தேடுதல்

மால்ட்டாவில் திருத்தந்தைக்கு அருகில் பேராயர் Charles Scicluna மால்ட்டாவில் திருத்தந்தைக்கு அருகில் பேராயர் Charles Scicluna  

திருத்தூதுப் பயணம், மால்ட்டா மக்களின் மறைப்பணிக்கு உந்துசக்தி

உலகின் தெற்கு மற்றும், கிழக்குப் பகுதியிலிருந்து புலம்பெயரும் பெருமளவான மக்கள் தங்கள் நாடுகளுக்குள் நுழைவதைத் தடைசெய்வதற்கு, கடந்த சில ஆண்டுகளாக, தடுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டு வருவது வருத்தமளிக்கிறது - பேராயர் Scicluna

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மால்ட்டா திருத்தூதுப் பயணத்தில், கத்தோலிக்கரிடம்  மறைப்பணி ஆர்வத்தைப் பற்றியெரியச் செய்த சுடர், தொடர்ந்து காக்கப்படும் எனவும், அது கத்தோலிக்கரின் சாட்சிய வாழ்வுக்கும், நற்செய்தி அறிவிப்புப்பணிக்கும் உந்துசக்தியாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும், மால்ட்டா பேராயர் Charles Scicluna அவர்கள் தெரிவித்துள்ளார்.

மால்ட்டா நாட்டுக் கடற்கரைகளில் இறங்கி, அந்நாட்டில் தஞ்சம்புகும் புலம்பெயர்வோருக்கு புனித பவுலடியாரின் காலத்திலிருந்து, ஒரு பாதுகாப்பான துறைமுகமாக அந்நாடு இருந்துவருவது, அந்நாட்டின் மரபணு, கலாச்சாரம் மற்றும், இயல்பு ஆகியவற்றின் ஓர் அங்கமாக இருக்கின்றது என்று கூறினார், பேராயர் Scicluna.

ஏப்ரல் 2,3 அதாவது கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மால்ட்டா தீவு நாட்டில் நிறைவேற்றிய திருத்தூதுப் பயண நிகழ்வுகள் பற்றி ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பேராயர் Scicluna அவர்கள், மால்ட்டா மக்கள் அனைவரும், புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகள் மற்றும், இந்த தனித்துவ உணர்வில் வாழ விரும்பும் புலம்பெயர்ந்தோர், நம்பிக்கையின் ஊற்றாக உள்ளனர் என்று எடுத்துரைத்தார்.  

உலகின் தெற்கு மற்றும், கிழக்குப் பகுதியிலிருந்து புலம்பெயரும் பெருமளவான மக்கள் தங்கள் நாடுகளுக்குள் நுழைவதைத் தடைசெய்வதற்கு, கடந்த சில ஆண்டுகளாக, தடுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டு வருவது வருத்தமளிக்கிறது எனவும், பேராயர் Scicluna அவர்கள் கூறினார்.  

வரலாற்றின் இப்போதைய சூழலில், உக்ரைனிலிருந்து புலம்பெயரும் மக்களுக்கு மிகுந்த தோழமையுணர்வு காட்டப்படுகிறது, ஆனால் ஆப்ரிக்கா மற்றும், மத்தியக் கிழக்கிலிருந்து புலம்பெயர்வோர், ஏறத்தாழ இரண்டாம்தரத்தினராய் நடத்தப்படுகின்றனர் என்றுரைத்த பேராயர் Scicluna அவர்கள், புலம்பெயரும் அனைவருக்கும் தோழமையுணர்வு காட்டப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.    

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 48 மணி நேரங்களுக்கும் குறைவாகவே மேற்கொண்ட  மால்ட்டா திருத்தூதுப் பயணத்தில், புலம்பெயர்ந்தோர் மற்றும், நோயாளிகளைச் சந்தித்தார், அந்நாட்டின் முக்கிய திருத்தலமான, ராபாட் நகரின் புனித பவுல் அடிநிலக் கெபிக்குச் சென்று செபித்தார், பின்னர் அங்கிருந்த திறந்த வெளி அரங்கில் திருப்பலி நிறைவேற்றினார்.

இஞ்ஞாயிறு மாலையில் திருத்தந்தை புனித 23ம் யோவான் அமைதி மையத்தில் ஏறத்தாழ 200 புலம்பெயர்ந்தோரைச் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 April 2022, 15:19