தேடுதல்

புலம்பெயரும் உக்ரைன் மக்கள் புலம்பெயரும் உக்ரைன் மக்கள் 

உக்ரைனில் இரத்த ஆறுகள், கண்ணீர்க் கடல்கள்

சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும், மனித சமுதாயத்தின் சூழலியலைப் பராமரிப்பதில் அக்கறையுள்ளோர் ஆகியோர், உக்ரைனில் போரை உடனடியாக நிறுத்துவதற்கு செயலில் இறங்கவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

உக்ரைனின் இன்றைய நிலவரம் குறித்து, மார்ச் 04 இவ்வெள்ளியன்று, வத்திக்கான் செய்தித்துறைக்கு தகவல் அனுப்பியுள்ள, உக்ரைன் கிரேக்க கத்தோலிக்கச் செயலகம், இரத்த ஆறுகளையும், கண்ணிர்க் கடல்களையுமே பார்க்க முடிகின்றது என, இன்று எங்களால் கூற முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.

கடுமையான போரின் அவலங்களை, ஒன்பதாவது நாளாக எதிர்கொண்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ள அச்செயலகம், இவ்வியாழனன்று Sumy மற்றும், Kharkiv ஆகிய நகரங்களில் குண்டுகள் போடப்பட்டுள்ளன என்றும், குண்டுவீச்சு தாக்குதலால் உடனடியாக ஏறக்குறைய 33 பேர் கொல்லப்பட்டுள்ள Chernihiv நகரில் நிலைமை மிக மோசமாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இவ்வெள்ளி காலையில், Zaporizhzhia அணுமின் நிலையம் தீப்பற்றி எரிந்ததை நாங்கள்  பார்த்தோம் என்றுரைத்துள்ள அச்செயலகம், சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும், மனித சமுதாயத்தின் சூழலியலைப் பராமரிப்பதில் அக்கறையுள்ளோர் ஆகியோர், இப்பேரழிவையும், போரையும் உடனடியாக நிறுத்துவதற்கு செயலில் இறங்கவேண்டுமென்று விண்ணப்பிக்கின்றோம் என்று கூறியுள்ளது.

இப்பேரழிவு, நம் கண்களுக்கு முன்பாக இடம்பெறும் மனிதாபிமானப் பேரிடர் மட்டுமல்ல,  நூற்றாண்டு அளவாகச் சீரமைக்கப்படமுடியாத அளவிற்கு கடவுளின் படைப்பு கட்டுப்பாடின்றி தாக்கப்பட்டுள்ளது என்றும், செர்னோபில் அணுமின் நிலையப் பேரிடரின் துயரங்களை, உக்ரைன் நாடு ஏற்கனவே அடைந்துள்ளது என்றும், தற்போது அணுகுண்டு தாக்குதலை எதிர்நோக்குகிறது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

உக்ரைனில் போர் முடிவுக்குவர கடவுளிடம் மன்றாடுமாறும் அச்செயலகம் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2022, 16:04