தேடுதல்

இறைவாக்கினர் சாமுவேலால் அருள்பொழிவு செய்யப்படும் தாவீது இறைவாக்கினர் சாமுவேலால் அருள்பொழிவு செய்யப்படும் தாவீது  

தடம் தந்த தகைமை : அரசராக அருள்பொழிவு செய்யப்பட்ட தாவீது

கடவுளை மறந்து இவ்வுலகப் பொருள்கள்மீது மோகம்கொண்டு வீண்பெருமையும், புகழும் அடைய விரும்போது, கடவுளின் பார்வை நம்மைவிட்டு விலகிவிடும்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காலப்போக்கில் சவுல் மன்னர் அதிகமான வெற்றிகளையும் புகழையும் பெற்றபோது அவருடைய நடத்தையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. இதனால் கடவுளுடைய பார்வை சவுலைவிட்டு விலகியது. இதை அறிந்து மிகுந்த வருத்தமடைந்த சாமுவேல்,. மக்களைக் காத்து வழிநடத்த வலிமையான அரசர் ஒருவர் இல்லாதது கண்டு கடவுளிடம் இறைவேண்டல் செய்தார். ஆண்டவர் சாமுவேலிடம், “இஸ்ரயேலின் அரசராகச் சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறக்கணித்ததை நீ அறிந்திருந்தும், நீ எவ்வளவு காலம் அவனுக்காக மனவருத்தம் அடைவாய்?  ஆகவே, நீ உடனே பெத்லகேமைச் சேர்ந்த ஈசாய் என்பவரிடம் போ. ஏனெனில் அவர் மகன்களில் ஒருவனைத்தான் நான் அரசனாகத் தேர்வு செய்துள்ளேன்” என்றார். ஆண்டவர் கூறியவாறே, சாமுவேல் பெத்லகேமுக்குச் சென்று ஈசாயையும் அவர் மகன்களையும்  கண்டார். அவர்களில் ஒருவனான எலியாவைக்  கண்டவுடன், ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும் என்று எண்ணினார். ஆனால், ஆண்டவர் சாமுவேலிடம் “அவனது தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே. மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார் “என்றார்.

அவர்களில் யாரையும் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லை என்பதை அறிந்து சாமுவேல் குழப்பமடைந்தார். ஆகவே, அவர் ஈசாயைப் பார்த்து “உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” என்று கேட்க “இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருகிறான்” என்று பதிலளித்தார் ஈசாய். அதற்கு சாமுவேல் அவரிடம், “ஆளனுப்பி அவனை உடனே அழைத்து வா,  அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்” என்றார். ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். அவன்தான் தாவீது. ஆண்டவர் சாமுவேலிடம், “தேர்ந்துகொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!” என்றார். சாமுவேலும் அவ்வாறே செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 January 2023, 13:39