தேடுதல்

பிலிப்பீன்சில் தாக்கப்பட்டுள்ள ஆலயம் (12072018) பிலிப்பீன்சில் தாக்கப்பட்டுள்ள ஆலயம் (12072018) 

துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு அவசியம்: ACN

உலகின் பல்வேறு பகுதிகளில், மக்கள் தங்களின் மத நம்பிக்கைக்காக, பாலின வன்கொடுமை, கொலை, கடத்தல் உட்பட பயங்கரமான உரிமை மீறல்களை எதிர்கொள்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

உலகில் தங்களின் மத நம்பிக்கைக்காகத் துன்புறுத்தப்படுவோரின் பாதுகாப்புக்கு பிரித்தானிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, தேவையில் இருக்கும் திருஅவைகளுக்கு உதவுகின்ற, Aid to the Church in Need பாப்பிறை பிறரன்பு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 22, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட, மதம் அல்லது மத நம்பிக்கையின் அடிப்படையில் இடம்பெறும் வன்செயல்களுக்குப் பலியாகுவோரை நினைவுகூரும் உலக நாளன்று, அந்த பிறரன்பு அமைப்பின் பிரித்தானிய கிளை, அந்நாட்டு அரசுக்கு இவ்வாறு   அழைப்புவிடுத்துள்ளது.

சமய சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், அமைதியாக கூட்டம் நடத்தவும், கழகம் அமைக்கவும் உரிமை போன்ற அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை மற்றும், அவை, உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று அவ்வமைப்பு கூறியுள்ளது.  

உலக அளவில் சமய அடக்குமுறை அதிகரித்து வருகின்றது என்றுரைக்கும் அவ்வமைப்பு, உலகின் பல்வேறு பகுதிகளில் தங்களின் மத நம்பிக்கைக்காக, பாலின வன்கொடுமை, கொலை, கடத்தல் உட்பட பயங்கரமான உரிமை மீறல்களால் துன்புறும் மக்கள் குறித்த தகவல்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன என்று தெரிவித்துள்ளது. 

சீனா, பாகிஸ்தான், நைஜீரியா, மொசாம்பிக், ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கின் சில பகுதிகள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் கிறிஸ்தவர்கள், அளப்பரிய துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்றுரைத்துள்ள அவ்வமைப்பின் பிரித்தானிய கிளையின் இயக்குனர் Caroline Hull அவர்கள், 2022ஆம் ஆண்டில் நைஜீரியாவில் ஓர் அருள்பணியாளர் கடத்தப்பட்டு, சித்ரவதைக்கு உள்ளாகி, கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்நாட்டில் கிறிஸ்தவச் சிறுமி ஒருவர், தெய்வநிந்தனை குற்றச்சாட்டின்பேரில், கல்லால் எறியப்பட்டு, பின்னர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளார் எனவும் Hull அவர்கள் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2022, 15:56