தேடுதல்

மிதியான் நாட்டில் மோசே மிதியான் நாட்டில் மோசே 

தடம் தந்த தகைமை – வேற்றுநாட்டில் அந்நியனாக மோசே

நான் வேற்று நாட்டில் அந்நியனாய் உள்ளேன்’ என்று கூறி மோசே அவர்களுக்குப் பிறந்த குழந்தைக்கு ‘கேர்சோம்’ என்று பெயரிட்டழைத்தார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மோசே நன்றாக வளர்ந்த போது தம் இனத்தவர்கள் கடினமான வேலைகளைச் செய்வதைக் கண்டு மனம்வருந்தினார். ஒரு நாள் எபிரேயன் ஒருவனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதைக் கண்டு அந்த எகிப்தியனை அடித்துக் கொன்று மணலுக்குள் புதைத்து விட்டார். அடுத்த நாள் எபிரேயர் இருவருக்கிடையே கைகலப்பு நடந்து கொண்டிருந்ததைக் கண்ட மோசே தவறு செய்தவரை நோக்கி “உன் இனத்தவனை ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “எங்களுக்குத் தலைவனாகவும் நடுவனாகவும் உன்னை யார் நியமித்தது? எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா நீ இப்படிப் பேசுகிறாய்?” என்று கேட்டான். இதனால்,  “நடந்தது உறுதியாக தெரிந்துவிட்டது என்று மோசே அச்சமுற்றார். இச்செய்தியைப் பார்வோன் மன்னன் கேள்வியுற்று மோசேயைக் கொல்லத் தேடினான்.

எனவே, மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மிதியான் நாட்டை நோக்கிச் சென்றார். ஒரு கிணற்றருகில் அமர்ந்திருந்த அவர், மிதியானின் அர்ச்சகருடைய ஏழு புதல்வியர், தம் தந்தையின் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்ட நீர் மொண்டு தொட்டிகளை நிரப்புவதைக் கண்டார். அங்கு வந்த இடையர்கள் அப்பெண்களை விரட்ட, மோசே உடனே எழுந்து அவர்களுக்குப் பாதுகாப்பளித்தார். அவர்கள் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்டவும் உதவிசெய்தார். அவர்கள் வேலை சுலபமாக முடிந்து விரைவாக வீடு திரும்பவே தந்தையான இரகுவேல் அவர்களிடம்,“என்ன, இன்று விரைவாக வந்துவிட்டீர்களே?” என்றார். அவர்களோ, “எகிப்தியன் ஒருவன் இடையர்களின் தொல்லையிலிருந்து எங்களை விடுவித்ததோடு, எங்களுக்குப் பதிலாகத் தண்ணீர் இறைத்தான்; ஆட்டு மந்தைக்கும் தண்ணீர் காட்டினான்” என்றார்கள். அவர் தம் புதல்வியரிடம், “எங்கே அவன்? ஏன் அம்மனிதனைப் போகவிட்டீர்கள்? சாப்பிட அவனை அழைத்து வாருங்கள்” என்று கூறினார். அவர்களோடு குடியிருக்க மோசேயும் சம்மதிக்க, அவருக்குத் தம்மகள் சிப்போராவை மணமுடித்துக் கொடுத்தார் இரகுவேல். ‘நான் வேற்று நாட்டில் அந்நியனாய் உள்ளேன்’ என்று கூறி மோசே தமக்குப் பிறந்த குழந்தைக்கு ‘கேர்சோம்’ என்று பெயரிட்டழைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 January 2023, 11:54