ஈராக்கில் பன்னாட்டு சுற்றுலா அதிகரிக்க திருத்தந்தை உதவி
மேரி தெரேசா: வத்திக்கான்
போர், வகுப்புவாத வன்முறை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக் நாட்டில் பன்னாட்டு சுற்றுலா அதிகரிப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அந்நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணமும் ஒரு காரணம் என்று ஆசியச் செய்தி கூறுகிறது.
யூடியூப் சமூக ஊடகத்தில் புகழ்பெற்றவர்கள், சமுதாயத்தில் நல்தாக்கத்தைக் கொணர்பவர்கள், புதிய திட்டங்கள் வகுப்பவர்கள், கலைஞர்கள், ஊடக வல்லுநர்கள் என பலர் அண்மையில் ஈராக்கைப் பார்வையிட்டுள்ளதோடு, அந்நாட்டின் அழகையும் வர்ணித்துள்ளனர், மற்றும், அந்நாட்டில் சுற்றுலா மேற்கொள்ளவும் ஊக்கப்படுத்தியுள்ளனர்.
இதற்கு, வெளியுலகில் மிகப்பெரும் நல்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஈராக் திருத்தூதுப் பயணமும் ஒரு காரணம் என்று குறிப்பிட்டுள்ள ஆசியச் செய்தி நிறுவனம், இத்திருத்தூதுப் பயணம், இந்த அரபு நாடு இருக்கும் பகுதியிலும், மற்ற இடங்களிலும் பார்வையாளர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது என்று கூறியுள்ளது.
ஈராக் அரசும், அந்நாட்டில் சுற்றுலாக்களைக் கவரும்வண்ணம், அந்நாட்டிற்குள் நுழைவதற்கான அனுமதியையும் எளிதாக்கியுள்ளது, மற்றும், விசா அனுமதியின்றி 36 நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டிற்குள் வரவும் வழிசெய்துள்ளது.
1973ம் ஆண்டில் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டுப் பயணிகள் ஈராக்கைப் பார்வையிட்டுள்ளனர், ஆயினும், அந்நாட்டில் நடைபெற்ற போர் மற்றும், பொருளாதாரத் தடைகளால் சுற்றுலாவை முழுவதுமாக நிறுத்திவிட்டன. (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்