திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தையர் 2ம் பவுல், 4ம் சிக்ஸ்துஸ்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
1464ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி திருத்தந்தை 2ம் பயஸ் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கர்தினால்கள் அவையில் அதே மாதம் 30ம் தேதி தேர்வுசெய்யப்பட்டவர் கர்தினால் Pietro Barbo. இவர் இரண்டாம் பவுல் என்ற பெயரைத் தேர்ந்துகொண்டார். 1417ஆம் ஆண்டு இத்தாலியின் வெனிஸ் நகரில் பிறந்த இவர், முன்னாள் திருத்தந்தை 4ம் யூஜினின் சகோதரி மகனாக இருந்தமையால், தன் மாமா திருத்தந்தையானவுடன் இவரும் திருஅவைப் பணிக்குள் தன்னை இணைத்துக்கொண்டார். இத்தாலியின் பொலோஞ்ஞா நகர் தலைமை திருத்தொண்டர், செர்வியா நகர் ஆயர், பின்னர் விச்சென்ஸா ஆயர் என்ற பதவிகளை வகித்தபின் 1440ஆம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். அவருக்கு அப்போது வயது 23தான். திருத்தந்தையர்கள் 4ம் யூஜின், 5ம் நிக்கலஸ், 3ம் கலிஸ்துஸ், 2ம் பயஸ் ஆகியோரின்கீழ் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்தார் இவர். சிறப்புக் கொண்டாட்டங்களை திருஅவையில் புகுத்திய திருத்தந்தை இரண்டாம் பவுல், வெனிஸ் நகரில் பிரபலமாக விளங்கும் புனித மாற்கு கட்டடத்தை கட்டியவராவார். உரோம் நகரில் பல நல்ல நிர்வாக மாற்றங்களைக் கொணர்ந்தார். ஏழைகளுக்குரிய நிவாரணப் பணிகளை ஏற்பாடு செய்தார். பல்கலைக்கழகங்களுக்கு ஆதரவு அளித்ததுடன், அச்சுத் தொழிலையும் ஊக்கப்படுத்தினார், மற்றும், தொன்மைக் கலைப்படைப்புகளைச் சேகரித்து பாதுகாத்தார். 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை யூபிலி ஆண்டு கொண்டாடும் முறையை 1470ஆம் ஆண்டில் திருஅவை விதிமுறையாகக் கொணர்ந்தவரும் இவரே. இத்திருத்தந்தை 1471ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி இறைபதம் சேர்ந்தார்.
திருத்தந்தை 4ம் சிக்ஸ்துஸ்
ஒரு திருத்தந்தையின் மருமகனாக இருந்து மிகுந்த செல்வாக்குடன் விளங்கிய திருத்தந்தை இரண்டாம் பவுலுக்குப்பின் பொறுப்பேற்றவர், ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த திருத்தந்தை 4ம் சிக்ஸ்துஸ். இவர் மிகச் சிறுவனாக இருந்தபோதே பிரான்சிஸ்கன் துறவு சபையில் இணைவதற்கான விருப்பத்தை வெளியிட்டார். இத்தாலியின் பவியா பல்கலைக்கழகத்தில் மெய்யியலும் இறையியலும் கற்ற இவர், பதுவா, பொலோஞ்ஞா, பவியா, சியென்னா, மற்றும் புளோரன்ஸ் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக இருந்துள்ளார். உரோம் நகரில் பிரான்சிஸ்கன் துறவு சபையின் பொருளாளராகவும், இத்தாலியின் லிகூரியா மாநில பிரான்சிஸ்கன் அதிபராகவும் பணியாற்றிய இவரை 1467ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் பவுல், கர்தினாலாக உயர்த்தினார். அதே திருத்தந்தை இரண்டாம் பவுல் உயிரிழந்தபோது, 1471ஆம் ஆண்டில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 4ம் சிக்ஸ்துஸ் என்ற பெயரையும் எடுத்துக்கொண்டார், கர்தினால் பிரான்சஸ்கோ தெல்லா ரோவரே (Francesco della Rovere). இவர் பதவியேற்றவுடனேயே துருக்கிய ஆக்ரமிப்பிற்கு எதிராக கிறிஸ்தவ அரசர்களை ஒன்றிணைத்து போர் தொடுக்க விரும்பினார். அதன் பொருட்டு பிரான்ஸ், இஸ்பெயின், ஜெர்மனி, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகளுக்கு தன் பிரதிநிதிகளையும் அனுப்பி வைத்தார். அதேவேளை, தனக்கு முந்தைய திருத்தந்தையைப்போல் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையை உரோம் திருஅவையோடு இணைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டார். இரண்டிலும் இவருக்கு வெற்றி கிட்டவில்லை.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து திருத்தந்தையான 4ம் சிக்ஸ்துஸ், தன் உறவினர்களுக்கு அதிக சலுகை காட்டி, தன் பெயரைக் கெடுத்துக்கொண்டார் என வரலாற்று ஆசிரியர்கள் உரைக்கின்றனர். இவரின் உறவினர்கள் திருஅவை பெயரில் பெருஞ் செல்வங்களைத் தங்களுக்கென திரட்டியபோது, இவர் தலையிட்டு அவர்களைத் தடுக்கவில்லை. இவரின் நெருங்கிய உறவினரான கர்தினால் Rafael Riario, புளோரன்சில் பிரபலமாக விளங்கிய Medici குடும்பத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்து, அந்நகரை தன் குடும்பத்தின்கீழ் கொண்டுவர விரும்பி போர் தொடுத்தபோதும் திருத்தந்தை மௌனம் காத்தார். இதனால் இத்தாலிய இளவரசர்கள் ஒன்றுகூடி திருத்தந்தைக்கு எதிராக எழுந்தனர். இதில் மிலான் பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த Ludovico Sforza என்பவர் தனக்கு உதவுவார் என திருத்தந்தை எதிர்பார்க்க, அவரோ திருத்தந்தையைக் கண்டுகொள்ளவேயில்லை. மெதிச்சி(Medici) குடும்பத்தோடு சமாதானமாகப் போகும்படி அவரைக் கட்டாயப்படுத்தினர் இளவரசர்கள். இதுவே அவரை மனக்கவலைக்கு உள்ளாக்கி, அவரின் மரணத்திற்கு காரணமானது எனலாம்.
உறவினர்களுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டை நீக்கிப் பார்த்தோமானால், தனிப்பட்ட வாழ்வில் இவர் ஓர் அப்பழுக்கற்ற மனிதர். கலை மற்றும் இலக்கியத்திற்கு அதிக ஆதரவு அளித்தார். உலகப் புகழ்பெற்ற சிஸ்டைன் கோவிலை 1473ஆம் ஆண்டு துவக்கி 1481ஆம் ஆண்டு கட்டி முடித்தவர் இவரே. முதலில் இது பெருங்கோவில் என பெயர் பெற்றிருந்தது, பின்னர் இவர் பெயரால் சிஸ்டைன் என்ற பெயர் பெற்றது. உரோம் நகரின் டைபர் நதியின் குறுக்கே சிஸ்டைன் பாலத்தை தீர்மானித்தவரும் இவர்தாம். தூரத்திலிருந்து நீரைக் கொண்டுவந்து த்ரேவி (Trevi) நீரூற்றில் இணைத்து, உரோம் நகருக்கு நீர் விநியோகம் செய்தவரும் இவர்தாம். வத்திக்கான் நூலகத்தையும் சீரமைத்தார். பல சீர்திருத்தங்களைச் செய்ய விரும்பிய இத்திருத்தந்தை 4ம் சிக்ஸ்துஸ், 1484ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ல் காலமானார். இவருக்குப்பின் வந்த திருத்தந்தை எட்டாம் இன்னசென்ட் குறித்து அடுத்த தொடரில் காண்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்