தேடுதல்

திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு  

திருவருகைக் காலம் 4ம் ஞாயிறு: உடனிருப்பின் அடையாளமாய்த் திகழ்வோம்!

பிறருக்கு நம்பிக்கைத் தரும் அடையாளமாக அமையாத நமது வாழ்க்கை எப்போதும் அர்த்தம் இழந்துபோகும் என்பதை உணர்வோம்.
ஞாயிறு சிந்தனை 17122022

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்    I.     எசா 7: 10-14       II.    உரோ  1: 1-7      III.   மத்  1: 18-24)

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே அருள்பணியாளர் ஸ்டான் சாமியை பற்றித்தான் பேச்சு. அவர் அநீதியான முறையில் கொல்லப்பட்டுள்ளார் என்று NIA (National Investigation Agency) அமைப்பை சமூக ஆர்வலர்களும், மனித உரிமை அமைப்புகளும் கடுமையாகக் குற்றம் சுமத்தி வருகின்றன. அவர் ஒடுக்கப்பட்ட பூர்வீக இனமக்களின் விடுதலை வேந்தனாக அடையாளப்படுத்தப்படுகிறார். மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகப் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்த அருள்பணியாளர் ஸ்டேன் சுவாமிக்கு எதிரான ஆவணங்கள் அனைத்தும் பொய்யானவை என அமெரிக்காவை சேர்ந்த தடயவியல் நிறுவனம் அதிர்ச்சிக்கரமான அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. இதன் காரணமாக, இன்று இந்தியா உலக அரங்கில் தலைகவிழ்ந்து நிற்கிறது. அருள்பணியாளர் ஸ்டேன் சுவாமியின் மடிக்கணணியில் ஹைக்கர்களால் திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட பல சதி ஆவணங்கள் புகுத்தப்பட்டதாகவும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது அந்தத் தடயவியல் நிறுவனம். இந்நிறுவனத்தின் அறிக்கையால் என்ஐஏ (NIA) அமைப்பு இதுவரை அருள்பணியாளர் ஸ்டேன் சுவாமி மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை, பொய்யானவை என்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து என்ஐஏ (NIA) அமைப்பின் உயர் அதிகாரிகள் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்பது வேதனையிலும் வேதனை! ஆனாலும், அவரின் தியாக மரணம், அவர் பூர்வீக இனமக்களின் அடையாளமாய் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றார் என்ற உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லி வருகின்றது.    

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1937-ஆம் ஆண்டு பிறந்தவர் ஸ்டேன் சுவாமி. சிறு வயதிலேயே சமூகப் பணிகளில் ஈடுபடுவதிலும், எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதிலும் பேரார்வம் காட்டினார். இயேசு சபைப் பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்ட பிறகு, தனது துறவு வாழ்வை இயேசுவின் வழியில் கட்டமைத்துக்கொள்ள விரும்பினார். அதன் காரணமாக, 1970-களில் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் சென்று தனது அர்ப்பண வாழ்வைத் தொடங்கினார். அங்குச் சென்ற அவர், பூர்வீக இனமக்களின் துன்ப துயரங்களை நேரில் கண்டு மனம் வெதும்பினார். விலாசமிழந்து விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு நிர்கதியாய் நிற்கும் அவர்களின் வாழ்வை மேம்படுத்த உறுதியேற்றார். அரசாலும், அதிகாரவர்கத்தாலும் அவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த உரிமைகளைப் பல்வேறு போராட்டங்களை நடத்தி பெற்றுத் தந்தார். ஜார்க்கண்ட் மட்டுமல்லாது, நாடு முழுவதிலுமுள்ள பூர்வீக இனமக்களுக்காக அவர் தன் வாழ்நாள் முழுவதும் போராடினார். இதனால் ஸ்டான் சாமி பூர்வீக இனமக்களின் மீட்பராக அடையாளமாகி உள்ளார்.   

இன்று நாம் திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். கிறிஸ்துப் பிறப்பு விழா மிக அண்மையிலுள்ள நிலையில், இன்றைய வாசகங்கள் மூவரை நமக்கு மிகப்பெரும் அடையாளங்களாக்க கொடுக்கின்றன.

‘இம்மானுவேல்’ என்னும் அடையாளம்:

முதலாவதாக, இறைத்தந்தையின் ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்து என்றும் நம் உடனிருக்கும் மீட்பராக, அதாவது, இம்மானுவேலாக அடையாளப்படுத்தப்படுகிறார். ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார் என்று மீட்பராகிய இயேசுவை அடையாளப்படுத்தும் இறைவாக்கினரான எசாயா, தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்கு அறியும்போது அவன் வெண்ணெயையும், தேனையும் உண்பான். அந்தக் குழந்தை தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்குமுன், உம்மை நடுநடுங்கச் செய்யும் அரசர்கள் இருவரின் நாடுகளும் பாலை நிலமாக்கப்படும் என்று கூறுவதன் வழியாக இம்மானுவேல் எப்படிப்பட்ட அடையாளமாக இருப்பார் என்பதையும் எடுத்துரைக்கின்றார்.

சாலமோன் அரசருக்குப் பிறகு இஸ்ரயேல் நாடு வடக்கு தெற்கு என இரண்டு துண்டுகளானது. ஒன்றாக வாழ்ந்து வந்த இஸ்ரயேல் மக்களும் இரண்டு பகுதிகளாகப்  பிரிந்து போயினர். ‘ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பது போல இப்பிளவை தனக்குச் சாதகமாக்கிக்கொண்ட பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் யூதாவின்மேல் படையெடுத்து வந்தான். அப்போது, சாலமோன் மன்னர் 46 ஆண்டுகள் செலவிட்டு, பார்த்துப் பார்த்துக் கட்டிய அந்த எருசலேம் ஆலயத்தைக் கடுமையாகச் சிதிலமடையச் செய்து அதிலிருந்த பொன், வெள்ளி போன்ற விலையுர்ந்த பொருள்களை கொள்ளையடித்ததுடன், அரசன் முதல் மக்கள் வரை எண்ணற்றோரைப் பாபிலோனுக்குச் சிறைபிடித்துச் சென்றான் (2 அர 24:1-17). அவ்வாறு சிறைபிடுத்துச் செல்லப்பட்ட இஸ்ரேல் மக்கள் சொல்லொண்ணா துயரமுற்று கடவுளை நோக்கிக் கண்ணீர் சிந்தி கதறி அழுதபோது, அவர்களை மீட்கும் இம்மானுவேலாக இயேசு என்னும் மெசியா அடையாளப்படுத்தப்பட்டார் என்பதையும் நம் நினைவுக்குக் கொணர்வோம். இதன் காரணமாகவே, மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: “சீயோனே, அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்;  தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார் (செப் 3:14-17) என்று இறைவாக்கினரான செப்பனியா நூலில் சிறைபிடித்து செல்லப்பட்ட இஸ்ரயேல் மக்களுக்கு மெசியா நம்பிக்கையின் அடையாளமாகக் காட்டப்படுகின்றார்.

'கன்னிப்பெண்' என்னும் அடையாளம்:

இரண்டாவதாக, கன்னிப் பெண்ணாகிய நம் அன்னை மரியா துணை மீட்பராக அடையாளப்படுத்தப்படுகின்றார். எவ்விதமான வரலாற்றுப் பின்புலமும் கொண்டிராத, ஏழைக்குடும்பத்தை சேர்ந்த எளிய பெண்ணான மரியா, மெசியா என்னும் மீட்பரை இவ்வுலகிற்கு அளிக்கும் கொடையாளராக, துணை மீட்பராக, மூவொரு கடவுளின் அன்னையாக அடையாளப்படுத்தப்படுகிறார். நமது முதல் பெற்றோர் புரிந்த பாவத்திற்கு ஆதிகாரணமான அலகையை அழித்தொழிப்பவராக (தொநூ 3:15), அதாவது, சாத்தான் என்னும் தீமையை அழிக்கும் பேராயுதமாக ஆண்டவராகிய கடவுளால் படைப்பின் தொடக்கத்திலேயே அடையாளப்படுத்தப்படும் நம் அன்னை மரியா, இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார் என்று மீண்டும் அவர் மீட்பரின் தாயாக இறைவாக்கினர் எசாயா வழியாக இவ்வுலகிற்கு அடையாளப்படுத்தப்படுகிறார். மறுபுறம் தன்னை இவ்வுலகிற்கு மீட்பரின் தாயாக அடையாளப்படுத்திய இறைத்தந்தையை, அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார் (லூக் 1:50-53) என்று தனது பாடலில் அவரின் மீட்பளிக்கும் பண்பு நலன்களை எடுத்துரைக்கின்றார்.

'நேர்மையாளர்' என்னும் அடையாளம்:

மூன்றாவதாக, இறைவனின் மீட்புத் திட்டத்தில் திரைக்குப் பின்னால் இருந்து செயல்பட்டவராக, தன்னை எவ்விதத்திலும் முன்னிலைப்படுத்திக்கொள்ளாத ஒரு நேர்மையாளராக யோசேப்பு அடையாளப்படுத்தப்படுகின்றார். ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு, உங்களைக் தூங்கவிடச்செய்யாமல் இருப்பதுதான் கனவு’ என்பார் அப்துல் கலாம். கனவுகளின் நாயகராக யோசேப்பை நாம் கொண்டாடினாலும், இறைவனின் மீட்புத்திட்டம் நிறைவேற தனது தூக்கத்தைத் தொலைத்தவர் அவர் என்று கூறினால் அது மிகையாகாது. காரணம், கனவுகளில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் வார்த்தைகளைக் கனக் கச்சிதமாய் செயல்படுத்திய மாவீரர் அவர். ஒரு சராசரி மனிதருக்கு இருந்த அத்தனை ஆசைகளையும் ஏக்கங்களையும் அவர் தன்னகத்தே கொண்டிருந்த போதிலும், இறைவனின் மீட்புத்திட்டத்திற்காக அவை எல்லாவற்றையும் தியாகம் செய்தவர்தான் யோசேப்பு. தன்னையும் கறைபடுத்திக்கொள்ளாமல், கருவில் இயேசுவை சுமந்தவளாய் கலக்கமுற்ற நிலையில் இருந்த அன்னை மரியாவையும் கறைபடுத்திவிடாமல், திருகுடும்பம் தியாகமேற்கத் திடமாய்ச் சிந்தித்தவர் யோசேப்பு. ‘உலகம் இகழ்ந்தால் என்ன, ஊரார் தூற்றினால் என்ன, வருவது வரட்டும், ஒரு கை பார்த்துவிடுவோம்’ என்று தீர்க்கமனம் கொண்டு தீவிரமாய்ச் செயல்பட்டவர். பழைய ஏற்பாட்டில் வரும் யோசேப்பு வழியாக, இஸ்ரயேல் மக்களை மீட்டெடுத்த இறைத்தந்தை, புதிய ஏற்பாட்டில் வரும் யோசேப்பு வழியாக இந்த ஒட்டுமொத்த மனுக்குலமும் மீட்புப்பெற உதவுகிறார். இந்த இரண்டு யோசேப்புகளும் நேர்மையாளர்களாக, நீதிமான்களாக, இறைத்தந்தைக்கு அடிபணிபவர்களாக, கனவுகளில் இறைத்திட்டத்தை அறிந்து அவைகளைச் செய்லபடுத்தும் செயல்வீரர்களாக அடையாளப்படுத்தப்படுவதை நாம் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.

யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார் என்ற இறைவார்த்தைகள் அவர் ஒரு நேர்மையாளர் என்பதற்குச் சான்று பகர்கின்றன. அன்னை மரியா தன் மகன் இயேவுடன் கல்வாரிப் பயண அனுபவங்களைப் பெற்றதுபோலவே, யோசேப்பும் பெற்றார். கர்ப்பவதியான மரியாவை பெத்லேகம் அழைத்துச் சென்றதும், அங்கிருந்து, அன்னை மரியாவையும், குழந்தை இயேசுவையும் எகிப்துக்குக் கூட்டிச்சென்றதும், இறுதியாக, எகிப்திலிருந்து மீண்டும் நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றதுவரையிலான யோசேப்பின் பயணம், ஒரு கல்வாரிப் பயணம் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது, அன்னை மரியாவுக்கு முன்பே யோசேப்பு கல்வாரி அனுபவங்களைப் பெற்றுவிட்டார் என்பதுதான் உண்மை.

2022-ஆம் ஆண்டுக்கான உலகம் முழுவதுமுள்ள ஊக்கம் அளிக்கும் மற்றும் செல்வாக்குமிக்க 100 பெண்களின் பட்டியலை பிபிசி செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் 2022-இல் உலகளவில் போராட்டக் களத்தின் மையத்தில் பணியாற்றிய பெண்களின் பங்களிப்பைப் பிரதிபலிக்கிறது. இரானில் துணிச்சலுடன் மாற்றத்தைக் கோரிய எதிர்ப்பாளர்கள் முதல் உக்ரைன் மற்றும் இரஷ்யாவில் மோதலையும் எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்திய பெண்கள் வரை இந்தப்பட்டியலில் இடம்பெற்றொருக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு துறையின் அடையாளமாகப் பிரதிபலிக்கின்றனர். இவர்களில் இந்திய நாட்டைச் மூவர் அடங்குவர். இம்மூவரில், சினேகா ஜவாலே என்ற பெண் ஒரு சமூகச் சேவகராகப் போற்றப்படுகிறார். இவரது வாழ்க்கை மிகவும் வலி நிறைந்த ஒன்று. 2000-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், அதிக வரதட்சணையை வழங்க இவரது பெற்றோர் தவறியதால், சினேகா ஜவாலேயின் கணவர் அவரை மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தினார். இதில் அவரது கழுத்து, மார்பு, வயிறு உள்ளிட்ட பகுதிகள் தீயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்தக் கொடூரம் அவரின் மூன்றரை வயது மகனின் கண்முன்னரே நிகழ்ந்தது. இந்நிகழ்விற்குப் பிறகு அவரது கணவர் தங்கள் மகனுடன் வெளியேறிவிட்டார். தனது பெற்றோராலும், கணவர் குடும்பத்தாலும் முற்றிலுமாகக் கைவிடப்பட்ட நிலையில், தன்னம்பிக்கை இழக்காதவராக தனது அயராத உழைப்பால் tarot card reader எனப்படும் அதிர்ஷ்ட அட்டை படிப்பவராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் மாறினார். இதன் வழியாகத் தனது வாழ்வுக்கான வருவாயை ஈட்டிக் கொள்ளத் தொடங்கினார். அதுமட்டுமல்லாது, இப்போது சிறந்ததொரு சமூகச் சேவகியாக மாறி வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டுள்ளப் பெண்களுக்கு நம்பிக்கை தரும் அடையாளமாக இருக்கின்றார்.   

ஒரு கிறிஸ்தவராக எனது அடையாளம் எது? நான் யாரை அடையாளப்படுத்துகின்றேன்? நான் யாருக்கான அடையாளமாக இருக்க விரும்புகின்றேன்? என்ற கேள்விகளை எழுப்பி விடை தேடுவோம். பிறருக்கு நம்பிக்கைத் தரும் அடையாளமாக அமையாத நமது வாழ்க்கை எப்போதும் அர்த்தம் இழந்துபோகும் என்பதை உணர்வோம். இந்தக் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நாம் பிறருக்கு நம்பிக்கை தரும் உடனிருப்பின் அடையாளமாகத் திகழ இறையருள் வேண்டி இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2022, 14:08