தேடுதல்

கடவுளிடம் இறைவேண்டல் செய்யும் தாவீது கடவுளிடம் இறைவேண்டல் செய்யும் தாவீது  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 37-2 ‘ஆண்டவரையே நம்பியிருப்போம்!’

நமது நேர்மையான வழிகளை ஆண்டவராகிய கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு அவரையே முழுவதுமாக நம்பி இருப்போம்.
திருப்பாடல் 37-2

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அந்த  அரசருக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தார். அரசரின் முகத்தைக் கவனித்த அமைச்சருக்கு, அரசர் ஏதோ பிரச்னையில் இருக்கிறார் என்பது புரிந்துவிட்டது. ஆனால், வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம். ஆகவே, அமைச்சர் ஒரு தந்திரம் செய்தார். "அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’" என்று கேட்க, அதற்கு அரசர், "ஆமாம், ஆனாலும், இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லை!" என்றார். உடனே அமைச்சர், "மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே. சரி புறப்படுங்கள். போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம் இருகிறது? அவரையும் பார்த்துவிட்டுச் செல்லலாம்!” என்றார். ‘குரு’ என்றவுடன் அரசரின் முகத்தில் புதிய நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தார். அரசரின் குருநாதர் ஒரு ஜென் துறவி. அவர் ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அங்குச் சென்ற அரசரை, அவரும் அவருடைய சீடர்களும் அன்புடன் வரவேற்று உபசரித்தனர். பின்னர் அரசர் தன் குருநாதரைத் தனியே சந்தித்து தான் அடைந்துள்ள குழப்பங்கள் பற்றியும் அவற்றைச் சரி செய்வது எப்படி என்று தான் யோசித்துவைத்திருந்த தீர்வுகள் குறித்தும், அந்தக் குருவிடம் சொன்னார். எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் குரு. இறுதியாக அரசர் குருவைப் பார்த்து,  "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?" என்று கேட்டார். குரு எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு "நீ புறப்படலாம்" என்றார். அரசர் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ எதுவும் இல்லை. மிகவும் மகிழ்ச்சியுடன் தன் குதிரையில் ஏறி காட்டை நோக்கிப் பயணமானார். இதைப் பார்த்த அமைச்சர் அந்தக் குருவிடம் ஓடிச்சென்று. "அரசருடைய பிரச்னையை எப்படித் தீர்த்துவைத்தீர்கள் குருவே?" என்று ஆர்வத்தோடு கேட்டார். அதற்கு அந்தக் குரு, "உன் அரசர் மிகவும் புத்திசாலி. அவரே தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டார். நான் செய்ததெல்லாம், அவர்  தன்னுடைய குழப்பங்களைச் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன். அவர் சாய்ந்து அழத் தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்!” என்றார்.

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘நம்பத்தக்கவராய் வாழ்வோம்!' என்ற தலைப்பில் 37-வது திருப்பாடலில் 1 முதல் 3 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 4 முதல் 6 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை பக்தியுணர்வுடன் வாசிப்போம். ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார். உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார் (வசனம் 4-6)

மேற்கண்ட இந்த இறைவசனங்களில் கடவுளை நம்பி நமது வாழ்வை அவரிடம் ஒப்படைத்து அவரில் மகிழ்ந்திருக்குபோது அவர் நமது சார்பாக செயலாற்றுவார் என்றும், அவ்வாறு நாம் செயல்படும்போது, அவர் நமது நேர்மையை கதிரொளி போலும், நாணயத்தை நண்பகல் போலவும் விளங்கச் செய்வார் என்றும் கூறுகின்றார் தாவீது அரசர். அதாவது, முதல் காரியத்தை நமது செயல்முறைகளாகவும், இரண்டாவது காரியத்தை அதற்கான பரிசாகவும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றார். இதன் காரணமாகவே, ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்; அவரை என் உள்ளம் நம்புகின்றது; நான் உதவி பெற்றேன்; ஆகையால் என் உள்ளம் களிகூர்கின்றது; நான் இன்னிசைபாடி அவருக்கு நன்றி கூறுவேன் (திபா 28:7) என்றும், உமது பேரன்பை நான் வைகறையில்  கண்டடையச் செய்யும்; ஏனெனில், உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; நான் நடக்க வேண்டிய அந்த வழியை எனக்குக் காட்டியருளும்; ஏனெனில், உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன் (திபா 143:8) என்றும், அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில், உம்மையே நான் நம்பியிருப்பேன் (திபா 56:3) என்றும் வேறுசில திருப்பாடல்களிலும் எடுத்துக்காட்டுகின்றார் தாவீது அரசர். மேலும், முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு; உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே. நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார் (நீமொ 3:5-6) என்று நீதி மொழிகள் நூலும், ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவரே அவர்களது நம்பிக்கை. அவர்கள் நீர்  அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்; அது நீரோடையை நோக்கி வேர் விடுகின்றது. வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை; அதன் இலைகள் பசுமையாய் இருக்கும்; வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும் (எரே 17:7-8) என்று இறைவாக்கினரான எரேமியா நூலும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

‘உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார்’ என்ற வார்த்தைகளில் இரண்டு உவமைகளை கையாள்கிறார் தாவீது அரசர். கதிரவனின் ஒளியை யாரும் மறைக்க முடியாது. மேகங்கள் கதிரவனை மறைத்தாலும் கூட நீண்ட காலத்திற்கு அதனை மறைக்க முடியாது. சிறிதுகாலமே மறைக்க முடியும். அவ்வாரே, நேர்மையான மனிதர்களின் செயல்பாடுகளை யாரும் நீண்டகாலம் மறைக்க முடியாது, காரணம், நேர்மையாளர்களின் செயல்பாடுகள் குன்றிலிட்ட தீபமாய் ஒளிர்ந்து சுடர்விட்டுக்கொண்டே இருக்கும். இரண்டாவதாக, ‘உன் நாணயத்தை நண்பகல்போல் விளங்கச் செய்வார்’ என்கின்றார் தாவீது. இன்றைய உலகில் நாணயமில்லாத மனிதர்கள்lதாம் அதிகம் இருக்கின்றார்கள். ‘நாணயம்’ என்ற வார்த்தைக்கு ‘நம்பகத்தன்மை’, ‘பிரமாணிக்கம்’ என்றும் பொருள் கொள்ளலாம். ‘அவனை நம்ப முடியாதுங்க... அவனிடம் கொஞ்சம் கூட நாணயம் இருக்காது. அவன் பேசுறது ஒண்ணு... செய்யுறது ஒண்ணா இருக்கும்’ என்று நாம் கூறக் கேட்டிருக்கின்றோம். இன்றைய நம் காலத்தில், எல்லா நிலைகளிலும், எல்லா துறைகளிலும் நாணயம் என்ற உயரிய பண்பு தொலைந்து போய்விட்டது.

நேர்மை நாணயம், நம்பகத்தன்மை என்ற வார்த்தைகளை நினைக்கும்போது காலம்சென்ற அரசியல் தலைவர் கக்கன்தான் நம் நினைவுக்கு வருகின்றார். பணம், பதவி, புகழ், ஆடம்பரம், செல்வாக்கு, வீண்பெரும் போன்ற இன்றைய அரசியல்வாதிகளின் அடையாளங்களை விரும்பாத ஓர் அப்பழுக்கற்ற மனிதர் அவர். கக்கனின் மகன் சத்தியநாதன் தன் தந்தையின் தூய வாழ்விற்கு இவ்வாறு சான்று பகர்கின்றார். "மிகவும் நேர்மையாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் என் தந்தையின் அடிப்படையான குணங்கள். அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், எங்கே சாப்பிடுவது என்பதில்கூட மிகவும் கவனமாக இருந்தார். யாராவது பரிசுப் பொருள்களைக் கொடுத்தால் கூட, அவற்றை ஏற்க மாட்டார். ஏனென்றால், ஒருவரிடம் ஏதாவது பரிசுப் பொருள்களை வாங்கிவிட்டால், பிறகு அவருக்குப் பதிலுக்கு ஏதாவது செய்தாக வேண்டியிருக்கும். அமைச்சராக இருந்துகொண்டு அப்படிச் செய்வது சரியாக இருக்காது என்று சொல்வார்." கக்கன் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு நீர்த்தேக்கங்களைக் கட்டியதன் பின்னணியில் அவரின் பங்களிப்பு அதிகம் இருந்தது. மேலும், மதுரை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதிலும் பெரும் பங்குவகித்தார் கக்கன். 1971-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார் கக்கன். அதற்குப் பிறகு மெல்ல மெல்ல பொது வாழ்க்கையிலிருந்து அவர் விலகிக் கொண்டார். 1981-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். நேர்மையும் நம்பகத்தன்மையுமற்ற பெரும்பாலான இன்றைய நம் அரசியல் தலைவர்கள் மத்தியில் கக்கன் அவர்கள் கதிரவனாகவும் விலைமதிப்பற்ற நாணயமாகவும் இன்றய தலைமுறைக்கும் கூட ஒளிவிளக்காகத் திகழ்கின்றார். மனசாட்சி என்னும் கடவுளுக்குப் பயந்த காரணத்தினாலேயே கக்கன் போன்ற நல்ல தலைவர்கள் நேரிய வாழ்வு வாழ்ந்து மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். நல்லது செய்து நானிலத்தை உயர்த்த வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் உள்ளத்து நோக்கமாக இருந்தது.

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது (குறள்- 124), என்ற திருக்குறளில் தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தது என்கின்றார் வள்ளுவர். ஆகவே, தாவீது அரசர் சுட்டிக்காட்டுவது போன்று, நமது நேர்மையான வழிகளை ஆண்டவராகிய கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு அவரை மட்டுமே முழுவதுமாக நம்பி இருப்போம். அப்போது கதிரொளியைப் போன்று அவர் நமது நேர்மையையும் நம்பகத்தன்மையயும் உலகில் ஒளிரச் செய்வார். அதற்கான அருள்வரங்களுக்காக ஆண்டவர் இயேசுவிடம் இந்நாளில் இறைஞ்சி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 January 2023, 12:43