தேடுதல்

உக்ரைனில் துன்புறும் மக்களுக்காக இறைவேண்டல் செய்யும் திருத்தந்தை உக்ரைனில் துன்புறும் மக்களுக்காக இறைவேண்டல் செய்யும் திருத்தந்தை  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 35-2-வினைவிதைப்போர் வினை அறுப்பர்!

கடவுளுக்குப் பிரமாணிக்கம் உள்ள பிள்ளைகளாக நாம் வாழும்போது, கடவுள் தனது வானதூதர் வழியாக நமக்குத் தீவினைச் செய்வோரை அழித்தொழித்து நம்மைக் காப்பாற்றுவார்
திருப்பாடல் 35 /2

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘பகைமை வெறுத்து நன்மை புரிவோம்!  என்ற தலைப்பில் 35-வது திருப்பாடலில் 1 முதல் 4 வரையுள்ள  இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 5 முதல் 7 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது அமைந்த மனதுடன் இறைவார்த்தைகளுக்குச் செவிமடுப்போம். ஆண்டவரின் தூதர் அவர்களை விரட்டியடிக்க, காற்றில் பறக்கும் பதர்போல அவர்கள் சிதறட்டும். ஆண்டவரின் தூதர் அவர்களைத் துரத்திட, அவர்கள் வழி இருளும் சறுக்கலும் ஆகட்டும். ஏனெனில், காரணமின்றி எனக்குக் கண்ணி வைத்தனர்; காரணமின்றி எனக்குக் குழிதோண்டினர். (வசனம் 5-7)

இந்த இரண்டு இறைவசனங்களிலும் தாவீது அரசர் இரண்டு காரியங்கள் குறித்துப் பேசுகிறார். முதலாவதாக, ஆண்டவரின் தூதர் அவர்களை விரட்டியடிக்க காற்றில் பறக்கும் பதர்போல அவர்கள் சிதறட்டும் என்கிறார். இதே கருத்தை, பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். பொல்லார் நீதித் தீர்ப்பின்போது நிலைநிற்க மாட்டார்; பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார் (திபா 1:4) என்று முதல் திருப்பாடலில் 4-வது இறைவசனத்தில் வெளிப்படுத்துகின்றார்.

பதர் என்ற வார்த்தைக் குறித்து நாம் பலமுறை கேள்விப்பட்டுள்ளோம். ‘நீ பதர் போன்றவன்’ அதாவது’ ‘எதற்கும் தகுதி இல்லாதவன்’ என்ற அர்த்தத்திலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. பதர் என்பது கருக்காய். இது நெல் போலவே தோன்றும், ஆனால் உள்ளே அரிசியிருக்காது; ஆதலால் இலேசாக இருக்கும். அறுவடைக்குப் பின்பு களத்துமேட்டில் கொட்டியுள்ள நெல்லைத் தொழிலாளர்கள் முறங்களில் அள்ளித் தலைக்கு மேலே தூக்கி முறத்தைச் சாய்த்துக் குலுக்கக் குலுக்கக் கனமான நெல் காலடியில் குவியும்; பதரோ காற்றில் பறந்து தொலைவில் போய் விழும். இப்படி நெல் ஓரிடத்திலும் பதர் வேறிடத்திலுமாகப் பிரிந்துவிடும். என்று பதர் என்ற வார்த்தைக் குறித்து விக்சனரி இணையதளம் தெரிவிக்கிறது. (நன்றி : விக்சனரி)

பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும் (குறல் 191) என்ற குறள் வழியாக வள்ளுவர் பெருந்தகையும் மனித வாழ்வில் பதர்போன்றவர்கள் யார் என்பதை எடுத்துக்காட்டுகின்றார். விரும்புவோர், விரும்பாதோர் எனக் கேட்போர் அனைவரும்  வெறுக்கும்படியான பயனற்ற கருத்துக்களை  விரிவாகச் பேசுபவன்,   நண்பன் பகைவன் எனப் பாகுபாடின்றி  அனைவராலும் இகழப்படுவான். அப்படி  பலகாலம் விரித்துரைக்கும் அவனது  வெற்றுரையால்  அவன்  பெற்ற  புகழ், பெருமைகள் அனைத்தும் படிப்படியாக  நீங்கி  மனிதனாக  மதிக்கப்படாமல் மனிதருள் பதர் என்றே உணர்த்தப்படுவான் என்பதே இக்குறளுக்கு விளக்கமாக அமைகிறது. ஆக, இதன் அடிப்படையில் தனது எதிரிகள் அனைவரும் பதர் போன்று பறந்துபோய்விட வேண்டும் என்றும், பயனற்று அவர்கள் ஒன்றுமில்லாமல் ஆகிவிடவேண்டுமெனவும் தாவீது அரசர் விரும்புகின்றார்.   

இரண்டாவதாக,  ஆண்டவரின் தூதர் அவர்களைத் துரத்திட, அவர்கள் வழி இருளும் சறுக்கலும் ஆகட்டும் என்கிறார். தீயவர்களும், பொல்லாதவர்களும், கடவுளுக்கு எதிரானவர்களும் எப்போதும் தெரிந்துகொள்வது இருள் நிறைந்த வழிகளைத்தான். மேலும் அவர்கள் தீவினைச் செயல்களால் சறுக்கிவிழுந்து மடிவதும் அந்த இருளில்தான் என்பதை நமது அன்றாட வாழ்வில் நாம் கண்டுணர்கின்றோம். இதனை மனதில் கொண்டே, சிலர் காரிருளிலும் சாவின் நிழலிலும் கிடந்தனர்; விலங்கிடப்பட்டுத் துன்பத்தில் உழன்றனர். ஏனெனில், அவர்கள் இறைவனின் கட்டளைகளை எதிர்த்து நின்றனர்;  உன்னதரின் அறிவுரைகளைப் புறக்கணித்தனர் (திபா 107:10) என்று இருள் நிறைந்த வாழ்வில் தீயவர்களுக்கு நிகழும் அழிவு குறித்து எடுத்துரைக்கும் தாவீது அரசர், இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர் (திபா 112:4) என்று கூறுவதன் வழியாகக் கடவுளை நம்புவோருக்கு ஒளிநிறைந்த வாழ்வில் கிடைக்கும் நற்கொடைகள் பற்றியும் எடுத்துக்காட்டுகின்றார்.  இதன் காரணமாகவே, இயேசுவும் மக்களைப் பார்த்து, தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால், அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும் (யோவா 3:20) என்றும் “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (யோவா 8:12) என்றும் கூறுகின்றார்.

1965 போர்: சிறப்பு ஆப்ரேஷனில் சறுக்கிய பாகிஸ்தான் - இந்தியா சுற்றி வளைத்தது எப்படி? என்ற கட்டுரை ஒன்றை இணையத்தில் நான் வாசித்தேன். அதாவது, 1965-ஆம் ஆண்டு செப்டம்பர் 6 மற்றும் 7-ஆம் தேதிக்கு இடைப்பட்ட  இரவில், பாகிஸ்தானின் பி-57 விமானம் இந்திய நிலைகள் மீது குண்டு வீச புறப்பட்டபோது, ​​மூன்று சி-130 ஹெர்குலிஸ் சரக்கு விமானங்களும் அதைப் பின்தொடர்ந்து, இந்திய எல்லையை நெருங்கின. ஒவ்வொரு விமானத்திலும் சிறப்புப் படைக் குழுவின் அறுபது சிறப்புப் படைப்பிரிவினர் இருந்தனர். இரவின் இருளில் மூன்று இந்திய விமானத் தளங்களான ஹல்வாரா, ஆதம்பூர் மற்றும் பதான்கோட் ஆகியவற்றில் பாராசூட் மூலம் தரையிறங்கி, அந்தத் தளங்களைக் கைப்பற்றி அங்குள்ள இந்திய விமானப்படை விமானங்களை அழிப்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. இரவு 2 மணியளவில், மேஜர் காலித் பட் தலைமையிலான 60 பாகிஸ்தான் சிறப்புப் படைப்பிரிவினர் பதான்கோட்  விமானப்படை தளம் அருகே தரையிறங்கினர். ஒன்றன் பின் ஒன்றாகப் பல இடையூறுகள் அவர்களைச் சோதித்தன. விமான தளத்தைச் சுற்றியிருந்த கால்வாய்கள், நீர் வீழ்ச்சிகள் மற்றும் சேறு நிரம்பிய வயல்கள் காரணமாக அவர்கள் முன்னேறிச்செல்வது மிகவும் கடின மாக இருந்தது. மூன்று மணி நேரத்திற்குள் பொழுது விடியத்தொடங்கியது. அதற்குள் ஒரு கிராமவாசி, பாகிஸ்தானியர்கள் அங்கு தரையிறங்கியிருப்பது குறித்து பதான்கோட் துணை பகுதி தலைமையகத்திற்குத் தகவல் கொடுத்தார். இந்தச் சலசலப்புக்கு இடையே ஏறத்தாழ 200 பேர் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். அடுத்த இரண்டு நாட்களில் பெரும்பாலான சிறப்புப் படைப்பிரிவினர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களை வழிநடத்திய மேஜர் காலித் பட்டும் பிடிபட்டார். ஆக, இருளில் தீமையான காரியங்களை நிகழ்த்த விரும்பியோர், அந்த இரவின் செயலாலேயே வீழ்ந்துபோயினர் என்ற பேருண்மை இங்கே வெளிப்படுவதைப் பார்க்கின்றோம். அதாவது, வினை விதைத்தவர் வினை அறுப்பார், தினை விதைத்தவர் தினை அறுப்பார் என்பதே உண்மை.    

மூன்றாவதாக, தாவீது அரசர் ஆண்டவரின் தூதர்கள் பற்றி எடுத்துரைக்கின்றார். அதாவது, ஆண்டவரின் துணைகொண்டு அவருடைய தூதர்கள் எதிரிகளை வெட்டிவீழ்த்தும் வலிமை கொண்டவர்கள் என்பதை தாவீது உறுதியான மனதுடன் நம்பியவராக இதனைச் சொல்கின்றார். அன்றிரவு ஆண்டவரின் தூதர் புறப்பட்டுச் சென்று அசீரியரின் பாளையத்தில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரைக் கொன்றார். மக்கள் காலையில் எழுந்தபோது அங்கு அனைவரும் செத்துப் பிணமாய்க் கிடந்ததைக் கண்டனர் (2 அர 19:35) என்று இரண்டாம் அரசர் நூலிலிருந்து ஒரு நிகழ்வை நாம் வாசிக்கின்றோம். இதனை மனதில் கொண்டவராக, ஆண்டவரின் தூதர் துணைகொண்டு தனது எதிரிகள் இல்லாதொழிக்கப்படுவர் என்று நம்பிக்கை கொள்கின்றார் தாவீது அரசர். பொதுவாக, பழைய ஏற்பாட்டின் தொடக்கநூல் தொடங்கி புதிய ஏற்பாட்டின் திருவெளிப்பாடு நூல்வரை இறைவனின் தூதர்கள் பற்றிய செய்திகள் அதிகம் விரவிக்கிடக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில், பழைய ஏற்பாட்டில் வரும் தோபித்து நூலில் வானதூதர் இரபேலின் பேருதவியையும் வழிநடத்துதலையும் பார்க்கின்றோம். அதனால்தான் காவல்தூதர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு விழா எடுக்கின்றோம்.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி செவ்வாயன்று கொண்டாடப்பட்ட புனித காவல் தூதர்களின் திருவிழாவன்று, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது ஒவ்வொரு மனிதருக்கும், மனித வழிகாட்டியும், பாதுகாப்பாளரும் தேவை என்ற நிலையில், அப்பணிகளை நிறைவேற்றுபவரே காவல் தூதர்கள் என்று கூறியத் திருத்தந்தை, முன்னே செல்லாமல், ஒரே இடத்தில் சோர்ந்து அமர்வதும், முன்னோக்கிச் செல்ல அச்சம் கொள்வதும் ஆபத்து நிறைந்தது என்றும், அத்தகைய நேரங்களில், நம்மை வழிநடத்தி முன்னே அழைத்துச் செல்பவர் நம் காவல்தூதரே என்றும் தன் மறையுரையில் கூறினார். மேலும், நம்மை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள நம் காவல் தூதர்களுக்கு நாம் செவிமடுக்க வேண்டும். ஏனெனில், நம்மோடும், இறைவனோடும் நெருங்கிய உறவு கொண்டுள்ள காவல் தூதர், இறைவனுக்கும், நமக்குமிடைய ஒரு பாலமாகச் செயலாற்றுகிறார் என்றும் எடுத்துரைத்தார்.

ஆகவே, கடவுளுக்குப் பிரமாணிக்கம் உள்ளவர்களாக நாம் வாழும்போது, அவர் தனது வானதூதர் வழியாக நமக்குத் தீவினைச் செய்வோரை அழித்தொழித்து நம்மைக் காப்பாற்றுவார் என்பதை உறுதியாக நம்புவோம். மேலும் அவரை மட்டுமே நமது பாதுகாப்பும் கேடயமுமாகக் கொண்டு வாழ்வதற்கான அருள்வரங்களை ஆண்டவர் இயேசு நமக்கு வழங்கிட இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 நவம்பர் 2022, 13:49