தேடுதல்

திருத்தந்தை 13ஆம் கிரகரி திருத்தந்தை 13ஆம் கிரகரி 

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை 13ஆம் கிரகரி

சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மறைப்பணியாளர்களை அனுப்ப இயேசு சபையினருக்கு பெரும் ஊக்கம் அளித்தவர் திருத்தந்தை 13ஆம் கிரகரி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை ஐந்தாம் பயஸுக்குப்பின் திருஅவையின் தலைமைப் பொறுப்பேற்றவர் 1502ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி இத்தாலியின் பொலோன்ஞா(Bologna) நகரில் பிறந்த 13ஆம் கிரகரி. இவரின் இயற்பெயர் Ugo Buoncompagni. இவர் பொலோன்ஞா பல்கலைக்கழகத்தில் திருஅவைச் சட்டத்திலும், சமூக சட்டத்திலும் முனைவர் பட்டம் பெற்று, அப்பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியர் ஆனார். இவரின் மாணவர்களுள் முக்கியமானவர் புனித சார்லஸ் பொரோமியோ. திருத்தந்தை மூன்றாம் பவுலால் Ugo Buoncompagni உரோம் நகரில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதே திருத்தந்தையால் 1545ஆம் ஆண்டு திருப்பீடத்தின் சட்ட வல்லுனர் பிரதிதியாக திரிதெந்து பொதுச்சங்கத்தில் கலந்துகொள்ள அனுப்பிவைக்கப்பட்டார். 1558ஆம் ஆண்டு ஆயராக இவர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னரே அருள்பணித்துவ திருநிலைப்பாட்டைப் பெற்றார். திருத்தந்தையர்கள் மூன்றாம் ஜூலியஸ், நான்காம் பவுல், நான்காம் பயஸ், ஐந்தாம் பயஸ் ஆகியோரின் கீழ் வத்திக்கான் தலைமைப்பீடத்தில் பல்வேறு உயர் பொறுப்புக்களில் பணியாற்றியுள்ளார் திருத்தந்தை 13ஆம் கிரகரி. 1564ஆம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார் இவர். 1572ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது திருத்தந்தை 13ம் கிரகரி என்ற பெயரை தேர்வுசெய்து கொண்டார். 70 வயதில் திருத்தந்தையான இவர், நல்ல உடல் நலத்துடனும், பலம் பொருந்தியவராகவும் இருந்தார். இவர் இளவயது வாழ்வு மாசுமறுவற்றதாக இருக்கவில்லை. திருமணமாகாத ஒரு பெண் வழியாக பொலோன்ஞாவில் இவருக்கு Giacomo என்ற ஒரு மகனும் இருந்தார்.                                                                                                                                                              

அருளாராக திருநிலைப்படுத்தப்பட்டப் பின்னரும் கேளிக்கை விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டிருந்த 13ம் கிரகரி, திருத்தந்தையானபின் தன் வாழ்வை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். திருஅவை நலன் ஒன்றே அவரது குறிக்கோளாக இருந்தது. திருஅவை அதிகாரிகளை நியமிப்பதிலும், கர்தினால்களை அறிவிப்பதிலும் இதனைக் கடைபிடித்தார். இவர் உருவாக்கிய 34 கர்தினால்களும் அத்தகைய உயர்பதவிக்கு பொருத்தமானவர்களாகவே இருந்தனர். இவருடைய இரண்டு உறவினர்கள் Filippo Buoncompagni, Filippo Vastavillano என்பவர்கள்,  தகுதியின் காரணமாக கர்தினால்களாக உயர்த்தப்பட்டனர். இன்னொரு உறவினர் கர்தினாலாக விரும்பியபோது, அவரின் தகுதியின்மைக்காக அவரை சந்திக்கக்கூட திருத்தந்தை 13ஆம் கிரகரி மறுத்துவிட்டார். தன்மகன் Giacomoவுக்கு உயர்பதவி கொடுக்க மறுத்தார். ஆனால், ஸ்பெயின் மன்னர் இவர் மகனை தன் படைத்தளபதி ஆக்கினார். இவர் பல கல்வி நிறுவனங்களை நிறுவினார். கல்விப்பணியில் இயேசு சபையினருக்கு மிகுந்த ஆதரவளித்தார். இவர் காலத்தில் ஏறக்குறைய 23 கல்லூரிகள் மற்றும் குருத்துவ பயிற்சி இல்லங்கள் இவரது ஆதரவுடன் துவங்கப்பட்டன. இயேசு சபையினருக்கு நிதியுதவிகள் அளித்து மறைபரப்பு பணிகளுக்கு ஊக்கமளித்தார். சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மறைப்பணியாளர்களை அனுப்ப பெரும் ஊக்கம் அளித்தவர் இத்திருத்தந்தை. ஜப்பானில் இயேசு சபையினரால் மனம்மாறிய மன்னர்களின் நான்கு பிரதிநிதிகள் உரோம் வந்து திருத்தந்தையை சந்தித்து தங்கள் நன்றியை தெரிவித்துவிட்டுச் சென்றது இங்கு குறிப்பிடும்படியானது.

ஜூலியன் நாள்காட்டியில் சீர்திருத்தங்களை கொணர்ந்தது திருத்தந்தை 13ம் கிரகரிதான். கத்தோலிக்க மதத்திற்கு பலன் தருவதாக இருக்கும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் நிதியுதவி செய்ய இவர் எப்போதும் தயாராக இருந்தார். உரோமையில் புகழ்பெற்ற நவோனா சதுக்கம் உட்பட பல பெரிய கட்டிடங்களையும், வளாகங்களையும் கலை நுணக்கத்துடன் அமைத்தவர் இவர். இவர் உரோம் நகர் வளர்ச்சியில் எவ்வளவு பங்காற்றினார் என்றால், இவர் உயிரோடு இருக்கும்போதே மக்கள் இணைந்து இவருக்கு சிலை வைத்தனர்.

நல்ல காரியங்களுக்கு இவர் அதிக நிதியுதவி செய்ததால் திருப்பீட கருவூலம் காலியானது. அதனை ஈடு செய்ய, திருஅவை சொத்துக்களை நிர்வகித்தவர்களை நெருக்கினார். தவணைத் தொகையை செலுத்தாமல் ஏமாற்றிவந்தவர்களிடமிருந்து திருஅவை சொத்துக்களை கைப்பற்றினார். இதனால் பல பணக்காரர்களின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டார். சிறந்த நிர்வாகியான திருத்தந்தை 13ஆம் கிரகரி ஏறத்தாழ 13 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்தியபின் 1585ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி உரோம் நகரில் காலமானார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 January 2023, 12:04