தேடுதல்

போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில் அன்னை மரியா பவனி போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில் அன்னை மரியா பவனி 

இரஷ்யாவின் மனமாற்றத்திற்காக பாத்திமா அன்னை திருத்தலங்கள்

மார்ச் 13 இஞ்ஞாயிறன்று உலகின் அனைத்து பாத்திமா அன்னை திருத்தலங்களில் இரஷ்யாவின் மனமாற்றத்திற்காக இறைவேண்டல்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

இரஷ்யாவின் மனமாற்றத்திற்காக, மார்ச் 13 இஞ்ஞாயிறன்று நடைபெறும் இறைவேண்டல் நிகழ்வில், உலகெங்கும் இருக்கின்ற பாத்திமா அன்னை மரியா திருத்தலங்கள் அனைத்தும் இணையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதியிலிருந்து, உக்ரைன் நாட்டை இரஷ்யா ஆக்ரமித்து முழுவீச்சாக கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுவருவதை முன்னிட்டு, உக்ரைன் நாட்டின் மேற்குப் பகுதியிலுள்ள Krisovychi நகரின் பாத்திமா அன்னை மரியா திருத்தல அதிபர் அருள்பணி Andrzej Draws அவர்கள், இரஷ்யாவுக்காகச் செபிக்குமாறு, உலகின் அனைத்து பாத்திமா அன்னை திருத்தலங்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.  

உக்ரைன் மற்றும், இரஷ்யாவை, அன்னை மரியாவின் களங்கமற்ற இதயத்திற்கு அர்ப்பணிக்குமாறு, உக்ரைன் நாட்டின் இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளதையடுத்து (மார்ச் 2,2022) அருள்பணி Andrzej Draws அவர்கள், இச்செப விண்ணப்பத்திற்கு வேண்டுகோள்விடுத்துள்ளார். 

1917ம் ஆண்டில் போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில் அன்னை மரியா, லூசியா, பிரான்சிஸ் ஜசிந்தா ஆகிய மூன்று சிறாருக்குக் காட்சியளித்தபோது, மூன்று இரகசியங்களை வெளிப்படுத்தினார்.

அவற்றில், இரண்டாவது இரகசியம், முதல் உலகப்போர் முடிவடையும் என்பது பற்றியாகும். மூன்றாவது இரகசியம், மக்கள் கடவுளை தொடர்ந்து புண்படுத்தி வந்தாலும், இரஷ்யா, அன்னை மரியாவின் களங்கமற்ற இதயத்திற்கு அர்ப்பணிக்கப்படாமல் இருந்தாலும், திருத்தந்தை பதினோராம் பயஸ் அவர்களின் தலைமைப் பணிக் காலத்தில் மற்றொரு போர் ஒன்று தொடங்கும் என்பது பற்றியதாகும்.

திருத்தந்தையர் 12ம் பயஸ், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல், பிரான்சிஸ் ஆகியோர் உட்பட பல்வேறு திருத்தந்தையர், இரஷ்யாவையும் உலகையும் அன்னை மரியாவின் களங்கமற்ற இதயத்திற்கு அர்ப்பணித்துள்ளனர். 1984ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதியன்று, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் பாத்திமா அன்னை மரியா திருவுருவத்தின் முன்பாக, எண்ணற்ற ஆயர்கள், கர்தினால்கள் உட்பட, ஏறத்தாழ இரண்டு இலட்சம் நம்பிக்கையாளர்களின் பிரசன்னத்தில், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், இரஷ்யாவை அன்னை மரியாவின் களங்கமற்ற இதயத்திற்கு அர்ப்பணித்தார். (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 March 2022, 14:34