தேடுதல்

சீடர்களை அழைக்கும் இயேசு சீடர்களை அழைக்கும் இயேசு  

பொதுக் காலம் 3-ஆம் ஞாயிறு : இயேசு தரும் அழைப்பை ஏற்போம்!

இயேசுவுடன் இணைந்து அவர் காட்டும் பாதையில் பயணிக்க விரும்பினால், எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராக இருப்போம்.
ஞாயிறு சிந்தனை 21012023

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I.     எசா 9: 1-4      II.   1 கொரி  1: 10-13,17    III.  மத்  4: 12-23)

இன்று பொதுக் காலத்தின் மூன்றாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இரண்டு முக்கிய மையக்கருத்துக்களைக் கொண்டுள்ளன. முதலாவதாக, இருளில் தவித்த இஸ்ரயேல் மக்களின் மீட்பராகத் தன் மகன் இயேசுவை ஒளிரச் செய்கின்றார் இறைத்தந்தை. இரண்டாவதாக, அந்த இயேசு என்னும் மீட்பரை உலகெங்கும் எடுத்துச் செல்லும் பணியாளர்களாய் ஒளிர்ந்திட நமக்கும் அழைப்பு விடுகின்றார்.

01. அவமதிப்பும் மேன்மையும்

இன்றைய முதல் வாசகத்தின் முதல் பகுதியானது நற்செய்தி வாசகத்தில் மீண்டும் எடுத்துக்காட்டப்படுகிறது. இவை இரண்டிற்கும் மிக முக்கியத் தொடர்பு இருக்கின்றது. இப்போது முதல் வாசகத்தின் முதல் பகுதியை வாசிப்போம். முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார். காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. மேலும் நற்செய்தி வாகசத்தில், யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார் என்றும், பின்பு இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது என்றும் எடுத்துக்காட்டப்படுகிறது.

இதனை விளக்குவதற்குப் பழைய ஏற்பாட்டில் நிகழ்ந்தவற்றை இப்போது நம் நினைவுக்குக் கொண்டு வருவோம். அதாவது, யோசுவாவின் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை அடைந்தபோது, அந்நாட்டின் பகுதிகள் 12 குலத்தாருக்கும் வழங்கப்பட்டது. செபுலோன், நப்தலி நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் அங்கு ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்த வேற்றின மக்களை விரட்டிவிட்டே அவைகளை அவர்களுக்குக் கொடுத்தார். ஆனால் செபுலோன், நப்தலி நாட்டிலிருந்த வேற்றின மக்களை அவரால் விரட்ட முடியவில்லை. எனவே, யோசுவா இந்த இரண்டு நாடுகளையும் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கியபோது, அங்குள்ள வேற்றின மக்களோடு இணைந்து வாழுங்கள் என்று கூறிவிட்டார் யோசுவா. எனவே, இந்த இரு நாடுகளுக்கும் சென்ற இஸ்ரயேல் மக்கள் அந்த வேற்றின மக்களோடு இணைந்து வாழவேண்டிய சூழல் ஏற்பட்டது. இச்சூழல் ஒருவேளை இஸ்ரேல் மக்களுக்கு ஒரு அவமதிப்பாகக் கூட இருந்திருக்கலாம். மேலும், இந்த இரு நாடுகளும் கலிலேயப் பகுதியில் யோர்தானக்கு அப்பால் வருகிறது. மேலும் ‘பெருங்கடல் வழிப்பகுதியே!’ என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால், இஸ்ரயேல் நாட்டையும் எகிப்து போன்ற பிற நாடுகளையும் இணைக்கும் பெரியதொரு வியாபார சாலையாகவே இது இருந்திருக்கின்றது. அதுமட்டுமன்றி, இச்சாலையானது எல்லா இனத்தவரும் கூடிவரும் இடமாகவும் இருந்திருக்கின்றது. எனவேதான், யூத மக்களுக்கு மட்டுமே பயன்தரும் விதத்தில் எருசலேம் ஆலயத்தில் இயேசு தனது நற்செய்திப் பணியைத் தொடங்காமல், எல்லா நாடுகள் மற்றும் இன மக்களைச் சென்றடையும் வகையில், “மனம் மாறுங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்று முழக்கமிட்டுத் தனது பொதுவாழ்வு பணியை எல்லா இனத்தவரும் வாழும் செபுலோன், நப்தலி நாடுகளின் பகுதியில் தொடங்குகின்றார். இதன் காரணமாகவே, குழந்தை இயேசுவை யோசேப்பும் அன்னை மரியாவும் கோவிலுக்குக் கொண்டுவந்தபோது, அக்குழந்தையைக் கையில் ஏந்தியவராக, மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை (லூக் 2:30-33) என்கிறார் சிமியோன். ஆக, இயேசுவைபோல நாமும் சாதி, மத, இன, மொழி வேறுபாடு பாராமல் அனைவருக்கும் பணியாற்றிட வேண்டும் என்பதை இன்றைய முதல் சிந்தனை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

02. இறையாட்சிக்காகப் பணியாற்ற அழைப்பு

நற்செய்தியின் இரண்டாவது பகுதி இறையாட்சிப் பணிக்காக இயேசு சீடர்களை அழைக்கும் பகுதியாக அமைகின்றது. அதாவது, மீன் பிடிப்பவர்களுக்கு மனிதர்களைப் பிடிக்கும் புதிய பணி கொடுக்கப்படுகிறது. மேலும், முதல் சீடர்களை இயேசு அழைத்தபோது அவர்கள் எவ்விதமான சாக்குபோக்கும் சொல்லாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றுவதைப் பார்க்கின்றோம். அதாவது, இயேசுவே முதன்மையானதால் மற்ற காரியங்கள் அனைத்தும் அவர்களுக்கு முக்கியத்துவமற்று போய்விட்டது. ஆகவே, நான் எதற்காக அழைக்கப்படுகிறேன், யாருக்காக அழைக்கப்படுகிறேன், எப்படிப்பட்டச் சூழலில் பணியாற்றுவதற்கு அழைக்கப்படுகிறேன் என்ற கேள்விகளை எழுப்பிச் சிந்திப்போம்.

இன்று உலகின் நம்பர் ஒன் மருத்துவராகப் போற்றப்படுபவர் Tom என்று செல்லமாக அழைக்கப்படும் Tomas Catena. சூடான் நாட்டின்  நுபா மலைப் பிரதேசத்திலுள்ள ஒரே மருத்துவமனை ‘இரக்கத்தின் அன்னை’ என்ற (Mother of Mercy) மருத்துவமனை மட்டும்தான். ஒரு சில சுகாதார மையங்கள் இருந்தாலும், இங்கே மருத்துவர்களே கிடையாது. அந்த 90 மைல் சுற்றளவில் வாழும் ஏறத்தாழ 7 இலட்சத்து 50 ஆயிரம் மக்களும் நம்பியிருப்பது ‘இரக்கத்தின் அன்னை’ மருத்துவமனையைத்தான். அத்தனை பேருக்கும் சேர்த்து, அங்கே பணியில் இருப்பது ஒரே ஒரு மருத்துவரான Tomas Catena மட்டுமே. இத்தனைக்கும் அவர் அந்த மண்ணின் மைந்தர் கிடையாது. அவர் ஒரு அமெரிக்கர். நுபா, போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி. இங்குக் குண்டு வீசுவது எதிரி நாடு அல்ல. சூடான் அரசேதான். சொந்த மக்களை அரசே கொல்லும் அந்த நிலப்பரப்பில், மரண பயத்தை வென்று, மனிதநேயம் கொண்டு,  அப்பாவி சூடான் மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவப் பணிக்காக, தன் வாழ்வையே அர்ப்பணித்திருப்பவர்தான் Tom. அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தின் ஆம்ஸ்டர்டாமில் பிறந்தவர் Tom. பெற்றோர், ஜெனி-நான்ஸி. அவர்களுக்கு மொத்தம் ஏழு குழந்தைகள். ஐந்தாவதாகப் பிறந்தவர்தான் Tom Catena. சிறுவயதிலிருந்தே இறைபக்தி கொண்டவர். பிறருக்கு உதவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். விவிலியக் கதைகளை விரும்பிப் படித்தவர். குறிப்பாக, புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வால் தீவிரமாக ஈர்க்கப்பட்டவர்.

பொறியியல் படிப்பு முடித்தாலும், 'மக்கள் பணி' என்பதே Tom மனதில் நிழலாடிக் கொண்டிருந்தது. NEVI Scholarship கிடைக்கப் பெற்று வடக்கு கரோலினாவின் டியூக் (Duke) பல்கலைக்கழகத்தில், மருத்துவப் படிப்பில் சேர்ந்தார் Tom. மருத்துவப் படிப்பின் நான்காவது ஆண்டில், கென்யாவில் இரண்டு மாதங்கள் தங்கி மருத்துவப் பணி  செய்தார். கென்யா நாட்டின் மொழி, அவருக்குத் தெரியாது. ஆனால், அந்த மக்களின் பரிதாப முகங்கள், அவற்றில் நிறைந்திருந்த ஏக்கம், நோய், வலி, நிவாரணம் கிடைத்தபோது கண்களில் பெருகிய நன்றி உணர்வு யாவும் அவரை அதிகம் பாதித்தது. அப்போது டாக்டர் Tom, 'இதுவே என் பாதை இதுவே என் பணி, இதுவே நான் விரும்பிய வாழ்க்கை’!  என உறுதியாகத் தீர்மானித்தார். 1999-ஆம் ஆண்டில், அடிப்படை வசதிகள் கூட  இல்லாத கென்யா நாட்டின் கிராமம் ஒன்றின் மருத்துவமனையில் தன் பணியைத் தொடங்கினார் அங்கே இரண்டு ஆண்டுகள் பணியாற்றியபின் நைரோபியில் புனித மரியன்னை மருத்துவமனையில் ஆறு ஆண்டுகள் பணி செய்தார். இருண்ட கண்டத்தின் இன்னல்கள் ஒவ்வொன்றும் அவருக்கு அப்போதுதான் புரியத் தொடங்கியது. கறுப்பின மக்கள் மீதான அவரது அன்பு, பாசம், அக்கறை அதிகரித்துக்கொண்டேபோனது.

2007-ஆம் ஆண்டு அடுத்த மருத்துவப் பணிக்காக அவர் தேர்ந்தெடுத்த பகுதி, முன்னேற்றத்தின் எந்தவித அடிச்சுவடும் பதியாத சூடானின் நுபா மலைகள் சூழ்ந்த 'கிடெல்’ என்ற ஊர். அங்கே பல மைல் சுற்றளவில் எங்கும் மருத்துவமனையே கிடையாது. வேதபோதக அமைப்பு பண உதவி செய்தது. மக்கள் வியர்வை சிந்தினார்கள். நுபா மலைகளில் இருந்து கொண்டுவந்த கற்கள் மருத்துவமனைக் கட்டடம் எழ உதவின. 300 படுக்கைகள், பரிசோதனைக் கூடம், எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகள் நிறைந்த மருத்துவமனை 2008-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இயங்கத் தொடங்கியது. வேதபோதக அமைப்பு மாதம்தோறும் வழங்கும் 350 டாலர் மட்டுமே Tom-இன் வருமானம். அதை எல்லாம் அவர் கருத்தில் கொள்ளாமல், 'மக்களின் மருத்துவராக’ அங்கே தன் பணிகளைத் தொடர்ந்தார். 2011-ஆம் ஆண்டு வரை பெரிய அளவில் பிரச்னை இல்லை. ஆனால், சூடானில் இருந்து 'தெற்கு சூடான்’ தனி நாடாகப் பிரிந்த நேரத்தில் நுபாவில் பிரச்சனைகள் தொடங்கின.

சூடான் அரசு, 2011-ஆம் ஆண்டில் நுபா இனப்படுகொலைகளைத் தொடங்கிவைத்தது. திடீரென போர் விமானங்கள் பறந்துவந்து கொத்துக்கொத்தாகக் குண்டுகளை வீசி மக்களைக் கொல்லத் தொடங்கின. இந்நிலையில், என்றாவது ஒருநாள் மருத்துவமனை மீதும் குண்டு வீசப்படலாம்’ என Tom அடிக்கடி நினைப்பது உண்டு. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் அதுவும் நிகழ்ந்தது. மருத்துவமனை வளாகத்தில் ஏறத்தாழ 11 குண்டுகள் விழுந்து வெடித்துச் சிதறின. நோயாளிகள் எல்லாம் பதறிக்கொண்டு தரையோடு தரையாகப் படுத்தனர். பாதுகாப்புக்காக வெட்டிவைத்திருந்த பதுங்குகுழிகளுக்குள் ஒடி ஒளிந்தனர். மக்கள் மட்டுமல்ல மருத்துவர் Tom-மும்தான். நல்லவேளை உயிர்ச்சேதம் இல்லை. ஆனால், மரணத்தை நெருங்கிவிட்ட உணர்வு  அங்கு ஏற்பட்டது. அந்தச் சூழலிலும் 'நமக்கு என்ன தலையெழுத்தா?’ என அம்மக்களை விட்டுப்போக அவர் நினைக்கவில்லை. 'நம்மைவிட்டால் யார் இவர்களுக்குச் சிகிச்சை அளிப்பார்?’ என்று மட்டுமே நினைத்து 'என் பணி இவர்கள் பிணி நீக்குவதே' என்று தீர்க்கமான சிந்தனையுடன் இன்றுவரை பணியாற்றி வருகின்றார் Tom.

நுபாவின் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, அவர்களது அன்றாட இறைவேண்டல், 'கடவுளே! எங்கள் டாக்டர் Tom நலமுடன் இருக்க வேண்டும். அவருக்கு எத்தீங்கும் நேரக் கூடாது’ என்பதுதான். அங்கு வாழும் கறுப்பின கிறிஸ்தவர்கள் சொல்லும் வார்த்தைகள் அத்தனையும் உணர்வுபூர்வமானவை. 'இயேசு என்ன செய்தார்? நோயாளர்களைக் குணப்படுத்தினார்; நடக்க முடியாதவர்களை  நடக்கவைத்தார்; பார்வையற்றவர்களுக்குப் பார்வை கொடுத்தார். எங்கள் டாக்டர் Tom மும் அதைத்தான் இங்கு செய்துகொண்டிருக்கிறார். எங்களுடைய இயேசு, டாக்டர் Tom தான்!’ ஆம் இப்படிப்பட்ட மக்கள் வாழும் சூடான் நாட்டிற்குத்தான் நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.

இன்றைய நம் துறவு வாழ்வில்,  நான் நினைத்ததை சாதிக்கவேண்டும், நான் விரும்பும் பதவி வேண்டும், பணம்கொழிக்கும் பங்குத்தளங்களும் பணித்தளங்களும் வேண்டும் என வீண் பெருமைக்காகவும், புகழுக்காகவும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றோம். இதனால், துறவு வாழ்வில் மட்டுமல்ல, பொதுநிலையினர் வாழ்விலும் பிளவுகளையும்  பிரச்சனைகளையும் ஏற்படுத்திவிடுகின்றோம். இதன்காரணமாகவே, இன்றைய இரண்டாம் வாசகத்தில், சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே; நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள் என்று பவுலடியார் வலியுறுத்திக் கூறுகின்றார், இயேசு தனது சீடர்களின் வழியில் இவ்வுலக மக்கள் யாவரையும் ஒன்றுபடுத்தும் இறையாட்சிப் பணிக்காக, நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்டவிதத்தில் பெயர் சொல்லி அழைக்கின்றார். நமது பதில்மொழி என்ன? இவ்வுலக மதிப்பீடுகளைக் கொண்ட சாத்தானின் பக்கம் நிற்பதற்கு விரும்புகின்றோமா? அல்லது, இறையாட்சியின் விழுமியங்களைத் தன்னகத்தே கொண்ட இயேசுவின் பக்கம் நிற்பதற்கு விரும்புகின்றோமா? என்பதைத் தெளிந்து தேர்வு செய்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக இறைவனிடம் இந்நாளில் இறைஞ்சி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 January 2023, 12:30