தேடுதல்

புனித Bartolomeu Fernandes dos Martires புனித Bartolomeu Fernandes dos Martires 

வழிசொல்லும் ஒளிச்சுடர்: இறப்பைத் தவிர வேறெதுவும் உண்மையில்லை

புனித Bartolomeu Martires, திரிதெந்தின் பொதுச் சங்கத்தில் கலந்துகொண்டு, திருஅவையின் சீர்திருத்தத்திற்காக உயர்மட்ட அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்

மேரி தெரேசா: வத்திக்கான்

அக்டோபர் 02, இஞ்ஞாயிறு இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள். தன் நாட்டுக்காக, மத நல்லிணக்கத்திற்காக, விடுதலைக்காக, அமைதிக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த உன்னத மனிதர் காந்திஜி அவர்களை இந்நாளில் நன்றியோடு நினைவுகூர்வோம்.

உலகப் புகழ்பெற்ற வடிவமைப்பாளரும் எழுத்தாளருமான Crisda Rodriguez அவர்கள், 2021ஆம்  ஆண்டில் வயிற்றுப் புற்றுநோயால் இறைபதம் சேர்ந்தார். அவர் இறப்பதற்குமுன் நிலையில்லாத மானுட வாழ்க்கை பற்றி எழுதியிருப்பது சமூக ஊடகங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த உலகத்தில் விலையுயர்ந்த சொகுசு வாகனத்தை எனது வீட்டில் வைத்திருந்தேன். ஆனால் நான் சக்கர நாற்காலியில் அழைத்து செல்லப்படுகிறேன்!

இந்த உலகத்தில் உள்ள அனைத்து விதமான வடிவமைப்புக்களிலும் நிறங்களிலும் விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள், பொருள்கள் என அனைத்தும் என் வீட்டில் உள்ளன. ஆனால் மருத்துவமனையில் எல்லா நோயாளிகளுக்கும் வழங்கப்படும் சிறிய உடையில் இருக்கிறேன்! என் வங்கி கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது, ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே! என் வீடு, அரண்மனை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன். இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஆடம்பர விடுதிகளுக்கு நான் பயணித்துக்கொண்டே இருந்தேன். ஆனால் இப்போது மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு மாறி மாறி அழைத்துச் சொல்லப்படுகிறேன்!

அன்று நாள்தோறும் ஏழு சிகை அலங்கார நிபுணர்கள், எனக்கு அலங்காரம் செய்வார்கள்.  ஆனால் இன்று என் தலையில்_முடியே இல்லை. உலகிலுள்ள பல வகையான விலையுயர் உணவகங்களில் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு! நூற்றுக்கணக்கான கையெழுத்துக்களைப் போட்டிருக்கிறேன், ஆனால் இன்று மருத்துவரின் குறிப்பே எனது கையெழுத்து. தனியார் விமானத்தில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன்.  ஆனால் இன்று மருத்துவமனை வராந்தாவிற்கு வருவதற்கே இருவர் உதவுகிறார்கள். இந்த வீடு, இந்த வாகனம், விலையுயர்ந்த பொருள்கள், வங்கிக்கணக்கு, புகழ் என எதுவுமே எனக்குப் பயனாக இல்லை. அனைத்து வசதி வாய்ப்புகளும் எனக்கு ஐந்து நிமிடம்கூட நோயிலிருந்து விடுதலைதரவில்லை. இந்த ஆபத்தான நோயிலிருந்து என்னைக் காப்பாற்றவில்லை. ஆனால், சில அன்பானவர்களின் முகங்களும் அவர்களது தழுவுதல்களும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. உண்மையான வாழ்வு என்பது, பலரை மகிழ்விப்பது மற்றும், அவர்களைப் புன்னகைக்க வைப்பது. மரணத்தைத் தவிர வேறு எதுவுமே உண்மையில்லை, வாழ்க்கை குறுகியது. இந்த வாழ்வில் கிடைக்கும் பணம், பதவி, அதிகாரம் என அனைத்தும் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உதவுவதில்லை. இந்த உலகத்தில் மரணத்தைவிட உண்மையானது வேறு எதுவுமே இல்லை! எனவே மனித நேயத்தோடு வாழ அழைக்கிறது, உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் கிறிஸ்தா ரொட்ரிகெஸ் அவர்களின் இறுதி எழுத்துக்கள், மனித வாழ்க்கையின் எதார்த்தத்தை மரணம் நெருங்குகையில் அவர் கண்டுணர்ந்துள்ளார்.

புனித Bartolomeu Fernandes dos Martires

திருஅவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் புனிதர்களும் மனித வாழ்க்கையின் எதார்த்தத்தை உணர்ந்து வாழ்ந்தவர்கள். 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கும் Bartolomeu dei Martiri Fernandes  (1514-1590) அவர்கள், புனிதப் பேராயர், ஏழைகள் மற்றும், நோயாளிகளின் தந்தை என மக்களால் அழைக்கப்பட்டவர். இவர், 1514ஆம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி போர்த்துக்கல் நாட்டுத் தலைநகர் லிஸ்பனில் பிறந்தார். இவர் மறைசாட்சிகளின் புனித நம் அன்னை ஆலயத்தில் திருமுழுக்குப் பெற்றார். அதனால் Martyrs என்ற பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது. 1528ஆம் ஆண்டு தொமினிக்கன் சபையில் சேர்ந்து, அதற்கு அடுத்த ஆண்டில் அச்சபையில் நிரந்தர வார்த்தைப்பாடுகளைக் கொடுத்தார். மெய்யியல் மற்றும், இறையியல் கல்வியில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற இவர், 1538ஆம் ஆண்டில்  லிஸ்பனிலுள்ள புனித தொமினிக்கன் கல்லூரியில் மெய்யியல் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் 1540ஆம் ஆண்டில் Batalhaவிலுள்ள கல்லூரியில் இறையியல் பேராசிரியராகப் பணியைத் தொடங்கி, 11 ஆண்டுகள் அப்பணியை ஆற்றினார். அதற்குப்பிறகு Évoraவில் அரசுக் குடும்பத்தினருக்கு ஆசிரியர் மற்றும், போதகராகப் பணியாற்றினார். 1558ஆம் ஆண்டில் போர்த்துக்கல் அரசி கேத்ரின், இவரை Braga பேராயராக முன்மொழிந்தார். ஆனால் பர்த்தலோமேயோ அவர்கள், இப்பணிக்கு மறுப்பு தெரிவித்தாலும், திருத்தந்தை நான்காம் பவுல் அவர்கள், அவரை பிராகா பேராயராக நியமித்தார். கீழ்ப்படிதல் காரணமாக அந்நியமனத்தை ஏற்ற இவர், 1559ஆம் ஆண்டில் லிஸ்பன் நகரிலுள்ள புனித தொமினிக் ஆலயத்தில் பேராயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். 1559ஆம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி Braga பெரிய உயர்மறைமாவட்டத்தில் தன் மேய்ப்புப்பணியைத தொடங்கிய பர்த்தலோமேயோ அவர்கள், கடின தவ வாழ்வை மேற்கொண்டார். இவர் அருள்பணியாளர்கள் மற்றும், மக்களின் நலனுக்காகத் தன்னையே அர்ப்பணித்தார்.

பேராயர் பர்த்தலோமேயோ அவர்கள், ஆயர் பணியில் மேய்ப்புப்பணி பயணங்களை மேற்கொள்வதிலும், நற்செய்தியை அறிவிப்பதிலும் மிகச் சிறந்து விளங்கினார். நற்செய்தி அறிவிப்புப்பணியில் இவருக்கு இருந்த ஆர்வத்தால், கிறிஸ்தவக் கோட்பாடுகள் மற்றும், ஆன்மிக வாழ்வுச் செயல்பாடுகள் பற்றிய மறைக்கல்வியை எழுதினார். இதன் 15வது பதிப்பு, 1962ஆம் ஆண்டில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அருள்பணியாளரின் கலாச்சாரம் மற்றும், புனித வாழ்வு மீது இவர் கொண்டிருந்த ஆழமான அக்கறை, அவ்வுயர்மறைமாவட்டத்தின் பல பகுதிகளில் அருள்பணியாளர்களுக்காக அறநெறி இறையியல் பள்ளிகளை உருவாக்க வைத்தது, மற்றும் கிறிஸ்தவக் கோட்பாடுகள் குறித்தும் அவரை எழுதத் தூண்டியது. மொத்தத்தில் ஏறத்தாழ 32 இலக்கிய படைப்புகள் இவரால் உருவாயின. அவற்றில் Stimulus Pastorum என்ற படைப்பு, 22 பதிப்புக்களாகப் பிரசுரமாகியது, மற்றும், அது இக்காலத்திற்கும் உரியதாக உள்ளது. அது, முதல் மற்றும் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத் தந்தையரிடம் அளிக்கப்பட்டதை வைத்தே அதன் சிறப்பை உணர்ந்துகொள்ளலாம். 1561ஆம் ஆண்டு முதல் 1563ஆம் ஆண்டு வரை, திரிதெந்தின் பொதுச் சங்கத்தில் இவர் கலந்துகொண்டு, திருஅவையின் சீர்திருத்தத்திற்காக உயர்மட்ட அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். பேராயர் பர்த்தலோமேயோ அவர்களின் போதனைகளும், முன்மாதிரிகையான வாழ்வும் அப்பொதுச் சங்கத்தில் தீர்மானங்களில்  குறிப்பிடத்தக்க நல்தாக்கத்தைக் கொண்டிருந்தன. இவரோடு நல்ல நட்புறவு கொண்டிருந்த திருத்தந்தை நான்காம் பவுல் அவர்கள், பலநேரங்களில் இவரது ஆலோசனையைக் கேட்டு அதனைப் பின்பற்றினார்.

பேராயர் பர்த்தலோமேயே அவர்கள், திரிதெந்தின் பொதுச் சங்கத்தில் எடுத்த தீர்மானங்களை தனது உயர்மறைமாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக, 1564ஆம் ஆண்டில் மறைமாவட்ட மன்றம் ஒன்றையும், 1566ஆம் ஆண்டில் Braga மாநில அவையையும் ஏற்பாடு செய்து அவற்றை நடத்தினார். 1571ஆம் ஆண்டில் Campo Vinhaல் அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரியையும் இவர் கட்டத் தொடங்கினார். மேய்ப்புப் பணியிலிருந்து ஓய்வுபெற அனுமதி வேண்டும் என இவர் தொடர்ந்து விண்ணப்பித்து வந்ததால், 1582ஆம் ஆண்டில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. Viana do Casteloவிலுள்ள திருச்சிலுவை தொமினிக்கன் சபை துறவு இல்லத்தில் இவர் தன் ஓய்வு காலத்தைச் செலவழித்தார். 1590ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி இறைபதம் சேர்ந்த பேராயர் பர்த்தலோமேயோ அவர்களை, புனிதப் பேராயர், ஏழைகள் மற்றும், நோயாளிகளின் தந்தை என, மக்கள் எல்லாரும் ஒரே குரலால் அறிவித்தனர். Viana do Casteloவிலுள்ள தொமினிக்கன் சபை ஆலயத்தில் இவரது கல்லறை உள்ளது. இவரது திருநாள் ஜூலை மாதம் 16ம் தேதியன்று சிறப்பிக்கப்படுகின்றது.

புனித ஜூசெப்பினா வன்னினி (7 ஜூலை 1859 – 23 பிப்ரவரி 1911)

புனித ஜூசெப்பினா வன்னினி
புனித ஜூசெப்பினா வன்னினி

நோயாளிகளைப் பராமரித்துவந்த புனித ஜூசெப்பினா வன்னினி அவர்கள், புனித கமிலெஸ் புதல்வியர் சபையை நிறுவியவர். இவரை, 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். 1859ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் தேதி உரோம் நகரில் பிறந்த இவரது உடன்பிறப்புகள் மூன்று பேர். உரோம் புனித Andrea delle Fratte ஆலயத்தில் திருமுழுக்கு பெற்றபோது Giuditta Adelaide Agata என்ற பெயரை பெற்றோர் இவருக்கு வைத்தனர். குடும்பத்தில் இரண்டாவது குழந்தையாகிய ஜூசெப்பினா, தனது நான்கு வயதில் 1863ஆம் ஆண்டில் தந்தையை இழந்தார். பதினோராவது வயதில் தாயையும் இழந்தார். இவரும், இவரது உடன்பிறப்புகளும் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தனர். இவர் தன் சகோதரர் சகோதரியிடமிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு உரோம் நகரில் Sant'Onofrio சாலையிலுள்ள வின்சென்ட் தெ பவுல் அருள்சகோதரிகள் சபை நடத்திய கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இவரது சகோதரர் தாய் மாமா வீட்டிலும், மற்றொரு சகோதரி புனித யோசேப்பு அருள்சகோதரிகள் சபையிலும் வளர்ந்தனர். 1883ஆம் ஆண்டு வரை வின்சென்ட் தெ பவுல் சபையினரிடம் வளர்ந்த ஜூசெப்பினா, kindergarten பள்ளியில் பணியாற்றுவதற்குரிய படிப்பை முடித்தார். ஆயினும், அர்ப்பண வாழ்வில் உள்ள ஆர்வத்தால், 1883ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி வின்சென்ட் தெ பவுல் அருள்சகோதரிகள் சபையில் சேர்ந்தார். சியென்னா நகரில் துறவு பயிற்சியை முடித்த இவர், உடல்நலக் குறைவால் 1887ஆம் ஆண்டில் அச்சபையைவிட்டு கட்டாயமாக விலகவேண்டிய சூழல் ஏற்பட்டு, உரோம் நகருக்குத் திரும்பினார். உடல்நலம் சற்று தேறியபின்னர் மீண்டும் சியென்னா சென்ற இவரை, துறவுப் பயிற்சிக்குத் தகுதியற்றவர் எனச் சொல்லி, அச்சபை புறக்கணித்தது. சிலகாலம் சென்று 1891ஆம் ஆண்டு டிசம்பரில் ஆன்மிக தியானத்தில் பங்குகொண்டபின் கடைசி நாளில் டிசம்பர் 17ம் தேதி தனக்கு ஆன்மிக ஆலோசகராக இருந்த லூயிஜி தெர்சா என்பவரைச் சந்தித்தார். லூயிஜி அவர்கள், நோயாளிகள் மற்றும் மரணத்தின் பிடியில் உள்ளவர்களைப் பராமரிக்க பெண்கள் துறவு சபை ஒன்றை ஆரம்பிக்க விரும்பினார். இந்த தனது முயற்சியில் இணைய விருப்பமா என்று ஜூசெப்பினாவிடம் கேட்டார் லூயிஜி. தனது அழைப்பு குறித்து தெளிந்துதேர்ந்த பின்னர், 1892ஆம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி, லூயிஜி அவர்களின் விண்ணப்பத்தை ஏற்றார் ஜூசெப்பினா. அதன் பயனாக அவ்விருவரும் சேர்ந்து, பெண்களுக்கென்று ஒரு துறவு சபையைத் தொடங்கினர். 1892ஆம் ஆண்டு மார்ச் 19ம் தேதி ஜூசெப்பினாவும் மற்ற இருவரும் கமிலியன் மூன்றாம் சபைக்குரிய ஆடையைப் பெற்றனர். அதற்கு அடுத்த ஆண்டில் "ஜூசெப்பினாவாக", துறவு பெயரை ஏற்று, தனிப்பட்ட முறையில் வார்த்தைப்பாடு எடுத்தார். 1895ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் நாள் புனித கமிலெஸ் புதல்வியர் சபையை லூயிஜி தெர்சாவுடன் சேர்ந்து இவர் தொடங்கினார். அச்சபையின் முதல் சபை அதிபராகவும் இவர் பணியாற்றினார். இவர், தனது சபையை திருஅவையின் ஒப்புதலுக்காக விண்ணப்பித்தபோது முதலில் புறக்கணிக்கப்பட்டது.

ஏறத்தாழ 1900மாம் ஆண்டுகளில் திருத்தந்தை 13ம் லியோ அவர்கள் புதிய துறவு சபைகள் தொடங்கப்படுவதை அனுமதிக்காதபோது, ஜூசெப்பினாவும், தெர்சாவும் இன்னல்களைச் சந்தித்தனர். தெர்சா மீது அநீதியான குற்றச்சாட்டுகள் எழுந்ததையொட்டி, உரோம் மறைமாவட்டத்தில் திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பணியாற்றிய கர்தினால் Pietro Respighi அவர்கள், தெர்சாவை, 1900மாம் ஆண்டில் தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லீமாவில் மறைப்பணியாற்றுமாறு அனுப்பினார். இதனால் ஜூசெப்பினா அவர்கள், தனது சபைக்கு அதிகப் பொறுபேற்கவேண்டியிருந்தது. இவர் தனது இறப்புவரை தெர்சாவின் ஆலோசனையோடு சபையை நடத்தி வந்தார். ஜூசெப்பினா, இதய நோயால் துன்புறுவதற்குமுன், இத்தாலியிலும் பிரான்சிலும் தொடங்கப்பட்டிருந்த தனது சபையின் இல்லங்களைப் பார்வையிட்டார். 1911ஆம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி மாலையில் உரோம் நகரில் இதய நோயால், தனது 51வது வயதில் இவர் இறைபதம் சேர்ந்தார். இவரது கல்லறை, Grottaferrataவிலுள்ள இச்சபையின் தாயில்லத்தில் உள்ளது. இவரை, 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

1909ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி இச்சபைக்கு, கர்தினால் Respighi அவர்கள், மறைமாவட்ட அங்கீகாரம் அளித்தார். 1922ஆம் ஆண்டில் திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், இச்சபையின் பணிகளைப் பாராட்டி ஆணை ஒன்றை வெளியிட்டார். 1931ஆம் ஆண்டு ஜூன் 17ம் தேதி அதே திருத்தந்தை இச்சபையை அங்கீகரித்தார். தற்போது இச்சபையினர், இத்தாலி, போலந்து, போர்த்துக்கல் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும், அர்ஜென்டீனா, மெக்சிகோ ஆகிய இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், பெனின், புர்க்கினா ஃபாசோ ஆகிய ஆப்ரிக்க நாடுகளிலும் பணியாற்றுகின்றனர்.

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து கருணை இல்லத்தில் வளர்ந்த புனித ஜூசெப்பினா வன்னினி அவர்கள், நோயினால் ஒரு துறவு சபையில் புறக்கணிக்கப்பட்டவர்,  ஆனால் அவரே நோயாளிகளைப் பராமரிப்பதற்கென்று ஒரு துறவு சபையை ஆரம்பிக்க கடவுள் அருள்பொழிந்துள்ளார். வாழ்வில் வலியை உணர்ந்தவரே, வலியால் துன்புறுவோரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். ஆம். வாழ்வில் இறப்பைத் தவிர வேறெதுவும் உண்மையில்லை.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2022, 14:34