தேடுதல்

பிலிப்பீன்ஸ் ஆயர்கள் பிலிப்பீன்ஸ் ஆயர்கள்  

உண்மையின்றி, நீதி இருக்க முடியாது – பிலிப்பீன்ஸ் ஆயர்

பிலிப்பீன்ஸ் நாட்டில், இராணுவச் சட்டம் நடைமுறையிலிருந்த ஆண்டுகள்பற்றிய உண்மையைத் திரித்துக் கூறுகின்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் - ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

பிலிப்பீன்ஸ் நாட்டில், இராணுவச் சட்டம் நடைமுறையிலிருந்த ஆண்டுகள்பற்றிய உண்மையைத் திரித்துக் கூறுகின்றவர்களுக்கு வாக்களிக்கவேண்டாம் என்று, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

“உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” (யோவா.8:32) என்ற தலைப்பில், பிலிப்பீன்ஸ் ஆயர்கள் சார்பில், மேய்ப்புப்பணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள, அந்நாட்டு ஆயர் பேரவைத் (CBCP) தலைவர், ஆயர் Pablo Virgilio David அவர்கள், தற்போதைய அரசுத்தலைவர் தேர்தல் பிரச்சாரத்தில், பொய்களின் நுண்கிருமிகளே விதைக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையின்றி, நீதி இருக்க முடியாது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ள ஆயர் டேவிட் அவர்கள், 1986ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதியன்று, பிலிப்பீன்சில் இடம்பெற்ற அமைதியான மக்கள் சக்தி புரட்சியால், சர்வாதிகாரி Ferdinand Marcos அவர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை நினைவுபடுத்தியுள்ளார்.

வருகிற மே மாதம் 9ம் தேதி நடைபெறவுள்ள அரசுத்தலைவர் தேர்தலில், முன்னாள் சர்வாதிகாரி மார்க்கோஸ் அவர்களின் மகன் Ferdinando Marcos ஜூனியர், தற்போது பதவி விலகும் அரசுத்தலைவரின் மகள் Sara Duterte ஆகியோர் போட்டியிட இருப்பதை, ஆயர் டேவிட் அவர்கள், தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்பீன்ஸ் நாட்டில் இடம்பெற்ற அமைதியான புரட்சி, ஓர் ஆள், ஒரு கட்சி அல்லது ஓர் இனம் போன்றவற்றின் தலையீட்டால் நடைபெற்றது அல்ல, மாறாக, நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து நடத்திய புரட்சி என்றும், அதில் மக்கள் வெற்றியும் அடைந்தனர் என்றும், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். (AsiaNews)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 February 2022, 15:43