தேடுதல்

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதலால் சேதம் (கோப்புப்படம்) இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதலால் சேதம் (கோப்புப்படம்) 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தல்

இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற உரிமை மீறல்களைக் களைவதில், அரசு நேர்மையுடன் செயல்படவில்லை - மனித உரிமை குழுக்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ள அதேவேளை, அச்சட்டம் உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று அழைப்புவிடுக்கும் மனு ஒன்றிலும், அந்நாட்டு கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கையெழுத்திட்டுள்ளார்,

மேலும், இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படவேண்டும் என்று, கத்தோலிக்கத் திருஅவை, ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற பன்னாட்டு  மனித உரிமை கழகம் உள்ளிட்ட, 32 மனித உரிமை குழுக்களும், எழுபது மனித உரிமை ஆர்வலர்களும், அரசை வலியுறுத்தி வருகின்றன என்று, யூக்கா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அந்நாட்டில் கடந்த காலத்தில் இடம்பெற்ற உரிமை மீறல்களைக் களைவதில், அரசு நேர்மையுடன் செயல்படவில்லை என்றுரைத்துள்ள மனித உரிமை குழுக்கள், சிறுபான்மையினர், பத்திரிகையாளர், மனித உரிமை ஆர்வலர்கள், அரசை விமர்சனம் செய்வோர் போன்றோருக்குத் தொந்தரவு கொடுப்பதற்கு இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்றும் குறைகூறியுள்ளன.

1979ம் ஆண்டில் தற்காலிக நடவடிக்கையாக கொண்டுவரப்பட்ட PTA எனப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, சட்டத்திற்குப் புறம்பேயுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைக் கைது செய்யவும், நீதிமன்றத்திற்குச் செல்லாமலேயே 18 மாதங்கள் வரை, அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கவும் அனுமதியளிக்கின்றது.

இதற்கிடையே, மனித உரிமை ஆர்வலரான ரூகி பெர்னான்டோ என்பவரும், அமைதி மற்றும், ஒப்புரவு மையத்தின் இயக்குனராகிய அமலமரி தியாகிகள் சபையின் அருள்பணி பிரவீன் மகேசன் அவர்களும், 2014ம் ஆண்டு மார்ச் மாதத்தில் PTA சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டனர் என்று, இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ள அருள்பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். (UCAN)

இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம், 43 ஆண்டுகளுக்குப் பின்னர் திருத்தப்பட்டு வருவதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள், இவ்வாண்டு சனவரி மாதத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 February 2022, 13:56