தேடுதல்

சிங்கப்பூரின் முதல் கர்தினால், பேராயர் William Goh சிங்கப்பூரின் முதல் கர்தினால், பேராயர் William Goh 

சிங்கப்பூரின் முதல் கர்தினால், பேராயர் William Goh

65 வயது நிரம்பிய சிங்கப்பூர் பேராயர் William Goh அவர்கள், 2013ம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் சிறுபான்மை கத்தோலிக்கத் திருஅவையை வழிநடத்தி வருகிறார். இவர், தன் மேய்ப்புப்பணியில் புலம்பெயர்ந்தோருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான்

தன் வரலாற்றில் முதன்முறையாக கர்தினால் ஒருவர் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து, சிங்கப்பூர் கத்தோலிக்கத் திருஅவை பெருமகிழ்ச்சி அடைந்துள்ளதாக ஆசியச் செய்தி கூறுகிறது.

65 வயது நிரம்பிய சிங்கப்பூர் பேராயர் William Goh அவர்கள், 2013ம் ஆண்டு மே மாதத்திலிருந்து சிங்கப்பூர் சிறுபான்மை கத்தோலிக்கத் திருஅவையை வழிநடத்தி வருகிறார். இவர், தன் மேய்ப்புப்பணியில் புலம்பெயர்ந்தோருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

மே 29, இஞ்ஞாயிறு நண்பகலில் அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்த 21 புதிய கர்தினால்களுள், சிங்கப்பூர் பேராயர் William Goh அவர்கள் உட்பட ஆறு பேர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். வருகிற ஆக்ஸ்ட் 27ம் தேதி வத்திக்கானில் நடைபெறும் கர்தினால்கள் அவையில், இவர்கள் 21 பேரும் கர்தினால்களாக உயர்த்தப்படுவார்கள். 

1957ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி சிங்கப்பூரில், சீன இன குடும்பத்தில் பிறந்த பேராயர் William Goh அவர்கள், சிங்கப்பூர் திருஅவையின் நான்காவது தலைவராவார். இவர்  Mandarin இசைக்கருவி வாசிப்பதில் வல்லுனர்.   

1985ம் ஆண்டில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், உரோம் உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்திலும், கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்திலும் இறையியல் மற்றும், கோட்பாட்டு இறையியல் கல்வி கற்றவர். இக்கல்வியை முடித்து 1992ம் ஆண்டில் சிங்கப்பூருக்குத் திரும்பிய இவர், சிங்கப்பூர் குருத்துவப் பயிற்சிக் கல்லூரியின் தலைவராகப் பணியாற்றினார். 2012ம் ஆண்டில் முன்னேள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இவரை சிங்கப்பூர் உயர்மறைமாவட்டத்தின் வாரிசு ஆயராக நியமித்தார். விரைவிலே அவ்வுயர்மறைமாவட்ட பேராயராகவும் இவர் பணியைத் தொடங்கினார்.

56 இலட்சம் மக்களைக்கொண்ட சிங்கப்பூரில் 3 இலட்சம் பேர் கத்தோலிக்கர். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 May 2022, 14:49