கட்டாய மதமாற்றம், சிறுபான்மை மதத்தவர் வாழ்வில் ஒரு தண்டனை
மேரி தெரேசா: வத்திக்கான்
சிறுபான்மையினர் நாள் என்பது, ஒரு நாட்டின் அனைத்துக் குடிமக்களின் உரிமைகளைக் கொண்டாடுவதாகும் என்று, பாகிஸ்தானில் ஆகஸ்ட் 11, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட அந்நாள் குறித்து, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும், அமைதி பணிக்குழுவின் செயலர் பீட்டர் ஜேக்கப் அவர்கள் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 11ம் தேதி கொண்டாடப்படும் சிறுபான்மையினர் நாள் குறித்து, பீதேஸ் செய்தியிடம் இவ்வாறு கூறியுள்ள, ஜேக்கப் அவர்கள், அந்நாட்டில் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தானில் இடம்பெறும் கட்டாய மதமாற்றம், சிறுபான்மை சமயத்தவர் வாழ்வில் ஒரு தண்டனையாக உள்ளது என்றும், இத்தகைய கவலைதரும் மனநிலையோடு, அடிப்படை உரிமைகள் மீறப்படல், பாகுபாடு, வறுமை, சட்ட ஒழுங்கின்மை ஆகியவையும் இணைகின்றன என்றும் ஜேக்கப் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு திறனற்று இருப்பதால், சிறுபான்மை மதங்களின் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றங்களை மறைப்பதற்கு, இக்குற்றவாளிகள் தங்களின் மதத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர் என்றும், இதனால், குரலற்ற, மற்றும், ஏழை சிறுபான்மை மதத்தவர், தங்களுக்கு நீதி கிடைக்கவும், தங்களையே பாதுகாத்துக்கொள்ளவும் இயலாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர் என்றும், ஜேக்கப் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் உரிமைகள் மீறப்படுகின்றது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு, சிறுபான்மை மதங்களின் பெண்கள் பாதுகாக்கப்படுவதற்கு, சட்டரீதியாகப் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும், இப்பிரச்சனை குறித்து கல்வி வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும் என்றும், அந்நாட்டு சமூக நீதி மையத்தின் தலைவருமான ஜேக்கப் அவர்கள் கூறியுள்ளார்.
அந்நாட்டில் 2021ஆம் ஆண்டில், 39 இந்துமதப் பெண்கள், 38 கிறிஸ்தவப் பெண்கள், சீக்கிய பெண் ஒருவர் என, 78 வளர் இளம் பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என சமூக நீதி மையம் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்