தேடுதல்

சீடர்களுடன் உயிர்த்த ஆண்டவர் சீடர்களுடன் உயிர்த்த ஆண்டவர்  

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு: அன்பே அமைதியின் ஆணிவேர்

ஒரு சொட்டு நஞ்சு ஒட்டுமொத்த தொட்டித் தண்ணீரையும் நஞ்சேற்றுவதுபோல ஒருசிலரின் அன்பற்ற மனநிலை ஒட்டுமொத்த மனிதரிலும் உலகிலும் அமைதியை சீர்குலைக்கிறது.
ஞாயிறு சிந்தனை 21052022

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I. திப 15: 1-2, 22-29   II. திவெ 21: 10-14, 22-23  III. யோவா 14: 23-29)

பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இயேசுவின் வழியில் அன்பை விதைத்து அமைதியை அறுவடை செய்ய நமக்கு அழைப்பு விடுக்கின்றன. இப்போது நற்செய்தி வாசகத்தை வாசித்து நம் ஞாயிறு சிந்தனைகளைத் தொடங்குவோம்.

அக்காலத்தில், இயேசு சீடரை நோக்கிக் கூறியது : “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல”

ஒரு குருகுலத்தில் பல மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். ஒரு நாள் குரு தனது மாணவர்களுக்குப் போட்டி ஒன்றை அறிவித்தார். “மாணவர்களே நாளை உங்களுக்கு ஓவியப்போட்டி ஒன்றினை நடத்தப் போகிறேன். நீங்கள் என்னிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை நீங்கள் வரையும் ஓவியத்தின் வழியாக அறிந்து கொள்வேன்” என்று கூறினார். மேலும் “ஓவியப் போட்டிக்கான தலைப்பானது நாளை உங்களுக்குப் போட்டியின்போது அறிவிக்கப்படும். நீங்கள் நாளைக் காலையில் ஓவியம் வரைவதற்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார் குரு. மாணவர்கள் அனைவரும் மறுநாள் காலையில் ஓவியம் வரைவதற்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு குருகுலத்திற்கு வந்தனர். அப்போது குரு தனது மாணவர்களிடம், “‘அமைதி’ பற்றிய உங்கள் சிந்தனையை ஓவியமாக‌ வரையுங்கள்” என்றார். எல்லோரும் ஓவியத்தினை வரைந்தனர். போட்டியின் இறுதியில் குரு ஒவ்வொரு மாணவரின் ஓவியத்தையும் பார்வை இட்டார். ஒரு மாணவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. ஏரியில் மலையின் பிம்பம் அழகாக இருந்தது. மற்றொருவர் பூக்களை வரைந்திருந்தார். ஓவியத்தில் இருந்த பூக்களானது அவற்றை பறிக்கத் தூண்டியது. இன்னொருவர் அழகான புறாக்களை வரைந்திருந்தார். அவற்றின் அழகு அனைவரையும் கவர்ந்திழுத்தது. இவ்வாறாக எல்லோரும் ஓவியங்களை நன்றாகவும், அழகாகவும் வரைந்திருந்தனர். கடைசியாக இருந்த மாணவரின் ஓவியத்தைப் பார்த்த குரு அவரைக் கட்டியணைத்துக் கொண்டார்.

அவர் வரைந்த ஓவியத்தில், கடலில் வானம் கறுத்த மேகங்களுடன் காணப்படுகின்றது, இடி மின்னலுடன் மழைப் பொழிகிறது, காற்றும் பலமாக வீசுகிறது, பறவைகள் பயத்துடன் பறக்கின்றன, இவற்றிற்கிடையே கடலில் ஒரு கப்பலானது பிரச்சனைகளைச் சமாளித்து அமைதியாகச் செல்கிறது. இவ்வோவியம் மாணவர்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அமைதி என்ற தலைப்பிற்கும் ஓவியத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறதே என்று அவர்கள் எண்ணினர். 

அவர்களின் எண்ணத்தை அறிந்த குரு, “மாணவர்களே இந்த ஓவியம் அழகாக தத்ரூபமாக இருக்கிறது. இந்த ஓவியத்தில் கறுத்த மேகங்கள் கொண்ட கடல், இடிமின்னலுடன் கூடிய மழை, அமைதியான கப்பல், ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது? என்று தானே எண்ணுகிறீர்கள்” எனக் கேட்டார். பிரச்சனையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பதல்ல அமைதி. மாறாக, இவைகளின் மத்தியில் இருந்துகொண்டு, எதற்கும் கலங்காமல், எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி. எனவே நிதானமாக உள்ள கப்பல் பரிபூரணமான அமைதியில் இருக்கிறது. இந்த ஓவியத்தை வரைந்த மாணவனே என்னிடமிருந்து பாடங்களை நன்றாக கற்றிருக்கிறான்.” என்று அவனைப் பாராட்டினார் குரு.

அனைத்து வசதிகளும் அமையப் பெற்று எந்தவிதப் பிரச்சனையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல. ஆயிரம் துன்பங்களுக்கு நடுவிலும் நிச்சயம் ஒரு நாள் விடியும்| என்று விடாமுயற்சியுடன் தினமும் உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பதுதான் அமைதி. எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும், யார் என்ன தொல்லைகள் தந்தாலும், தனக்கு நேரும் அவமானங்களைவிட தான் எட்ட வேண்டிய இலக்கே தனக்குப் பெரியது என்று எதையும் பொருட்படுத்தாது கடந்து சென்றுகொண்டிருக்கிறார்களே, அவர்கள் உள்ளத்தில் உள்ளதுதான் அமைதி. சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவதுதான் அமைதி என்றார் குரு.. அப்போதுதான் மாணவர்கள் அமைதியின் உண்மையான பொருளை உணர்ந்துகொண்டனர். உள்ளத்தில் அன்பிருக்கும்போது உவகைநிறை அமைதியுடன் பயணிக்க முடியும்.

போருக்கான காரணங்கள் யாவும் மனித உள்ளங்களில் தோன்றுவதால், அங்குதான் அமைதிக்கான அரண்களும் அமைக்கப்பெறல் வேண்டும் என்பது யுனெஸ்கோ'வின் முகப்பு வாசகமாகும். போருக்கான அடிப்படை காரணம் எதுவாக இருக்கும் என்று ஆராய்ந்து பார்த்தோம் என்றால், இதிகாச காலம்தொட்டு இன்றுவரை தனிமனித ஒழுக்கத்தவறுகளே காரணமாக இருந்து வருகின்றன. மண், பெண், பொன் என்ற வகையிலே ஏதாவது ஒரு ஆசையும், தன்னை யார் என்று காட்ட வேண்டும் என்ற ஆணவமுமே போர்களுக்கும் இழப்புகளுக்கும் காரணமாக இருக்க முடியும். மனித மனம் என்பது போர்க்களத்தை விட மிக உக்கிரமான களமாகும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட “படைகொண்டு அமைதியை ஏற்படுத்த இயலாது. நல்லுணர்வால்தான் அதைப் பெற இயலும்” என்கிறார். அவர்கள் வேல்கள் கொண்டு வந்தார்கள். நாங்கள் துப்பாக்கிகளால் அவர்களை வென்று விட்டோம். அவர்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். நாங்கள் பீரங்கிகள் கொண்டு அவர்களை வென்றுவிட்டோம். அவர்கள் பீரங்கிகளையும் பயன்படுத்த தொடங்கினார்கள். நாங்கள் வெடிகுண்டுகளால் அவர்களைச் சிதறடித்தோம். நிறைவாக அவர்கள் மகாத்மாவின் துணையோடு அகிம்சையை கொண்டு எங்களை எதிர்த்தார்கள். அகிம்சையை வெல்ல எங்களிடம் ஆயுதங்கள் இல்லாத காரணத்தால் நாங்கள் விலகிவிட்டோம்” என்று ஆங்கிலேய அதிகாரி ஒருவர் கூறியதாக ஒரு தகவல் உண்டு.

இன்று உலகில் எங்கு நோக்கினும் அமைதியற்றச் சூழல் நிலவுவதைப் பார்க்கிறோம். உள்ளத்திலும் அமைதி இல்லை, உலகிலும் அமைதி இல்லை. தன்னலம், ஆணவம், சாதி, மத, மொழி, இன பாகுபாடுகள், உயர்ந்தவர் தாழ்ந்தவர் மாறுபாடுகள், நாடுகளுக்கிடையே வேற்றுமைகள், பணத்தின்மீதான மிதமிஞ்சிய பற்று, அதிகார வெறி இதனால் விளையும் தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவை இன்றைய உலகில் அமைதியற்றச் சூழலை உருவாக்கி வருகின்றன. அமைதியை அழித்து மனிதர்களை வேட்டையாடிய எத்தனையோ கடந்த கால மனிதத்தன்மையற்ற செயல்களிருந்து இன்றைய மனிதர் ஏனோ படங்களைக் கற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அதற்கொரு எடுத்துக்காட்டாய் அமைந்திருப்பதுதான் இரஷ்யா உக்ரைனில் நிகழ்த்தி வரும் அநியாயங்களும் அட்டூழியங்களும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், உலகத் தலைவர்களில் பலரும் உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த எத்தனையோ முயற்சிகளை எடுத்துப்பார்த்துவிட்டனர். ஆனாலும் அடங்க மாறுகிறது இரஷ்யா. உக்ரைனுக்கும் இரஷ்யாவிற்கும் இடையே அமைதியை ஏற்படுத்துவதில் இடைநிலையாளராக இருந்து செயல்பட மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக திருஅவை கூறியும் கூட அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இன்றுவரை இருக்கிறது.

‘சட்டியில் இருந்தால்தான் அகப்பைக்கு வரும்’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. முதலில் மனிதர் மனதில் அமைதி நிலவவேண்டும். உள்ளத்தில் அமைதி இருந்தால்தான் உலகிற்குக் கொடுக்க முடியும். ஒரு குளத்தில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். ஒரு பருந்து சற்று கீழே பறந்து வந்து ஒரு மீனைக் கொத்தி எடுத்துச் சென்றது. மீனைப் பார்த்தவுடன் ஆயிரக்கணக்கான காகங்கள் பலத்த கூச்சலுடன்  அந்தப் பருந்தைத் துரத்தத் தொடங்கின. அது எந்தப் பக்கம் சென்றாலும்  காகங்கள் விடாமல் பின் தொடர்ந்தன. பருந்து குழப்பத்தில் அங்கும் இங்கும் பறந்ததில் மீன் அதன் வாயிலிருந்து நழுவியது. அந்த நிமிடமே அந்தக் காகங்கள் பருந்தை விட்டு விட்டு,  அந்த மீனைத் தூக்கிக்கொண்டு பறந்து சென்றுவிட்டன. இவ்வாறாகக் கவலையிலிருந்து விடுபட்ட அந்தப் பருந்து, ஒரு மரக்கிளையில் அமர்ந்து. “அந்த மோசமான மீன்தான் என்னுடைய அனைத்துச் சிக்கல்களுக்கும், அமைதியற்ற நிலைக்கும் ஆணி வேர். அதை இப்பொழுது விட்டுத் தொலைத்ததனால் நான் அமைதியாக இருக்கிறேன்” என்று நினைத்தது. ஒரு மனிதரிடம் உலக ஆசைகள் இருக்கும்போது, அதை அடைவதற்கான எல்லா செயல்களையும் அவர் செய்கிறார். அதன் விளைவாக கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் மற்றும் அமைதியின்மையால் அவர் பெரும் அவதிக்குள்ளாகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். எவ்வளவு விரைவாக ஒருவர்  தன் ஆசைகளை விட்டொழிக்கின்றாரோ, அவ்வளவு சீக்கிரம் அவரது பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, அவர் மனம் அமைதியடைகிறது. இத்தகைய அமைதியை அவர் பிறருக்கும் அளித்து அமைதி நிறைத்த வாழ்வுக்கு அவர்களையும் கொண்டுவர முடியும். இதைத்தான் ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்கிறோம். இதன் அடிப்படையில்தான் ‘இறைவா, என்னை அமைதியின் தூதனாக மாற்றும்’ என்கிறார் புனித பிரான்சிஸ் அசிசியார். ஆக, ஒரு மனிதருக்கு கடவுள்மீது அன்பு இருந்தால்தான் இவ்வுலகுக்குரிய ஆசைகள் அனைத்தையும் விட்டுடொழித்துவிட்டு அவர் மனதில் அமைதிகொண்டு வாழ்ந்திட முடியும்.

கடவுள் அமைதியின் வடிவாக இருக்கிறார் என்றும் அவர் எப்போதும் அமைதியை விரும்புபவராக இருக்கிறார் என்றும், அமைதியை குலைக்கும் எச்செயலையும் அவர் பொறுத்துக்கொள்வதில்லை என்றும் திருவிலியத்தில் வாசிக்கின்றோம். அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக (திபா 72:7) என்றும், நேர்மையால் வரும் பயன் நல்வாழ்வு; நீதியால் விளைவன என்றுமுள அமைதியும் நம்பிக்கையும். என் மக்கள் அமைதி சூழ் வீடுகளிலும் பாதுகாப்பான கூடாரங்களிலும் தொல்லையற்ற தங்குமிடங்களிலும் குடியிருப்பர். (எசா 32:17) என்றும் வாசிக்கின்றோம். இயேசு ஆண்டவர், தான் உயிர்த்தெழுந்த பிறகு அதிகம் உச்சரித்த வார்த்தை ‘அமைதி’ என்பதாகும். அவர் தனது சீடர்கள் மத்தியில் தோன்றியபோதெல்லாம், ‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக!’ என்றே அவர்களை வாழ்த்துகின்றார். இன்றைய நற்செய்தியில் அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல என்கிறார். இயேசு தரும் அமைதி என்பது அன்பில் விளைந்த அமைதி. அன்புள்ள இடத்தில்தான் அமைதி பிறக்கும். இன்று உலகில் நிலவும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணம் அன்பற்ற மனிதம்தான். ஒரு சொட்டு நஞ்சு ஒட்டுமொத்த தொட்டித் தண்ணீரையும் நஞ்சேற்றுவதுபோல ஒருசிலரின் அன்பற்ற மனநிலை ஒட்டுமொத்த மனிதரிலும் உலகிலும் அமைதியை சீர்குலைக்கிறது என்பதை இக்கணம் உணர்வோம். ஆகவே, இயேசுவின் வழியில் அன்பை விதைத்து அமைதியை அறுவடை செய்திடுவோம். அதற்கான அருளை ஆண்டவரிடம் கேட்டு மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2022, 09:52