தேடுதல்

மனித கையில் சிசு வடிவ பொம்மை .கருக்கலைப்புக்கு எதிரான விழிப்புணர்வூட்டும் படம்  மனித கையில் சிசு வடிவ பொம்மை .கருக்கலைப்புக்கு எதிரான விழிப்புணர்வூட்டும் படம்  

கருக்கலைப்புக்கு எதிராக இந்திய கிறிஸ்தவர்கள் பேரணி

கருவறையில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளை அநியாயமாகக் கொன்று குவிக்கும் நிலை முடிவுக்கு வர தொடர்ந்து இறைவேண்டல் செய்வோம்

மெரினா ராஜ் - வத்திக்கான்

கருக்கலைப்புக்கு எதிராக குரல் கொடுப்பதும், அதனை தடுத்து நிறுத்த மக்கள் ஒவ்வொருவரும் கடவுளால் ஈர்க்கப்பட வேண்டும் என செபிப்பதும், கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரின் தார்மீக மற்றும் புனித கடமை என டெல்லியின் துணை ஆயர் தீபக் வலேரியன் தவ்ரோ(Deepak Valerian Tauro) அவர்கள் கருக்கலைப்பிற்கு எதிரான அணிவகுப்பு உரையில் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 10 இப்புதனன்று புதுடெல்லியில், வாழ்விற்கு ஆதாரமான செயல்பாட்டாளர்களுடன் கிறிஸ்தவர்கள் இணைந்து, கருக்கலைப்பிற்கு எதிரான, வாழ்வுக்கு ஆதரவான முதல் தேசிய ஒரு நாள் பேரணி ஒன்றை வழிநடத்தியபோது, அதில் பங்கேற்று இவ்வாறு கூறியுள்ளார், புதுடெல்லி மறைமாவட்டத்தின் துணை ஆயரும், வாழ்விற்கு ஆதரவான செயல்பாட்டாளர்கள் குழுத்தலைவருமான வலேரியன் தவ்ரோ.

பேராயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், திருத்தொண்டர்கள் மற்றும் பொது நிலையினர் பங்கேற்ற இப்பேரணியில்,  கருவிலேயே மனித இயல்புகளை பெற்றுள்ள சிசுக்களுக்கும் அடிப்படை மனித உரிமைகள் உள்ளன என்பதை மனதில் நிறுத்தி, அவர்கள் வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் ஆயர் வலேரியன் தவ்ரோ.

மேலும், உக்ரைனில் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று தொடர் இறைவேண்டல் செய்துகொண்டிருக்கும் நாம், கருவறையில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளை அநியாயமாகக் கொன்று குவிக்கும் நிலை முடிவுக்கு வரவும் தொடர்ந்து இறைவேண்டல் செய்ய வேண்டும் எனவும் விண்ணப்பித்தார் ஆயர்.

இதற்கிடையே, “உலகம் முழுவதும் கருக்கலைப்புகள் நடைபெற்றுவரும் இன்றைய சூழலில், கிறிஸ்தவர்கள் அனைவரும் தாங்கள் வாழுகின்ற பகுதியிலாவது இதனைத் தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டும் என, மகாராஷ்டிராவைச் சேர்ந்த, வாழ்வுக்கு ஆதரவான செயல்பாட்டாளர் ஜோசப் ஜான் அவர்கள் இப்பேரணியில் உரையாற்றினார். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடியே 56 இலட்சம் கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக அண்மை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (Ucan)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2022, 13:52