தேடுதல்

உயிர்த்த ஆண்டவர் உயிர்த்த ஆண்டவர்  

உடன்பிறந்த உணர்வு நிலையில் ஒன்றுபட்டு நிற்க...

உம் உயிர்ப்பின் பாதைகளாக அமையும் நிபந்தனையற்ற அன்பையும், நிறைவான பரிவிரக்கத்தையும், என்றுமுள்ள மகிழ்ச்சியையும் நாங்களும் கொண்டிருக்கச் செய்தருளும்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சாவை வென்று சரித்திரம் படைத்த எம் ஆண்டவரே, இம்மனுக்குலம் மீட்படைய மனுவுருவெடுத்து மாபரனாய் மரித்து உயிர்த்தவரே!

ஆண்டுதோறும் வரும் உம் உயிர்ப்புப் பெருவிழா, உன்னத இலட்சியத்தோடு வாழத்தூண்டும் உம் உயிர்ப்பின் சக்தியை எம் உள்ளத்தில் ஊற்றட்டும்.

இன்றைய எம் உலகில் எங்கு நோக்கினும் பகைமையும், பிரிவினைகளும், போர்களும் பூகம்பமாய்த் தோன்றி மனிதத்தை மாய்த்து வருகின்றன.

சில தனி மனிதரின் சுயநலத்தாலும், பேராசையாலும், பதவிவெறியாலும் போர்கள்  தோற்றுவிக்கப்பட்டு, உம் உன்னத படைப்பான மனிதரை நான்கு திசைகளிலும் புலம்பெயர்ந்தோராய் புறப்படச் செய்கின்றன.

குறிப்பாக, குழந்தைகள் தங்களின் வாழ்வுரிமையையும் எதிர்காலத்திற்கான தங்களின் இலட்சியக் கனவுகளையும் இழந்து தவிக்கின்றனர்.

போர்களின் பெயரால் நீர் படைத்த உன்னதப் படைப்பான இந்த இயற்கை அன்னை தாறுமாறாகச் சிதைக்கப்படுகிறாள்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனிதர்களாய், எம் உலகத் தலைவர்களில் சிலர், ஒருபுறம் அமைதிக்காகக் குரலெழுப்பிவிட்டு மறுபுறம் பகைமைக்கான தீயில் எண்ணையை ஊற்றிவருகின்றனர்.

அன்பு நிறைந்த ஆண்டவரே, இத்தருணத்தில், உம் உயிர்ப்பின் உன்னதப் பொருளாய் விளங்கும் அமைதியை எங்களுக்குத் தந்தருளும்.

அமைதியின் கருவிகளாய் எம்மை மாற்றியருளும். நீதிக்கான வழியில் நித்தமும் எம்மை நடத்தியருளும்.

மனித மாண்பைப் போற்றும் நல்மனம் கொண்டோராய் வாழ்வதற்கு எமக்கு வழிகாட்டியருளும்.

உம் உயிர்ப்பின் பாதைகளாக அமையும் நிபந்தனையற்ற அன்பையும், நிறைவான பரிவிரக்கத்தையும், என்றுமுள்ள மகிழ்ச்சியையும் நாங்களும் கொண்டிருக்கச் செய்தருளும்.

உடன்பிறந்த உணர்வு நிலையில் ஒன்றுபட்டு நின்று, உம் உறவின் அடையாளமாய் வாழ உம் உயிர்ப்பின் வல்லமையை எம்மில் நிறைவாகப் பொழிந்தருளும். ஆமென்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 April 2022, 11:31