தேடுதல்

உரோம்  இஸ்பானிய வளாகத்தில் அன்னை மரியா இரு உருவம் உரோம் இஸ்பானிய வளாகத்தில் அன்னை மரியா இரு உருவம் 

நேர்காணல்: தூய கன்னி மரியாவின் அமல பிறப்பு பெருவிழா

எட்டாம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்ட புனித அன்னாவின் கருத்தரிப்பு (Concezione di s. Anna) என்ற விழா இன்று நாம் கொண்டாடுகின்ற அன்னை மரியாவின் அமல உற்பவம் என்ற விழாவிற்கு ஆதிகாரணமாக அமைந்திருக்கிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

அருள்பணி சவரி ராஜ் அவர்கள் மரியின் ஊழியர் ஆண்கள் சபையின் பொது ஆலோசகர்களில் ஒருவர். அச்சபையின் உரோம் தலைமையகத்தில் இருந்துகொண்டு ஆறு ஆண்டுகளுக்குமேலாக பொது ஆலோசகராகப் பணியாற்றிவரும் இவர், மரியின் ஊழியர் மூன்றாம் சபையின் பொறுப்பாளராகவும் இருக்கின்றார். மேலும், இவர் மரியின் ஊழியர் சபைக்கும் திருப்பீடத்திற்கும் இடையே தொடர்பாளராகவும் பணியாற்றி வருகிறார். டிசம்பர் 8, இவ்வியாழனன்று திருஅவை, தூய கன்னி மரியாவின் அமலப் பிறப்பு பெருவிழாவை சிறப்பித்தவேளை, அன்னை மரியா பாவம் ஏதுமின்றி பிறந்தார் என்பதன் விவிலியப் பின்புலம், அதன் வரலாறு, அதன் சிறப்பு போன்றவை குறித்த தன் சிந்தனைகளை இன்றைய நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்கிறார் அருள்பணி சவுரி ராஜ்.

தூய கன்னி மரியாவின் அமல பிறப்பு பெருவிழா- அருள்பணி சவரி ராஜ்

அன்னை மரியாவின் அமல உற்பவம் (பெருவிழா, டிசம்பர் 8) அருள்பணி சவுரி ராஜ் ம.ஊ.ச.

மனுக்குல மீட்பரான இயேசு கிறஸ்துவின் பயன்களை முன்னிட்டு கன்னிமரியா கருவான நொடிப்பொழுதிலேயே எல்லாம் வல்ல இறைவனது தனிப்பட்ட அருளாலும் சலுகையாலும் ஜென்மப் பாவமாசு அற்றவராக உற்பவித்தார் . அன்னை மரியா அமல உற்பவி – மறைக்கோட்பாடு

மாசு மருவற்ற செம்மறிப் புருவயாம் இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு ஈன்றளித்த அன்னை மரியாவும் மாசு மருவற்றவர்தான். ஆகவேதான் மாசு மருவற்ற உற்பவத்தை அதாவது அமல உற்பவத்தை அன்னை மரியாவுக்கு கொடையாக வழங்கியுள்ளார் இறைவன். உயர்வுமிக்க இம்மறைகோட்பட்டினை நினைவுகூறும் விதமாக அன்னை மரியாவின் அமல உற்பவத்தை பெருவிழா என்று டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி அகில உலக திருச்சபை கொண்டாடி மகிழ்கிறது. இனி இப்பெருவிழா பற்றிய நமது அலசல்களை ஆரம்பிப்போம்.

விவிலியப் பின்னணி

வழக்கம்போல் விவிலியத்தில் நேரடியான சான்றுகள் இல்லை என்றாலும், வழக்கத்திற்கு மாறாக சில விவிலிய ஆதாரங்கள் இவ்விழாவிற்கு மறைமுகமாக பலம் சேர்க்கின்றன. பாவத்தைக் கொணர்ந்த பழைய ஏற்பாட்டின் ஏவாவிற்கு எதிராக மீட்பினைக் கொணர்ந்த புதிய ஏவாவாக அன்னை மரியா இருப்பதனால், தொடக்க நூல் 3: 15-இல் “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்று கூறப்பட்டது அன்னை மரியாவின் அமல உற்பவத்திற்கு சான்றாக இருக்கிறது என்று விவிலிய அறிஞர்களும் பாரம்பரியமும் ஏற்றுக்கொள்கிறனர். மேலும், லூக்கா நற்செய்தி 1: 28-இல் “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்ற கபிரியேல் வானதூதர் அன்னை மரியாவை வாழ்த்தியச் செய்தி இறைவனின் வாழ்த்துச் செய்தியாகவே இருக்கிறது. கடவுளுக்கு அடுத்தபடியாக அருள் நிறைந்தவராக வாழ்த்தப்பட்டவர் அன்னை மரியாதான். அத்தகைய அருள் அன்னை மரியாவுக்கு தன் உற்பவத்திலேயே கிடைத்துவிட்டது, ஆகவே மாசு மருவற்ற அமல உற்பவியாக உற்பவித்தார் அன்னை மரியா. மேலும் விவிலியத்தில் அன்னை மரியாவின் அமல உற்பவத்திற்கு மேற்கோள் காட்டப்படும் மற்ற விவிலிய ஆதாரங்கள்: நோவாவின் பேழை (தொநூ 6:8-8:19), யாக்கோபின் இறையனுபவ ஏணி (தொநூ 28:12), கருகாமல் எரியும் புதர் (விப 3:2-3), இறைவனின் புனித பேழை (விப 31:1-11), தாவீதின் கோபுரம் (இபா 4:4) வாயில் மூடப்பட்ட தோட்டம் (இபா 4:12).

வழக்கம்போல் விலக்கப்பட்ட விவிலியமான யாக்கோபின் நற்செய்தியின் முதல் 5 அதிகாரங்கள் அன்னை மரியா எப்படி கருவில் உற்பவமானார் என்பதை தெளிவாக விளக்குகிறது. முதிர்ந்த வயதில் குழந்தை பாக்கியம் இல்லையே என்று ஏங்கி தவித்த சுவக்கின் மற்றும் அன்னா தம்பதியர், இறைவனிடம் இடைவிடாது செபிக்கின்றனர். சுவக்கின் பாhலைவனத்தில்; 40 பகலும் 40 இரவும் தங்கி உண்ணா நோன்பு இருந்து செபிக்கின்றார் (யாக்.நற் 1:10). அவ்வாறே அன்னாவும் வீட்டில் இருந்தவாறு செபிக்கின்றார். இருவரது இடைவிடா செபத்தையும் ஆண்டவர் கேட்டு, இருவருக்கும் ஆண்டவர் தோன்றி குழந்தை பிறக்கும் என்ற நற்செய்தியை (யாக்.நற் 4:1,3) அறிவிக்கின்றார். இருவரும் கூடி வாழ்ந்து, ஒரு பெண் குழந்தையைப் பெற்று எடுக்கின்றனர். அதற்கு மரியா என்று பெயரிடுகின்றனர் (யாக்.நற் 5:5-10).

நேரடியாக அன்னை மரியாவின் அமல உற்பவத்திற்கு விவிலியத்தில் ஆதாரங்கள் இல்லை என்றாலும், அன்னை மரியாவின் அமல உற்பவத்தோடு இணைத்துப் பேசப்படுகின்ற விவிலியச் சான்றுகள் இவ்விழாவிற்கு பலம் சேர்க்கின்றன என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

வரலாற்றுப் பின்னணி

எட்டாம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்ட புனித அன்னாவின் கருத்தரிப்பு (Concezione di s. Anna) என்ற விழா இன்று நாம் கொண்டாடுகின்ற அன்னை மரியாவின் அமல உற்பவம் என்ற விழாவிற்கு ஆதிகாரணமாக அமைந்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. மேலோட்டமாக பார்க்கும்போது இரண்டு விழாக்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தோன்றினாலும், சற்று ஆழமாக உற்று நோக்குகின்றபோது இரண்டு விழாக்களுக்கும் மலையளவு வித்தியாசங்கள் இருப்பதைக் காணமுடிகிறது.

அன்றைய அன்னாவின் கருத்தரிப்பு விழாவில் அன்னா (அன்னை மரியாவின் தாய்) மையமாக இருந்தார், இன்றைய அன்னை மரியாவின் அமல உற்பவ விழாவில் அன்னை மரியா மையமாக இருக்கிறார். அன்றைய விழாவில் கரு உருவானது பெருமையாகப் பேசப்பட்டது, இன்றைய விழாவில் அமல உற்பவமாக உருவானது மறைபொருளாக கருதப்பட்டு மறைகோட்பாடக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

வரலாற்றில் வழக்கம்போல் வருகின்ற பல்வேறு சிக்கல்களையும் தாண்டி இவ்விழாவானது திருத்தந்தையின் அதிகாரத்தால் கி.பி. 1854-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அன்னை மரியா அமல உற்பவி என்ற மறைகோட்பாட்டினை மையமாகக் கொண்டிருப்பதால் இவ்விழா பெருவிழாவாகச் சிறப்பிக்கப்படுகிறது. மேலும், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் பாதுகாவலியான அமல உற்பவ அன்னையின் விழாவாக இவ்விழா இருப்பதாலும் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விழாவாக அமைகிறது.

விவிலியத்தில் நேரடி சான்றுகளும், வரலாற்றில் தொடக்க விழாவோடு தொடர்பும் இல்லாமல் இருந்தபோதிலும், இருக்கின்ற மறைமுக விவிலிய சான்றுகளைக் கொண்டும், பாரம்பரியத்தின் விழாக் கொண்டாட்டங்களைக் கொண்டும், மக்களின் எளிய ஆழமான விசுவாசத்தின் அடிப்படையிலும் உருவான ஒரு விழாவாக இவ்விழா அமைந்திருக்கிறது.

மறைகோட்பாட்டால் வளர்ந்த வழிபாடு 

ஒரு விசுவாச உண்மையானது மறைகோட்பாடாக அறிவிக்கப்படவேண்டுமென்றால் பின்வரும் நான்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்:

  • 1.              விவிலிய ஆதாரம் இருக்கவேண்டும்
  • 2.              திருஅவையின் தந்தையர்களின் போதனையில் பேசப்பட்டிருக்க வேண்டும்
  • 3.              திருஅவையின் பாரம்பரிய வழிபாடுகளில் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்
  • 4.              மக்களின் எளிய விசுவாசத்தில் ஆழமாக ஊன்றியிருக்க வேண்டும்

இந்நிபந்தனைகளை நோக்குகின்றபோது அன்னை மரியா அமல உற்பவி என்ற மறைகோட்பாடானது முழுக்க முழுக்க மக்களின் எளிய விசுவாசத்தின் உருவான ஒன்றாக இருக்கிறது, ஏனெனில் மற்ற ஆதாரங்கள் இதற்கு மிகக் குறைவாகவே இருக்கின்றன என்பதை நாம் மறுக்கமுடியாது. இருப்பினும் மக்களின் எளிய விசுவாசத்தை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் கி.பி. 1854-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி திருத்தந்தையின் திருப்பணிக்காக இறைவனால் தரப்பட்டிருக்கும் சிறப்புக் கொடையான தவறாவரம் (Infallibility) எனும் உரிமையைப் பயன்படுத்தி Ineffabilis Deus என்று தொடங்கும் ஆணையின் வழியாக அன்னை மரியா தன் தாயின் கருவில் உருவானது முதலே அமலியாக இருந்தார் என்று பிரகடனப்படுத்தினார்.

மக்களின் எளிய விசுவாசம் அவர்களின் வாழ்க்கை முறையிலும், திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களிலும் வெளிப்படுகின்றன. அவ்வறே அன்னை மரியா அமல உற்பவி என்ற மக்களின் விசுவாசம் அவர்களின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் வெளிப்பட்டன. ஆகவே நாம் இவ்விழாவின் திருவழிபாட்டுக் கொண்டாட்டப் பின்னணியை புரிந்துகொள்வோமாயின் இம்மறைக்கோட்பாட்டையும் அதனோடு சம்மந்தப்பட்டவற்றையும் புரிந்துகொள்வது எளிதாகிவிடும். இனி திருவழிபாட்டுப் பின்னணியைப் பார்ப்போம்.

வழிபாட்டுப் பின்னணி

கீழைத் திருச்சபை

                  கி.பி. எட்டாம் நூற்றாண்டில் புனித அன்னா கருத்தரிப்பு என்ற விழாவானது டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வந்தது. இதற்கான சான்றுகள் கிரேத்தே நகர அந்ரேயவின் பாடல்களிலும் எவ்பேய நகர யோவானின் மறையுரைகளிலும் காணக்கிடக்கின்றன. மேலும் செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகின்ற அன்னை மரியாவின் பிறப்பு விழாவோடு ஒத்துப்போகிறது (டிசம்பர் மாத 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாத 8-ஆம் தேதி முடிய சரியாக 9 மாதங்கள், ஒரு குழந்தை பிறக்க 9 மாதங்கள் போதும் என்று அறிவியல் கூறுகிறது).

                  பைசான்டியன் திருச்சபையில் இவ்விழா மற்ற அன்னை மரியாவின் விழாக்களைப்போல் முக்கியத்தவம் பெறவில்லை என்பது உண்மை. இவ்விழாவிற்கு ஒரு நாள் முன்தயாரிப்பு (Proeortia) மட்டுமே உண்டு, பிந்தைய விழா கால கொண்டாட்டம் (Meteortia) கிடையாது, ஏனெனில் இவ்விழாவில் அன்னை மரியாவைவிட அவரின் அன்னையான அன்னாவிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆகவே இவ்விழா பைசான்டியன் திருச்சபையில் அதிக முக்கியத்துவம் பெறவில்லை.

கீழைத் திருச்சபையில் அன்னை மரியாவை பாவமற்றவர் (without sin) கறைபடாதவர் (without stain) அமலி (Immaculate) மாசற்றவர் (Innocent) முழுமையானவர் (Integral) என்று ஏற்றுக்கொள்வதில் எவ்வித தயக்கமும் இல்லை. மேலும் இக்குணங்கள் அன்னை மரியாவிற்கு அவரின் உற்பவத்திலிருந்து இருந்ததா? அல்லது பின்பு உருவானதா? என்ற தேவையற்ற வாதங்கள் எழவில்லை. ஆகவே இவ்விழாவைக் கொண்டாடுவது அவர்களுக்கு எளிதாக அமைந்தது.

மேலைத் திருச்சபை

                  கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி பனித கன்னி மரியாவின் அவதரிப்பு (Concezione della Santa Vergine Maria) என்ற விழாவானது மேலைத் திருஅவையில் கொண்டாடப்பட்டது. இவ்விழா கீழைத் திருச்சபையில் கொண்டாடப்பட்டு வந்த புனித அன்னாவின் கருத்தரிப்பு என்ற விழாவோடு ஒத்ததாக இருந்தது.

                  கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இவ்விழாவானது உரோமைத் திருஅவையின் திருவழிபாட்டு நாள்காட்டியில் இடம்பிடித்தது. குறிப்பாக 1439-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்ற பொதுச்சங்கம் இவ்விழாவை டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி எல்லா கிறிஸ்தவ ஆலயங்களிலும் கொண்டாட வேண்டும் என்று பணித்தது. மேலும் இதை மறைக்கோட்பாடாக அறிவிக்க முயற்சி செய்தது, பல்வேறு காரணங்களால் இம்முயற்சி கைகூடாமல் போயிற்று.

                  நான்காம் சிக்ஸ்துஸ் திருத்தந்தையாக இருந்தகாலத்தில் இவ்விழாக் கொண்டாட்டமானது தனித்துவம் பெற்றது. கி.பி. 1476-ஆம் ஆண்டு Prae excelsa என்ற ஆணையின் வழியாக சிறப்பு திருப்பலி மற்றும் கட்டளைச் செபத்துடன் இவ்விழாவைக் கொண்டாட வேண்டும் என்று பணித்தார்.

                  கி.பி. 1693-ஆம் ஆண்டு திருத்தந்தை பன்னிரெண்டாம் இன்னோசென்ட் இவ்விழாவினை எட்டுநாள் முன் தயாரிப்புடன் (Octave) கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார்.

                  கி.பி. 1708-ஆம் ஆண்டு திருத்தந்தை பதினொன்றாம் கிளமெண்ட் இவ்விழாவினை சிறப்பு திருப்பலி, கட்டளை செபம் மற்றும் பல்வேறு திருவழிபாட்டுச் சடங்குகள் வழியாக மிகவும் விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று பணித்தார்.

                  திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் டிசம்பர் மாதம் 8-ஆம் தேதியன்று இவ்விழாவின் நினைவாக உரோமையில் இருக்கும் மரியன்னை பேராலயத்தில் சிறப்பு சிற்றாலயம் அமைத்து இவ்விழாவானது திருவருகை காலத்தின் இரண்டாம் ஞாயிற்று கிழமையில் வந்தாலும் இவ்விழாவை பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

                  கி.பி. 1854-ஆம் ஆண்டு வெளியான அன்னை மரியா அமல உற்பவி என்ற மறைக் கோட்பாட்டிற்கு பின்பு 1863-ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் இவ்விழாவிற்கு கன்னி மரியாவின் அமல உற்பவம் என்ற நிலையானப் பெயரைச் சூட்டி அகில உலக திருஅவையில் உள்ள மரியன்னையின் பெருவிழாக்களில் ஒன்றாக அறிவித்தார்.

                  கி.பி. 1858-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் ஜுலை மாதம் 16-ஆம் தேதி வரை அன்னை மரியா பெர்நதெத் என்ற சிறுமிக்கு அளித்த காட்சியில் அதிலும் சிறப்பாக மார்ச் மாதம் 25-ஆம் தேதி அளித்த காட்சியில் நானே அமல உற்பவம் என்று தன்னையே வெளிப்படுத்தியதாக கூறப்பட்டிருக்கின்றது.

                  கி.பி. 1879-ஆம் ஆண்டு திருத்தந்தை பதிமூன்றாம் லியோ இவ்விழாவிற்கு திருவிழிப்பு வழிபாட்டையும் (Vigil) உருவாக்கினார்.

                  கி.பி. 1960-ஆம் ஆண்டு ஏற்பட்ட திருவழிபாட்டு சீர்திருத்தம் இவ்விழாவினை மரியன்னையின் பெருவிழாக்களில் ஒன்றாக அறிவித்தது. மேலும் இவ்விழாவின்போது கொண்டாடப்பட்டு வந்த எட்டு நாள் முன் தயாரிப்பு மற்றும் திருவிழிப்பு வழிபாடு போன்றவை தடை செய்யப்பட்டது.

அன்னை மரியா அமல உற்பவி என்ற திருவழிபாட்டு விழாவைக் கொண்டாடுவதில் மக்களுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை. அதே நேரத்தில் அன்னை மரியா அமல உற்பவி என்ற மறைக்கோட்பாட்டினை ஏற்றுக்கொள்வதில்தான் பலருக்கு சிக்கலாக இருந்தது. இச்சிக்கலுக்கு தீர்வுகானும் விதமாக பிரன்சிஸ்கன் சபையைச் சேர்ந்த துறவி ஜான் டன்ஸ்காட் என்பவரது விளக்கம் அமைந்திருந்தது:

மரியன்னையின் அமல உற்பவமானது கிறிஸ்து கொணர்ந்த மீட்பிலிருந்து எள்ளளவும் ஒதுக்கப்படவில்லை, விலகியிருக்கவுமில்லை. மாறாக இது, எல்லாம் வல்லவரின், எங்கும் நிறைந்தவரின் ஒரே மீட்பரான கிறிஸ்துவின் வல்லமை மற்றும் மீட்புத் திட்டத்திற்கு உட்பட்டதே. இதற்கு விவிலியத்திலோ பாரம்பரியத்திலோ எத்தகைய எதிர்ப்பையும் காணமுடியாது. ஆகவே, மரியா அமல உற்பவியாக இருப்பது இறைவனுக்கு வசதியாக இருந்தது, தேவையானதாக இருந்தது, அவரால் கூடுமானதாக இருந்தது, எனவே அதை செய்து முடித்தார்.

ஆகவே நாமும் ஜான் டன்ஸ்காட்டின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு தேவையற்ற வீண் ஆராய்ச்சிகளைத் தவிர்த்து அன்னை மரியா மாசு மருவற்றவராக அமலியாக உற்பவித்தார் என்று விசுவசிப்போம். மேலும், மகிழ்ச்சியோடு இவ்விழாவை டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி பொருள் உணர்ந்து கொண்டாடி மகிழ்வோம். அமலோற்பவியே அருள் நிறை தாயே வாழ்க! வாழ்க!! மாசறு கன்னியே மாபரன் தாயே வாழ்க! வாழ்க! வாழ்க தாயே, வாழ்க நீயே, வாழ்க! வாழியவே!!! அன்னையே வாழ்க! அமலியே வாழ்க! வாழ்க! வாழியவே!!!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2022, 14:46