தேடுதல்

இலங்கையில் நீதி கேட்டு பேரணி இலங்கையில் நீதி கேட்டு பேரணி  (AFP or licensors)

உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு சட்டஉதவியை...

இலங்கையில் காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் உட்பட, எண்ணற்ற அரசு அதிகாரிகள் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அலட்சியமாகவும், உணர்வற்றும் இருந்தனர் – விசாரணை கமிஷன் அறிக்கை

மேரி தெரேசா: வத்திக்கான்

இலங்கையில் 2019ம் ஆண்டில் உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த அரசுத்தலைவர் விசாரணை கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்வைத்துள்ள பரிந்துரைகள் (PCoI) நடைமுறைப்படுத்தப்பட, நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார், கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித்.

இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது, மற்றும், நீதி இடம்பெறவேண்டும் என அதிகாரிகளுக்கு தொடர்ந்து விடுத்த விண்ணப்பங்கள், காதுகேளாதவர் செவிகளில் விழுந்துவிட்டன என்பதால், இதற்கு இலங்கைத் தலத்திருஅவை சட்டரீதியாக உதவியை நாடியுள்ளது என்று, கர்தினால் இரஞ்சித் அவர்கள் மேலும் கூறியுள்ளார்.   

ஜூன் 29, இத்திங்களன்று நீதிமன்றத்தில் வழக்குப் பதிவுசெய்துள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, காவல்துறை தலைமை அதிகாரி மற்றும், பொதுநலப் பாதுகாப்பு அமைச்சகம் ஆகிய இருவரையும் நீதிமன்றம் வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் உட்பட, எண்ணற்ற அரசு அதிகாரிகள் இத்தாக்குதல்கள் குறித்து அலட்சியமாகவும், உணர்வற்றும் இருந்தனர் எனவும், இவர்கள் மீது ஒழுக்கரீதி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும், அவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என, கர்தினால் இரஞ்சித் அவர்கள் யூக்கா செய்தியிடம் கூறியுள்ளார்.

மூத்த காவல்துறை அதிகாரி Deshabandu Thennakoon போன்றோர், 2019ம் ஆண்டில் உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்குத் தவறிவிட்டனர் என்றுரைத்துள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், ஐ.நா. மனித உரிமைகள் அவை இவ்விவகாரம் குறித்து தலையிடவேண்டுமென்று ஏற்கனவே விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2019ம் ஆண்டில் இலங்கையில் மூன்று ஆலயங்கள் மற்றும், மூன்று ஆடம்பர பயணியர் விடுதிகளில் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல்களில், 14 நாடுகளைச் சேர்ந்த 47 வெளிநாட்டவர் உட்பட, 269 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 July 2022, 14:27