தேடுதல்

உக்ரைன் புலம்பெயர்ந்தோர் உக்ரைன் புலம்பெயர்ந்தோர் 

குடிமக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு போலந்து ஆயர்கள் கண்டனம்

போரின் சோகத்தால் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு எதிரான கொடிய தாக்குதல்களையும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அது ஏற்படுத்தும் பெரும் உயிரிழப்புகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம் - போலந்து ஆயர்கள்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

போலந்தின் கத்தோலிக்க ஆயர்கள், இரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பையும், குறிப்பாக அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதையும் கண்டித்துள்ளனர்.

மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் போலந்து ஆயர்கள் வார்சாவில் நடைபெற்ற 391ம் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் கலந்துகொண்டபோது இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தின் இறுதி நாளில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜனநாயகக் கொள்கைகளால் ஆளப்படும் சுதந்திரமான மற்றும் இறையாண்மையுள்ள நாடான உக்ரைனுக்கு எதிரான இரஷ்யாவின் நியாயமற்ற ஆக்ரமிப்புக்கு எதிராகத் தங்களின் குரல்களை ஆயர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

"போரின் சோகத்தால் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு எதிரான இந்தக் கொடிய தாக்குதல்களையும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அது ஏற்படுத்தும் பெரும் உயிரிழப்புகளையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளனர், போலந்து ஆயர்கள்.

உக்ரைன் அரசுக்கும் மக்களுக்கும் எதிரான ஆக்ரமிப்பு வெடித்ததற்குப் பொறுப்பானவர்கள் விரைவில் போர்களை நிறுத்தவும், நியாயமான அமைதியை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்ளவும் அழைப்புவிடுத்துள்ள அதேநேரத்தில், உக்ரைனில் அமைதிக்காக ஆர்வத்துடன் உண்ணாநோன்பிருந்து இறைவேண்டல் செய்ய அனைத்து விசுவாசிகளையும் தாங்கள் அழைப்பதாகவும் ஆயர்கள் அவ்வறிக்கையில் கூறியுள்ளனர்.   

பிப்ரவரி 24 அன்று இரஷ்யாவின் ஆக்ரமிப்பு தொடங்கியதிலிருந்து, 2,45,000க்கும் மேற்பட்ட உக்ரேனியர்கள் ஹங்கேரிக்குள்ளும் 1,95,000க்கும் அதிகமானோர் சுலோவாக்கியாவிற்குள்ளும் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர் என்று மார்ச் 11, கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஐ.நா-வுக்கான புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (UNHCR)  புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 March 2022, 15:52