தேர்தலில் வாக்களிப்பது மக்களின் கடமை - கர்தினால் இரஞ்சித்
மெரினா ராஜ் - வத்திக்கான்
தேர்தலில் வாக்களிப்பது மக்களின் மிக முக்கியமான கடமை எனவும், தங்களின் வாக்களிப்பு வழியாக, மக்கள், அரசுக்கு தகுந்த பதிலளிக்க முடியும் எனவும், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கூறியுள்ளார்.
செப்டம்பர் 26, இத்திங்களன்று இலங்கையின் கொழும்பு புறநகர்ப் பகுதியில் உள்ள ரகாமா- தூய இருதய ஆலயத்தில் இவ்வாறு பேசியுள்ள, கொழும்பு பேராயரான கர்தினால் இரஞ்சித் அவர்கள், நாட்டின் பொதுத் தேர்தலோடு, உள்ளூராட்சி தேர்தல்களையும் நடத்தவேண்டும் என்று, தேசிய தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, நடுத்தர மக்கள் ஏழ்மை நிலைக்கு மாறி, அன்றாட உணவிற்கே கஷ்டப்படுகின்றனர் எனவும், ஞாயிறு மறைக்கல்விக்கு வரும் சிறார்களுக்கு முதலில் உணவு கொடுக்கப்படவேண்டியுள்ளது எனவும் கூறியுள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், இந்நிலை மாற உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற வேண்டிய பொதுத் தேர்தல், நாட்டின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், இத்தேர்தல் நடைபெறாது என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, தேர்தல் நடைமுறைகள் ஊழலால் பாதிக்கப்பட்டு நலிவடைந்துள்ளன என்று, தேசிய தேர்தல் ஆணையத் தலைவர் Nimal Punchihewa அவர்கள் அண்மையில் தெரிவித்த கருத்து சர்ச்சைக்கு உள்ளான நிலையில், நாடாளுமன்றத்தின் முன்னாள் தலைவர் கரு ஜெயசூரியா அவர்கள், “நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் என்ன என்று அறிய அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்றும், அதற்கு “தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த எட்டு மாதங்களில் பொறியியலாளர்கள், மருத்துவர்கள் என 800 பேர் இலங்கையைவிட்டுச் சென்றுள்ளதாகவும், இதனால் இலங்கையின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படும் என்றும் கவலை தெரிவித்துள்ளார், கரு ஜெயசூரியா அவர்கள்.
மேலும் இலங்கையில் 23 இலட்சம் சிறார் உட்பட, 57 இலட்சம் மக்கள் அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுபவர்களாக உள்ளனர் என்று, UNICEF அமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்