தேடுதல்

திருப்பலியில் பங்குபெறும் இறைமக்கள் திருப்பலியில் பங்குபெறும் இறைமக்கள்  

எளிமையாகக் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடுவோம்

ஒவ்வொரு குடும்பமும் மற்றும் துறவறக் குழுமும் தியாகங்களைச் செய்ய முன்வரவேண்டும் : இராஞ்சி உயர்மறைமாவட்ட துணை ஆயர் Theodore Mascarenhas.

செல்வராஜ் சூசைமாணிக்கம்-வத்திக்கான்

பிறரன்பு பணிகள் வழியாக ஈர்க்கப்பட்டு ஆழ்ந்த ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்துப் பிறப்பு விழாவைக் கொண்டாடுமாறு நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ளார் இராஞ்சி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயர் Theodore Mascarenhas.

திருவருவகைக் காலம் குறித்த இவ்வாண்டு மறைமாவட்டச் செய்தி மடலில் இவ்வாறு அழைப்புவிடுத்துள்ள துணை ஆயர் Mascarenhas அவர்கள், பிறரன்புப் பணிகள், பரிவிரக்கம், கருணை ஆகியவற்றை அடிப்டையாகக் கொண்ட இவ்விழாவை ஒன்றிணைந்துக் கொண்டாட நம்பிக்கையாளர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு, இதுவே முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்றும், இப்பெருந்தொற்று மக்கள் அனைவருக்கும் சொல்லொணாத் துயரத்தையும் வேதனையையும் தந்தது என்று எடுத்துரைத்துள்ள துணை ஆயர் Mascarenhas அவர்கள், இவ்விழாவை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடும் விதத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவுமாறும் நம்பிக்கையாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் விண்ணப்பித்துள்ளார்.

திருவருகைக் காலத்தில், கடவுள் நம்மை எவ்வளவு அன்பு கூர்ந்திருக்கிறார், இன்னும் எவ்வளவு நம்மை அன்பு கூரவிருக்கிறார் என்பதைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம் என்றும், “நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ள நமதாண்டவர் இயேசுவின் புதிய கட்டளைக்குப் பதில்மொழி கொடுக்க நாம் முயலவேண்டும் என்றும் கூறியுள்ளார்  துணை ஆயர் Mascarenhas

ஒவ்வொரு குடும்பமும் மற்றும் துறவறக் குழுமும் தியாகங்களைச் செய்ய முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள துணை ஆயர் Mascarenhas அவர்கள், இத்திருவருகைக் காலத்தில் பிறரன்புப் பணிகளுக்கு நன்கொடைகள் அளிக்க முன்வரவேண்டும் என்றும், இதனைக் கொண்டே வறுமையில் உழல்வோருக்கும், தேவையில் இருப்போருக்கும் நாம் உதவமுடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஒப்பீட்டளவில் வலுவான கிறிஸ்தவத்தைக் கொண்டுள்ளது. இங்குள்ள 3 கோடியே 20 இலட்சம்  மக்கள்தொகையில் 4.3 விழுக்காடு மதச் சிறுபான்மையினர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2022, 13:20