தேடுதல்

திருத்தந்தையின் கைகளை முத்தமிடும் மாற்றுத்திறனாளி திருத்தந்தையின் கைகளை முத்தமிடும் மாற்றுத்திறனாளி  

விசுவாசிகளான மாற்றுத்திறனாளிகள் குறித்த 4 காணொளிகள்

உண்மையில் ஒன்றிணைந்த பயணமாக இருக்க, திருஅவை யாரையும் ஒதுக்கிவிடாமல் அனைவரின் குரலையும் கேட்க வேண்டும் : கர்தினால் Kevin Farrell

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பில் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெறவிருக்கிற 16-வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒரு பகுதியாக, தங்கள் சமூகங்களில் உள்ள தலத்திருஅவைகளுக்கு வழங்கக்கூடிய பங்களிப்புகளைப் பற்றி விவாதிக்க கத்தோலிக்க மாற்றுத்திறனாளிகள் பலரை  அழைத்துள்ளது பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை.

வத்திக்கானில் நடைபெற்ற தொடர் கூட்டங்களை அடுத்து இம்மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை விவரிக்கும் விதமாக உலக ஆயர் மாமன்றத்திற்கு இந்த நான்கு காணொளிகளையும் வழங்கியுள்ளது, இத்திருப்பீட அவை. 

உண்மையில் ஒன்றிணைந்த பயணமாக இருக்க, திருஅவை யாரையும் ஒதுக்கிவிடாமல் அனைவரின் குரலையும் கேட்க வேண்டும் என்று இதுபற்றி கருத்துத் தெரிவித்துள்ளார் இத்திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் Kevin Farrell,

மேலும், திருஅவைக்கு மாற்றுத் திறனாளிகளின் பங்களிப்பு குறித்து ஆராயும் தங்களின் முயற்சிக்குப் பேராதரவு வழங்கியுள்ள ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைச் செயலகத்திற்குத் தான் நன்றி செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார் கர்தினால் Kevin Farrell.

இன்னும் இதுகுறித்து கருத்துத் தெரிவித்தபோது, பொதுநிலையினர்,  குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை எடுத்துள்ள இத்தகையதொரு முயற்சி ஒரு மகிழ்ச்சியான எடுத்துக்காட்டாக அமைகிறது என்றும், திருஅவை உண்மையிலேயே அனைவருக்குமான இல்லம் என்பதை எடுத்துக்காட்ட, இம்முயற்சியானது புதிய எல்லைகள் மற்றும் ஒத்துழைப்புக்கான வழிகளைத் திறந்துள்ளது என்றும் கூறியுள்ளார் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் மாரியோ கிரெக்.

முதல் காணொளி  டிசம்பர் 6-ஆம் தேதியன்று, 'இணை பொறுப்பு' என்ற தலைப்பில் வெளியிடப்படும் என்றும், நான்காவது மற்றும் இறுதி காணொளியானது “ஒரு வியக்கத்தக்க செயல்முறை” என்ற தலைப்பில் ஜனவரி 26-ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2022, 15:17