எல்லாத் துயரங்களும் வந்து சேர்கின்றன” என்று புலம்பி அழுதார். மேலும், “நான் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்பதற்கான ஒரே ஒரு காரணத்தை நீங்கள் சொன்னால்கூட எனது முடிவை நான் மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் சாமி” என்றும் அந்தத் துறவியிடம் கூறினார். அதைக்கேட்ட துறவி புன்முறுவல் பூத்தார். காட்டிற்குள் அற்புதமாக அமைந்திருக்கும் அவரது குடிலுக்கு அவரை அழைத்துச் சென்றார். அத்துறவியின் குடிசை மூங்கில் தோப்புக்குள் அமைந்திருந்தது. அத்தோப்பைக் காட்டி, "இவை என்னவென்று உனக்குத் தெரிகிறதா?" என்று கேட்டார். "எல்லாம் மூங்கில் மரங்கள் சாமி" என்றார் குணா. அதற்குத் துறவி, "இவற்றை எல்லாம் நான்தான் விதைப் போட்டு வளர்த்தேன்" என்றார். அவர் கூறிய அனைத்தையும் குணா வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து பேசிய அந்தத் துறவி, “இந்த நிலத்தைக் ஒரே நேரத்தில் கொத்தி விதைத் தெளித்தேன். நன்றாக சூரிய ஒளி கிடைக்கும்படி செய்தேன். காலந்தவறாமல் உரமிட்டேன். களையெடுத்தேன். நீர்ப்பாய்ச்சினேன்! ஆனால், ஒரு வாரமாகியும் மூங்கில் விதைகள் முளைவிடவில்லை. அதற்காக நான் மனம் தளர்ந்துவிடவில்லை. இரண்டு வாரங்களாகின. மூங்கில் விதைகள் முளைவிடக் காணோம். அப்போதும், நான் மனம் தளர்ந்துவிடவில்லை. மூன்று வாரங்களாயின. மூங்கில் விதைகளிலிருந்து ஓர் அசைவும் காணோம். அப்போதும், நான் தளர்ந்துவிடவில்லை. ஐந்து, ஆறு, ஏழு என்று வாரங்கள் ஓடிக் கொண்டே இருந்தன. மூங்கில் விதைகள் முளைப்பதாக இல்லை. இறுதியில் எட்டாவது வாரம், அதாவது 60 நாட்களுக்குப் பிறகு பூமியைப் பிளந்துகொண்டு மஞ்சள் நிறத்தில் சின்னச் சின்ன தளிர்கள் வெளிவந்தன. அந்நேரத்தில் அவை மிகவும் சின்ன உருவங்கள்தான் ஆனால், வெறும் ஆறே மாதங்களில் 100 அடிக்கும் மேலாகப் பிரமிக்கத்தக்க வகையில் வளர்ந்துவிட்டன. ஒரு நாளைக்கு ஒரு மீட்டர் உயரம் என்று வேக வேகமாக வளர்ந்து இப்போது தோப்பாய் நிற்கின்றன. அந்த விதைகள் ஏறத்தாழ 60 நாள்கள் முளைப்பதற்கான சூழலுக்காக மண்ணுக்குள்ளேயே போராடியிருக்கின்றன. நம் கண்ணுக்குத் தெரியாமல் அவ்விதைகள் பூமிக்குள் வேர்ப்பாய்ச்சி இருக்கின்றன. அந்தப் போராட்டத்திற்கான பரிசுதான் இந்தப் பிரமாண்ட வளர்ச்சி" என்றார். மூங்கில் செடிகள் கூடவே களைகளும் வளர்ந்தன. அவைகள் சிறிது காலம் மூங்கில் செடிகளை வளரவிடாமல் தடுத்தன. அது குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால், காலப்போக்கில் மிகப் பிரமாண்டமாக வளர்ந்தோங்கி நின்ற மூங்கில் மரங்களின் நிழலில் அக்களைகள் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து போயின” என்றார்.
மேலும், “மகனே, இறைவன் யார் மீதும் சுமக்க முடியாத பாரத்தை சுமத்திவிடுவதில்லை என்பதையும், அவரவர் செய்த தீமைக்கேற்ற தண்டனை நிச்சயம் கிடைக்கச் செய்வார் என்பதையும் நீ மறந்துவிடக்கூடாது. பொல்லாரைக் குறித்து நீ வருந்தி கவலைப்பட்டு, கோபமடைந்து உனக்கு நீயே தீமைகளை வருவித்துக்கொள்ளாதே. நீ கடவுளைத் தேடுவதிலும், அமைதியான உள்ளத்துடன் வாழ்வதிலும், நன்மை செய்வதிலும் உறுதியாய் இரு. உன்னுடைய இத்தனை நாள் போராட்டங்களும், துன்பங்களும், கவலைகளும் ஒரு விடுதலைக்கான போராட்டமாகவே காணப்பட வேண்டும். மூங்கில் விதைகளைப் போல உனது நம்பிக்கை வேர்களைப் பாய்ச்சுவதற்கான அவகாசதான் இந்நேரம் என்பதை நீ மறந்துவிடாதே. வாழ்வை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற உனது முடிவிலிருந்து உன்னை மாற்றிக் கொள்ள ஒரு காரணத்தைக் கூறச் சொன்னாய். நான் கூறிவிட்டேன்" என்றார். துறவியின் படிப்பினைகளைக் கேட்டு ஆறுதலடைந்த குணா தனது தவறான முடிவை மாற்றிக்கொண்டார். மேலும், வாழ்க்கையில் பொறுமையுடன் காத்திருப்பது எவ்வளவு முக்கியமானது, உயர்ந்தது என்பதையும் அவர் உணர்ந்துகொண்டார்.
நாம் தியானிக்கும் இறைவார்த்தைகளுக்கு இந்தக் கதை கனகச்சிதமாகப் பொருந்தி நிற்கின்றது. இவ்வார்த்தைகளில், தீமையை விளைவிக்கும் எரிச்சல், வெஞ்சினம் வெகுண்டெழுதல் ஆகிய மூன்று தீமையான குணங்களையும் அகற்றிவிட்டு நன்மையை விளைவிக்கும் காத்திருத்தல் (பொறுமை), நிதானம், அமைதி ஆகிய மூன்று முத்தான குணங்களை அணிந்துகொள்ள அழைப்புவிடுகின்றார் தாவீது அரசர். மேலும், நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு (திபா 27:14) என்றும், நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார் (திபா 40:1) என்றும் தாவீது வேறுசில திருப்பாடல்களிலும் எடுத்துரைக்கின்றார். அத்துடன், “தீமைக்குத் தீமை செய்வேன்” என்று சொல்லாதே; ஆண்டவரையே நம்பியிரு; அவர் உன்னைக் காப்பார் (நீமொ 20:22) என்று நீதிமொழிகள் நூலின் ஆசிரியரும், சகோதர சகோதரிகளே, ஆண்டவரின் வருகைவரை பொறுமையோடிருங்கள். பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார். நீங்களும் பொறுமையோடிருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில், ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது (யாக 5:7-8) என்று திருத்தூதர் யாகப்பரும் எடுத்துரைக்கின்றனர்.
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப் படும் (குறள் 154) என்ற குறளில் நிறை உடையவராக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமலிருக்க வேண்டும் என்றால், அவர் பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும் என்கின்றார் வள்ளுவர் பெருந்தகை.
அமெரிக்க அதிபர்களிலேயே அதிகம் தோல்விகளை சந்தித்து, பொறுமையோடு காத்திருந்து வெற்றியின் சிகரத்தை எட்டியவர் ஆபிரகாம் லிங்கன் மட்டும்தான். வாழ்வில் எல்லாவிதமான துன்ப துயரங்களையும் அனுபவித்தவர் அவர். விறகு வெட்டி, படகோட்டி, பலசரக்குக்கடை ஊழியர், வக்கீல் எனப் பல வேலைகளைப் பார்த்துவிட்டு அமெரிக்க அரசுத் தலைவராக உயர்ந்தவர். எதிரிகள் ஏற்படுத்திய அனைத்துத் தடைகளைத் தாண்டி உயரம் தொட்ட லிங்கனின் வாழ்க்கை வரலாறு நாம் எல்லோரும் படிக்க வேண்டிய பாடம். 1860-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஆபிரகாம் லிங்கனின் அரசியல் கட்சியான குடியரசுக் கட்சி வெற்றி பெற்று ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபராக ஆபிரகாம் லிங்கன் தேர்வு செய்யபட்டார். அப்போது ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலங்களில் அடிமை முறையை ஆதரித்த சக்திகள், அடிமை முறையை எதிர்த்துப் போராடி வந்த குடியரசுக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதை விரும்பவில்லை. அடிமைகளை வைத்திருப்போரின் உரிமைகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாகவே அவர்கள் அதைக் கருதினார்கள். அடிமைத்தனத்தை தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்த ஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்காவின் அதிபரானதும், தான் கூறியபடி அடிமைத்தனத்தை ஒழிக்க துணிச்சலாக நடவடிக்கை எடுத்தார். இந்த அடிமைத்தனத்திலிருந்து நம்மை யாராவது காப்பாற்ற மாட்டார்களா என காலங்காலமாய் ஏங்கிக் காத்திருந்த அம்மக்களின் கனவை நனவாக்கியவர் ஆபிரகாம் லிங்கன். ஆகவே, இத்தேர்தல், பொறுமையுடன் காத்திருந்த லிங்கனுக்கும், அடிமைத்தளையில் சிக்குண்டிருந்த கறுப்பின மக்களுக்கும் வெற்றியைத் தந்தது.
தீமை செய்வோர் வேரறுக்கப்படுவர்; ஆண்டவருக்காகக் காத்திருப்போரே நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர் என்று தாவீது கூறுகின்றார். உலக வரலாற்றைப் புரட்டிப்பார்த்தாலும் இறுதியில் தீயோர் வீழ்ந்த கதையைத்தான் பார்க்கின்றோம். ஆகவே, பொறுத்தவர் பூமி ஆள்வார் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளதைப் போன்று நாமும் ஆண்டவர்முன் அமைதியுடனும் பொறுமையுடனும் காத்திருப்போம். அப்போது ஆண்டவர் நமக்குத் தருவதை உரிமையாக்கிக்கொள்ள முடியும். இவ்வருளுக்காக இறைவனிடம் இந்நாளில் இறைஞ்சி மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்