திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருத்தந்தை 12ம் கிரகரிக்குப்பின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருத்தந்தை 5ம் மார்ட்டின். இவர் உரோமுக்கு அருகேயுள்ள Genazzano எனுமிடத்தில் 1368ஆம் ல் பிறந்தவர். இத்தாலியின் Perugia பல்கலைக்கழகத்தில் பயின்று திருத்தந்தையர் 6ம் உர்பான் மற்றும் 9ம் போனிபாஸ் அவர்களின் கீழ் பணியாற்றியவர். 1402ஆம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர், முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை 12ம் கிரகரியைக் கைவிட்டு, Pisaவின் கர்தினால்கள் அவைக் கூட்டத்தில் பங்குபெற்றவர். எதிர்திருத்தந்தையர்கள் 5ம் அலக்ஸாண்டர் மற்றும் 23ம் யோவானின் தேர்தல்களிலும் இவர் கலந்து கொண்டார். ஜெர்மனியின் Constanceல் இடம்பெற்ற பொதுச்சங்கத்தில் 1417ஆம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், இஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து நாடுகளின் பிரதிநிதிகளால் ஒரேமனதாக திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கர்தினாலாக இருந்தாலும், அருள்பணியாளராகவோ, ஆயராகவோ திருநிலைப்படுத்தப்படாமல் இருந்ததால், நவம்பர் 13ம் தேதி அருள்பணியாளராகவும், 14ம் தேதி ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டு, 21ம் தேதி Constanceலேயே திருத்தந்தையாகவும் முடிசூட்டப்பட்டார். இவர் சார்ந்திருந்த பிரபலமான Colonna குடும்பத்திலிருந்து ஏற்கனவே 27 கர்தினால்கள் திருஅவையில் பணியாற்றியுள்ளனர். ஆனால் Colonna குடும்பத்தின் முதல் திருத்தந்தை இவரே.
திருத்தந்தை 5ம் மார்ட்டின் திருஅவையை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரின் வயது 41தான். இவர் அப்பழுக்கற்றவராக இருந்ததோடு, திருஅவைச் சட்டத்தில் வல்லுனராகவும் இருந்தார். எந்த ஒரு கட்சியையும் சாராதவராகவும் செயல்பட்டார். மேற்கத்திய கிறிஸ்தவத்தின் பிரச்சனைகளால் பெரும் வேதனைகளை அனுபவித்துவந்த திருஅவைக்கு இத்திருத்தந்தையே சரியான தேர்வாக இருந்தார் என வரலாறு கூறுகிறது. எதிர்திருத்தந்தையாக இருந்தவர்களும் இவரின் தலைமையை ஏற்றுக்கொண்டனர். 1419ஆம் ஆண்டு ஜூன் 23ல் பிளாரன்ஸ் நகரில் புதிய திருத்தந்தைக்கு அடிபணிவதாக அறிவித்த எதிர்திருத்தந்தை 23ம் யோவான், உரோமுக்கு அருகில் உள்ள பிரஸ்காத்தி நகரின் கர்தினால் ஆயராகவும் நியமிக்கப்பட்டார். அதேவேளை, எதிர்திருத்தந்தை 13ம் பெனடிக்ட் புதிய திருத்தந்தையை ஏற்க மறுத்தாலும், அவருக்குப்பின் வந்த எட்டாம் கிளமென்ட், திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் அவர்களுடன் (1429ம் ஆண்டு) இணைந்தார்.
13ம் பெனடிக்டின் பாதையில் ஒரே ஒரு கர்தினாளால் தேர்ந்தெடுக்கப்பட்டு Benedict XIV என்ற பெயரைத் தாங்கியவரோ, திருத்தந்தை 5ம் மார்ட்டின் அவர்களால் திருஅவையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். 1418ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி Constance பொதுச்சங்கத்தை கலைத்த திருத்தந்தை 5ம் மார்ட்டின், இந்நகரிலேயே சிறிது காலம் தங்கியிருந்தார். ஜெர்மன் அரசர் Sigismund, திருத்தந்தை அங்கேயே, அதாவது ஜெர்மன் நகரிலேயே தங்கவேண்டும் என தனிப்பட்ட முறையில் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். பிரான்ஸ் மன்னரும் திருத்தந்தை Avignon வந்து தங்கவேண்டும் என கேட்டார். இவைகளை எல்லாம் புறந்தள்ளிய திருத்தந்தை 5ம் மார்ட்டின், 1418ஆம் ஆண்டு மேமாதம் 16ம் தேதி உரோம் நகர் நோக்கி புறப்பட்டார்.
உரோம் நகரமோ, பழைய புகழ்பெற்ற வளம் நிறைந்த நகராக அப்போது இருக்கவில்லை. மாறாக, ஏழ்மையும் பஞ்சமும் அங்கு தலைவிரித்தாடியது. மக்கள் உணவின்றி பசியால் வாடிக்கொண்டிருந்தனர். இருப்பினும் திருத்தந்தை உரோம் நகருக்கு திரும்பிச் செல்வதில் உறுதியாக இருந்தார். பெர்ன், ஜெனீவா, மாந்துவா, பிளாரன்ஸ் ஆகிய நகர்களில் சிறிது காலம் தங்கிப் பயணத்தைத் தொடர்ந்தார். போகும் வழியில் அரசி Joannaவின் ஆதரவு இவருக்குக் கிட்டியது. நேப்பிள்ஸையும் உரோமையையும் தன் கீழ் வைத்திருந்த இந்த அரசி உரோம் உரிமையை திருத்தந்தைக்கு விட்டுக்கொடுத்தார். அதற்கு கைம்மாறாக, திருத்தந்தையும் அந்த அரசியை நேப்பிள்சின் அரசியாக அங்கீகரித்து, தன் பிரதிநிதி கர்தினால் Morosini வழியாக, 1419ஆம் ஆண்டு அக்டோபர் 28ல் முடிசூட்டி வைத்தார்.
1420ஆம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி உரோம் நகர் வந்தடைந்த திருத்தந்தை, உடனேயே அந்நகரை சீரமைக்கத் தொடங்கினார். ஆலயங்கள், பாலங்கள், பொதுக்கட்டடங்கள் இவரால் சீரமைக்கப்பட்டன. பழைய நகரைப் புதுப்பித்து புத்துயிர் ஊட்டியதில் இவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. மேற்கத்திய கிறிஸ்தவப் பிரிவினைகளின்போது திருஅவையிலிருந்து கைவிட்டுப்போன இடங்கள் இவர் காலத்தில் திரும்பப் பெறப்பட்டன. இதற்கு இவரின் உறவினர்களின் செல்வாக்கு உதவுவதாக இருந்தது. நிலமற்ற ஓர் ஆட்சியாளராக இத்திருத்தந்தை உரோம் நகருக்கு வந்தபோது, இவருக்கு அனைத்து உதவிகளையும் செய்தவர்கள் இவரின் கொலோனா குடும்பத்தினரே.
திருத்தந்தை 5ம் மார்ட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட 1417ஆம் ஆண்டின் Constance பொதுச்சங்கத்தில், ஒவ்வோர் ஐந்தாண்டிற்கு ஒருமுறை திருஅவை அதிகாரிகளின் சங்கம் கூட்டப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததால், 1423ஆம் ஆண்டு ஏப்ரலில் Paviaவில் அச்சங்கத்தைக் கூட்டினார் திருத்தந்தை. ஆனால் அந்நகரில் கொடும் பெருந்தொற்று பரவியதால், அச்சங்கம் Sienaவுக்கு ஜூனில் மாற்றப்பட்டது. ஆனால், கர்தினால்கள் சிறிய எண்ணிக்கையிலேயே கலந்துகொண்டதாலும், அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலும் அது இடையிலேயே (பிப்.26,1424) கலைக்கப்பட்டது. அடுத்த ஏழு ஆண்டுகளில் மீண்டுமொரு பொதுச்சங்கத்தைக் கூட்டுவதாக வாக்குறுதியளித்தார் திருத்தந்தை 5ம் மார்ட்டின். ஆனால் 1431ஆம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி உரோம் நகரில் காலமானார் திருத்தந்தை. 5ம் மார்ட்டினுக்குப்பின் திருத்தந்தையாக திருஅவையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 1388ஆம் ஆண்டு வெனிசில் பிறந்த திருத்தந்தை 4ம் யூஜின். இவர் குறித்து வரும் வாரம் காண்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்