தேடுதல்

கடவுள் காப்பார் என்ற நம்பிக்கையுடன்.... கடவுள் காப்பார் என்ற நம்பிக்கையுடன்.... 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 31-1–கடவுளே நமது அடைக்கலம்

அடைக்கலம் கொடுக்கும் கடவுளைப் போல, நாமும் அடைக்கலம் தேடிவரும் ஆபத்தில் உள்ளோரையும் அபலை மக்களையும் ஆதரித்து புகலிடம் தருவோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 31-1

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில் திருப்பாடல் 30ல்  8 முதல் 12 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்து அதனை நிறைவுக்குக் கொணர்ந்தோம். ‘இறைவா, புழுதிக்கும் கீழான என்னைப் பயன்படுத்தும்’ என்ற தலைப்பில் நமது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டோம். இவ்வார நமது விவிலியத் தேடலில் 31ம் திருப்பாடலில் 1 முதல் 3 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறைப்பிரசனத்தில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம்.

ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; உம் செவிகளை என் பக்கம் திருப்பியருளும்; விரைவில் என்னை மீட்டருளும்; எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமை மிகு  கோட்டையாய் இரும். ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம். (வசனம் 1-4)

‘பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா’ என்ற தலைப்பிடப்பட்ட இத்திருப்பாடல் தாவீதால் எழுதப்பட்டது. இது மொத்தம் 24 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. சவுல் மன்னரால் தாவீது துன்புறுத்தப்பட்டபோது தாவீது இத்திருப்பாடலை எழுதியிருக்க வேண்டும் என்று விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர். இப்போது 1 முதல் 4 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். தாவீது அரசர் இந்த நான்கு வசனங்களிலும் கடவுளே தனது ‘அடைக்கலம்’ என்கிறார்.

மறைபோதகத்திற்காக இத்தாலியிலிருந்து இந்தியாவின் தமிழகத்திற்கு வந்த பெஸ்கி என்னும் வீரமாமுனிவர்,  நம் அன்னை மரியாவை ‘அடைக்கல மாதா’ என அழைத்து பாக்கள் பல இயற்றினார். அவர் கட்டியெழுப்பிய பெரும்பாலான ஆலயங்கள் ‘அடைக்கல மாதா ஆலயங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன. எனது சொந்த ஊரிலுள்ள ஆலயம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் என்று மறைமாவட்டப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் எனது ஊரிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் வாழும் எல்லா மதத்தவரும் அதனை ‘அடைக்கல மாதா கோவில்’ என்றே இன்றுவரை அழைத்து வருகின்றனர். ‘அடைக்கலம் கொடுப்பவர்’ என்ற வார்த்தைக்கு, ‘புகலிடம் தருபவர்’, ‘தஞ்சம் கொடுப்பவர்’, ‘பாதுகாப்பு அளிப்பவர்' என்றும் பொருள் கொள்ளலாம். இப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவராக வளரவேண்டும், வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் கிறித்தவ குழந்தைகள் சிலருக்கு அடைக்கலம், அடைக்கலசாமி, அடைக்கலராஜ், அடைக்கல மேரி என்ற பெயர்களும் திருமுழுக்கில் வழங்கப்பட்டன என்பதை நாம் நன்கு அறிந்துகொள்ளலாம்.

மதுரையில் கி.பி.13-14-ம் நூற்றாண்டுகளில் கிராமங்களில் இருந்த நிலச்சுவான்தாரர்கள் அவ்வூர் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் ஊர் பாதுகாப்புக்கென பாடிகாவல் நியமித்துக்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது. பாதுகாப்புத் தந்து காவல் செய்யும் பாடிகாவல் உரிமை எந்த ஊருக்கு யார் பெற்றுள்ளார்களோ அவர்கள் அதை உறுதிப்படுத்தி அறிவிப்பதை ஆசிரியம் கொடுத்தல் என்கிறார்கள். ஆசிரியம் என்ற சொல்லுக்குப் பாதுகாப்புத் தருதல், அடைக்கலம் தருதல் என்று பொருள். தமிழகத்தில் 75-க்கும் மேற்பட்ட ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாடிகாவல் முறையில், கிராமத்தை ஒரு குறிப்பிட்ட குழுவினர் காவல் காத்து வருவதை அனைவருக்கும் அறிவிக்கும் வகையில், கல்வெட்டை ஊரின் எல்லையிலோ, மையப்பகுதியிலோ, கோயில்களிலோ, நட்டு வைப்பது வழக்கமாக இருந்துள்ளது. ஆகவே, அடைக்கலம் என்பது தஞ்சம் அளிப்பது அல்லது புகலிடம் கொடுப்பது என்ற அர்த்தத்தில் கையாளப்படுவதை நம் வரலாற்றிலும் காண முடிகிறது.

ஈழத்தமிழரின் புலப்பெயர்வும் கூட தொடக்க காலங்களில் இருந்தே பல்வேறு தேவைகளுக்காக  இடம்பெற்று வந்திருக்கின்றது. ஆனாலும் இலங்கையில் 1970களின் பின்னர் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட இன ஒழிப்பு நடவடிக்கைகள் அதன் விளைவாக உருவாக்கப்பட்ட ஆயுதக் கலாச்சார முறைமை என்பன காரணமாகத் தமிழ்ச் சமுதாயம் நிலை குலைந்து போனது. இதனால்  சொந்த நாட்டை விட்டுவிட்டு  ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் கனடா முதலான நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றனர். அவ்வாறு சென்ற அம்மக்களுக்கு இந்நாடுகள் அடைக்கலம் கொடுத்தன என்பது கவனிக்கத்தக்கது. இப்போது  பல நாடுகளில் புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்த்தோர் பிரச்சனைகள் பெரிதாக உருவெடுத்து வருகின்றன. குறிப்பாக, தற்போது உக்ரைன் மீதான இரஷ்யாவின் தாக்குதலால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். உக்ரைனிலிருந்து வெளியேறிய புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 26 இலட்சத்தைக் கடந்ததுள்ளது. அதிகபட்சமாக போலந்தில் 16,55,503 போ் தஞ்சமடைந்துள்ளனா். அதற்கு அடுத்தபடியாக ஹங்கேரியில் 2,46,206 பேரும், ஸ்லோவாக்கியாவில் 1,95,980 பேரும் உக்ரைனிலிருந்து வந்து தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் போலந்து நாடுதான் அதிகமான மக்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. போலந்து நாட்டின் இந்த மனிதாபிமான செயலால் நெகிழ்ந்துபோன திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அந்நாட்டினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ஏப்ரல் 17, உயிர்ப்புப் பெருவிழாவன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தொண்டு நிறுவனங்களைப் பாராட்டியுள்ளார் ஹங்கேரியின் கர்தினால் Péter Erdő அவர்கள். மேலும் உக்ரைன் குழந்தைகளின் பள்ளிப் படிப்பு தடைபடாமல் இருப்பது முக்கியம் என்று கூறியுள்ள இவர் , ஹங்கேரியின் கத்தோலிக்கப் பள்ளிகளில் ஏறத்தாழ  200 ஆசிரியர்கள் உக்ரேனிய குழந்தைகளுக்குக் கற்பிக்க முன்வந்துள்ளனர் என்றும், புடாபெஸ்ட் நகரிலும் அதற்கு வெளியிலும் உள்ள பல பள்ளிகள் உக்ரேனிய அல்லது இரஷ்ய மொழி மட்டுமே பேசும் குழந்தைகளுக்கு வகுப்புகளைத் தொடங்கியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். இதன் வழியாக, துயருறும் இந்தக் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கமுடன் ஹங்கேரியில அடைக்கலம் தரப்பட்டுள்ளது என்பது புலனாகிறது.

இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலம் கரெளலியில் ஏப்ரல் 2ம் தேதி இந்து முஸ்லிம் சமூகத்தினரிடையே கலவரம் வெடித்தது. இதில் 35 பேர் காயமடைந்தனர். வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. கரெளலியின் சந்தைப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி, இந்து மத ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று, இஸ்லாமியர்கள் பகுதியைக் கடக்கும்போது, அவர்களை அவமதிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் இஸ்லாமியர்கள் சிலரும் பதிலுக்குக் கல்லெறிந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்குக் கலவரம் வெடித்திருக்கிறது.

இந்தக் கலவரத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற 15 இஸ்லாமிய ஆண்களை, ஒற்றை ஆளாகக் காப்பாற்றியிருக்கிறார் 48 வயது நிரம்பிய மதுலிகா சிங் என்ற ஓர் இந்துப் பெண். இவர் சந்தையில் துணிக்கடை வைத்திருப்பவர். கலவரக்காரர்களுக்குப் பயந்து ஓடி வந்த 15 பேரும், மதுலிகாவின் கடைக்குள் வந்து தஞ்சமடைந்திருக்கின்றனர். அந்நேரத்தில் கடை இருக்கும் அதே கட்டடத்தின் மாடியில் இருக்கும், தனது வீட்டுக்குள் அந்த 15 பேரையும் அழைத்துச் சென்று தங்க வைத்திருக்கிறார் மதுலிகா. அப்போது அந்த 15 பேரும் பதுங்கியிருப்பது தெரிந்து, கலவரக்காரர்கள் மதுலிகாவின் வீட்டுக்குள் நுழைய முற்பட்டிருக்கின்றனர். ஆனால், தனியொரு ஆளாக நின்று அவர்களை, வீட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்து 15 பேரையும் பாதுகாத்திருக்கிறார். அவர்களுக்கு டீ கொடுத்து, கலவரம் அடங்கும் வரை சாந்தப்படுத்தியிருக்கிறார். இது குறித்து மதுலிகா கூறும்போது, “திடீரென சந்தையில் அலறல் சத்தம் கேட்டது. அனைவரும் கடைகளின் கதவுகளை அடைக்கும் சத்தம் கேட்டது. சில கடைகள் தீப்பிடித்து எரிந்தன. சில கடைகளுக்குள்ளிருந்து பொருட்களைத் திருடிச் சென்றனர். தாக்குதலில் இருந்து தப்பிக்க சிலர் பயந்து ஓடி வந்தனர். அவர்களை எனது வீட்டுக்குள் வைத்து காப்பாற்றினேன். அவர்கள் வெளியில் இருந்திருந்தால் நிச்சயம் பயங்கரமாக தாக்கப்பட்டிருப்பார்கள். இங்குப் பல காலமாக இந்து, முஸ்லிம்கள் இணைந்துதான் தொழில் நடத்தி வருகிறோம். எல்லாவற்றையும் விட மனிதநேயம் பெரிது என்பதால் அவர்களைக் காப்பாற்றினேன்” என்றார்.

இவற்றையெல்லாம் நம் உள்ளத்தில் இருத்திச் சிந்திக்கும்போது, சவுல் அரசரால் பெரும் அவதிக்கும் துன்பத்திற்கும் உள்ளான தாவீது அரசர், ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதைப் பார்க்கிறோம். மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்; அவர் முன்னிலையில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள்; கடவுளே நமக்கு அடைக்கலம் (திபா 62:8) என்றும், நானோ கடவுளின் அண்மையே எனக்கு நலமெனக் கொள்வேன்; என் தலைவராகிய ஆண்டவரை என் அடைக்கலமாய்க்கொண்டு அவர்தம் செயல்களை எடுத்துரைப்பேன். (திபா 73:28) என்றும், உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். ஆண்டவரை நோக்கி, “நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்” என்று உரைப்பார்  (திபா 91:1-2) என்றும் தாவீது அரசர் வேறு சில திருப்பாடல்களிலும் எடுத்துக்காட்டுகின்றார்.

ஆகவே, அடைக்கலம் கொடுக்கும் கடவுளைப் போல, நாமும் அடைக்கலம் தேடிவரும் ஆபத்தில் உள்ளோரையும் அபலை மக்களையும் ஆதரித்து புகலிடம் தருவோம். அதற்கான அருளை இந்நாளில் இறைவனிடம் வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 May 2022, 13:25