தேடுதல்

தந்தையை நோக்கி இயேசுவின் இறைவேண்டல் தந்தையை நோக்கி இயேசுவின் இறைவேண்டல்  

பொதுக் காலம் - ஏழாம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

பகைமையைப் போக்கி மன்னிப்பை வளர்ப்பதில், தாவீதின் மனநிலையும் நமதாண்டவர் இயேசுவின் வழிமுறைகளும் நமதாகட்டும்.
ஞாயிறு சிந்தனை 20022022

செல்வராஜ் சூசைமாணிக்கம்  : வத்திக்கான்

(வாசகங்கள் I. 1 சாமு 26: 2, 7-9, 12-13, 22-23;  II. 1கொரி 15: 45-49;  III. லூக் 6: 27-38)

இருபத்தேழு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு நாடு திருப்பிய விடுதலைப் போராளி நெல்சன் மண்டேலா அவர்கள், பொதுத்தேர்தலைச் சந்தித்து, 1994ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி, தனது 77வது வயதில், தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பினத் தலைவரானார். நாட்டின் அரசுத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, செய்தியாளர் ஒருவர் அவரிடம் மிக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார். “மண்டேலா அவர்களே, தற்போது ஆட்சி உங்கள் கைக்கு வந்துள்ளது (The ball is in your court). கறுப்பின மக்களை ஒடுக்கி, உங்களைச் சிறையில் தள்ளி வதைத்த வெள்ளையர்களைப் பழிதீர்ப்பீர்களா” என்று கேட்டார். அப்போது மண்டேலா, “அப்படிப்பட்ட பகைமையுணர்வு கொண்ட மனநிலை தற்போது என்னிடம் இல்லை. நான் இப்போது விரும்புவதெல்லம் கறுப்பின மக்களும் வெள்ளையின மக்களும் ஒன்றாகக் கரம்கோர்த்து வாழவேண்டும், வளரவேண்டும் என்பதுதான். இவ்வொற்றுமையை வளர்க்கும் விதமாகவே நான் ஆட்சி  செய்ய விழைகிறேன்” என்று கூறினார். எத்தனை சத்தியமான வார்த்தைகள் இவை!

பொதுக்காலத்தின் ஏழாம் ஞாயிற்றுக்கிழமைக்குள் அடியெடுத்து வைக்கின்றோம். இன்றைய மூன்று வாசகங்களும் பகைமையைப் போக்கவும் மன்னிப்பை வளர்க்கவும் நம்மை அழைக்கின்றன. முதல் வாசகத்தில், தன்மீது பகைமை காட்டிய சவுலை மன்னித்து ஏற்கும் தாவீதின் உயர்ந்த மனதைப் பார்க்கிறோம். இப்போது அந்தப் பகுதியை வாசித்து நம் சிந்தனைகளைத் தொடங்குவோம்.

தாவீதும் அபிசாயும் இரவில் அப்பாளையத்திற்குச் சென்றனர்; சவுல் கூடாரத்தினுள் தூங்குவதையும் அவர் தலைமாட்டில் அவருடைய ஈட்டி  தரையில் குத்தியிருப்பதையும் கண்டனர்; அப்னேரும் படைவீரர்களும் அவரைச் சுற்றிலும் படுத்து உறங்கினர். அபிசாய் தாவீதிடம், “இந்நாளில் கடவுள் உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார்; ஆதலால், இப்பொழுது நான் அவரை ஈட்டியால் இரண்டு முறை குத்தாமல், ஒரே குத்தாய் நிலத்தில் பதிய குத்தப்போகிறேன்” என்றான். ஆனால், தாவீது அபிசாயியை நோக்கி, “அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கை வைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?” என்று சொல்லித் தடுத்தார். ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கை வைக்காதபடி ஆண்டவர் என்னைக் காப்பாராக! எனவே, அவர் தலைமாட்டில் இருக்கும் ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக்கொண்டு நாம் புறப்படுவோம்” என்றார். பின்பு, தாவீது கடந்து சென்று தொலைவிலிருந்த ஒரு குன்றின் மீது நின்றார். அவர்களிடையே மிகுந்த இடைவெளி இருந்தது. தாவீது மறுமொழியாக, “அரசே உம் ஈட்டி இதோ உள்ளது. இளைஞரில் ஒருவன் இப்புறம் வந்து அதைக் கொண்டு போகட்டும்.  அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தும் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கை வைக்கவில்லை.  (1சாமு 26:7-9,11,13,22,23).

“உனக்குக் கிடைத்த மாதிரியே எனக்கும் நிச்சயம் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும், அப்போது நான் உன்னை பழிதீர்க்காமல் விடவேமாட்டேன்” என்றெல்லாம் நாம் சொல்லக் கேட்டிருக்கிறோம். நம் தமிழகத்தில் அரங்கேறிய அல்லது இன்றும் அரங்கேறிக்கொண்டிருக்கும் அரசியல் கொலைகளும், ஆணவக்கொலைகளும், ரவுடியிச கொலைகளுக்கும், உறவு சம்மந்தமான கொலைகளும், சாதி, மத, இனம் சார்ந்த கொலைகளும்  பழிக்குப் பழி வாங்க நடப்பவைகள்தாம் என்பதை நாம் நன்கறிவோம். உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பல சாம்ராஜ்யங்கள் சரிந்துபோனதற்கு முழுமுதற் காரணமே பகைமையுணர்வும் மன்னிக்க மறுத்த மனநிலையும்தான் என்பதை அறிய வருகிறோம். இன்றும் கூட, உலகெங்கிலும் பகைமையின் காரணமாக வெகுண்டெழுந்து வெகுதீவிரமாய் பழிவாங்கிக் கொண்டிருக்கும் பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம், மதவாதம் போன்றவை மனிதத்தை மாய்த்து வருகின்றன

இத்தருணத்தில், மனித மனங்களில் ஊற்றெடுக்கும் பகைமை உணர்வுகளைக் களைந்தெறிவதற்கான வழிகளைச் சொல்லிக்கொடுக்கின்றார் தாவீது அரசர். “அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கை வைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?” என்ற தாவீதின் வார்த்தைகள் ஆண்டவரால் அருள்பொழிவு செய்யப்பட்டவர் என்பது மட்டுமல்ல, மாறாக, கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டிருக்கும் இன்னொரு மனிதரைப் பழிதீர்க்க நான் யார் என்று கேள்வி எழுப்புவதாகவே இருப்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். தன்னைப் பழிதீர்க்கத் துடித்துக்கொண்டிருந்த சவுல் மன்னரைக் கொல்வதற்கான வாய்ப்புக் கிடைத்தும் கூட,  அதை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது இங்கே மிகவும் கவனிக்கத் தக்கது. “இன்று உம் உயிர் என் கண்களில் மிகவும் மதிப்பு மிகுந்ததாக இருந்தது போல் என் உயிரும் ஆண்டவர் கண்களுக்கு அருமையாய் இருப்பதாக! அவரே என்னை எல்லா இக்கட்டிலிருந்து விடுவிப்பாராக!” என்று கூறும் அவரது வார்த்தைகள் மனித மாண்பைப் போற்றுவதற்கான சான்றாக அமைகின்றன.  

மன்னிப்பது என்பது ஒரு மிகப்பெரும் ஆற்றல். மன்னிப்பது தெய்வீகக் குணம். உண்மையைச் சொல்லவேண்டுமாயின், மன்னிப்பு என்பது மிகப்பெரிய வார்த்தையல்ல, ஆனால், அதைக் கேட்பதற்கும் கொடுப்பதற்கும் மிகப்பெரிய மனது தேவைப்படுகிறது. “தண்டனைக் கொடுப்பதற்குத் தாமதம் செய். ஆனால், மன்னிப்புக் கொடுப்பதற்கு யோசனைக் கூட செய்யாதே” என்றார் கொல்கத்தா நகரின் புனித அன்னை தெரசா.

உண்மையாக மன்னிப்பது ஏழு படிநிலைகளைக் கொண்டுள்ளதாக Jon Negroni என்பவர் எடுத்துரைக்கின்றார். முதலாவதாக, தான் குறிப்பிட்ட ஒரு நபரால் காயம்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வது. இரண்டாவதாக, அந்தக் காயம் தன்னை எப்படி பாதித்துள்ளது என்பதை எண்ணிப்பார்ப்பது, மூன்றாவதாக, காயம் ஏற்படுத்தப்பட்டச் சூழலை மாற்ற இயலாது என்பதை ஏற்றுக்கொள்வது, நான்காவதாக, தன்னைக் காயப்படுத்திய நபரை மன்னிப்பதா வேண்டாமா என்று உறுதியாக முடிவெடுப்பது. ஐந்தாவதாக, காயத்தை ஏற்படுத்திய நபருக்கும் தனக்குமான உறவினை சரிசெய்து கொள்வது. ஆறாவதாக, தான் மன்னிக்கப்போகும் செயல், தன்னைவிட  சம்மந்தப்பட்ட நபருக்கு அதிகப் பயனளிக்கும்  என்பதைக் கற்றுக்கொள்வது.  ஏழாவதாக, காயம் ஏற்படுத்திய அந்த நபரை முழுமனதுடன் மன்னிப்பது. இந்த ஏழு படிநிலைகளையும் தாவீது சவுலை மன்னித்து ஏற்கும் செயல்களில் காண்கின்றோம்.

இந்த ஏழு விடயங்களில் ஆறாவது விடயமாக வருகின்ற, தான் மன்னிப்பது சம்மந்தப்பட்டவருக்கு நிறைந்த பலனை அளிக்கவேண்டும் என்று தாவீது அதிகம்  எண்ணியதால்தான், ‘ஆண்டவரால் அருள்பொழிவு செய்யப்பட்ட சவுலை தான் கொல்லமாட்டேன்’ என்று முடிவெடுக்கின்றார். அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில், அவருடன் மிகவும் இணக்கமாக ஒன்றிணைந்து செல்லவேண்டும் என்று தான் கருதியே இந்த உயர்ந்த செயலைச் செய்கின்றார். தாவீதின் இத்தகைய உன்னதமான செயலால், சவுல் மனமாற்றம் பெறுவதையும் நாம் காண்கின்றோம். இதனை 21வது இறைவசனம் பதிவு செய்கின்றது. அப்பொழுது சவுல், “நான் பாவம் செய்துள்ளேன். என் மகன் தாவீதே! திரும்பி வா, என் உயிரை இன்று நீ இவ்வளவு மதித்தபடியால் இனி உனக்கு நான் எத்தீங்கும் செய்யமாட்டேன். இதோ, நான் மூடத்தனமாய் நடந்து பெரும் தவறு இழைக்கிறேன்” என்கின்றார் (வசனம் 21). ஆகவே, நம்மை துன்புறுத்தியவர்களை அல்லது நமக்குக் காயத்தை ஏற்படுத்தியவர்களை மன்னிப்பதில் தாவீதின் மனநிலையை நாம் கொண்டிருக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஆண்டவர் பகைமையை நீக்கி மன்னிப்பில் வளர நம்மை அழைக்கிறார்.

“நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்; உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்; உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.” (லூக் 6: 27-30)

பகைமையைப் போக்குவதும், மன்னிப்பை வளர்ப்பதும் எப்படி என்று நமதாண்டவர் இயேசுவே நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதனை வாழ்ந்தும் காட்டியிருக்கின்றார். தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” (லூக் 23:34) என்ற இயேசுவின் வார்த்தைகள் அதற்குச் சான்று பகர்கின்றன. நமது திருஅவையின் வரலாற்றைப் பார்க்கும்போதும் இந்த மாபெரும் உண்மை நமக்குப் புலப்படுகிறது. இயேசுவின் காலத்திற்குப் பிறகு, இன்றுவரை அவருக்காக இரத்த சாட்சிகளாய் எண்ணற்றோர் தங்கள் இன்னுயிரைக் கையளித்துள்ளனர். இயேசுவின் வழியில் பகைமை உணர்வுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காமல், மன்னிப்பு என்ற உயர்ந்த இறையாட்சி விழுமியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டு வருவதால்தான், கிறிஸ்தவம் வீழ்ந்துவிடாமல் இன்றுவரை வானளாவ உயர்ந்து நிற்கிறது. அதை வீழ்த்த நினைப்பவர்கள் எல்லாம் வீழ்ந்துபோகிறார்கள்.

மன்னித்தல் வழியாகப் பகைமையைப் போக்கும் இயேசுவின் வழி ஓர் அகிம்சை வழி. எனவேதான், கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் (மத் 5:38-39) என்கிறார் இயேசு. மேலும், பகைமையைப் பகைமையால் விரட்டமுடியாது. அதனை மன்னிப்பு என்னும் அகிம்சையால்தான் விரட்ட முடியும் என்று தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். இயேசுவின் அகிம்சை வழியை அண்ணல் காந்தியடிகள் மிக நன்றாகவே புரிந்துகொண்டார். அதனால்தான், அகிம்சை போராட்டத்தில் அவரால் வெற்றிகாண  முடிந்தது. அதேவேளையில், பகைமையை மன்னிப்பவர்கள் வாழ்கிறார்கள். ஆனால், பகைமையை வளர்த்துக்கொண்டே இருப்பவர்கள் அதனாலேயே வீழ்ந்துபோகிறார்கள், அல்லது அழிந்துபோகிறார்கள். எனவேதான், இயேசு கைது செய்யப்படும் நிலையில், புனித பேதுரு உணர்ச்சிவயப்பட்டு மால்கூஸ் என்ற படைவீரரின் காதை வெட்டும்போது,  “உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்" (மத் 26:52) என்று எச்சரிக்கின்றார்.

நமது அன்றாட வாழ்வில் மன்னிப்பு என்ற வார்த்தையை சொல்வதைவிட, அதை வாழ்ந்து காட்டுவததில்தான் அதிகமான சவால்கள் நிறைந்திருக்கின்றன. நம் இந்திய தேசத்தில் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கிற அருள்சகோதரி இராணி மரியாவின் கொடூர மரணமும், அதனைத்தொடர்ந்து அவரது குடும்பத்தார் மேற்கொண்ட மன்னிப்பு முயற்சிகளும் நமக்கு அதனைக் குறித்த உயர்ந்த பாடத்தைக் கற்றுத் தருகின்றன. 1995ம் ஆண்டு மே மாதம், மத்தியபிரதேசத்திலுள்ள உதய் நகருக்குப் பணியாற்ற வந்தார்  சகோதரி இராணி மரியா. ஏழை எளிய மக்களுக்காகவும், குறிப்பாக, பெண்களின் மேம்பாட்டிற்காகவும் அவர் அயராது உழைத்தார். அதிலும் சிறப்பாக, அப்பகுதியிலுள்ள கந்துவட்டிக்கொடுமையை ஒழிக்கும் விதமாக அர்ப்பண மனதுடன் பணிபுரிந்து வந்தார். இதனால் கந்துவட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள் அனைவரும், பல்வேறு வழிகளில் அவருக்கு மிரட்டல்களும் எச்சரிக்கைகளும் விடுத்து வந்தனர். ஆனால், அவைகள் எதுவும் சகோதரி இராணி மரியாவை அசைக்க முடியவில்லை. தைரியமுடன் தன் பணிகளைத்  தொடர்ந்தார் அவர்.  

1995ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதியன்று, கேரளா செல்வதற்காக ஒரு பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார் சகோதரி இராணி மரியா. அப்பேருந்தில் 50 பயணிகள் இருந்தனர். அவர்களோடு, சமந்தர் சிங் என்ற கொலைஞனும் அச்சகோதரியின் அருகில் அமர்ந்திருந்தான். பேருந்து காட்டுப் பாதையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சமந்தர் சிங், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை  எடுத்து சகோதரி இராணி மரியாவின் வயிற்றில் குத்தினான். உடனே பேருந்து நின்றதும், அனைவரும் அலறியடித்துக்கொண்டு ஓடிவிட்டனர். அதன்பிறகும் வெறி தீராதவனாய், இரத்தவெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த சகோதரியை அப்பேருந்திலிருந்து வெளியே இழுத்துப்போட்டு மீண்டும் கத்தியால் குத்திக் கொன்றான். சகோதரி இராணி மரியாவின் உடலில் 52 முறை கத்திக் குத்தப்பட்டிருந்ததாக உடற்கூறு ஆய்வு தெரிவித்தது. அதன்பிறகு, கைது செய்யப்பட்ட சமந்தர் சிங்கிற்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது..

அப்போது, அதேசபையில் அருள்சகோதரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்த சகோதரி இராணி மரியாவின் தங்கை, சமந்தர் சிங்கை சிறையில் சென்று சந்தித்து அவருக்கு மன்னிப்பு அளித்து, விடுதலைப் பெற்றுத் தந்து, அவரை கேரளாவிலுள்ள தனது பெற்றோரிடம் அழைத்துச் சென்றார். அவர்களும் தன் அன்பு மகளைக் கொன்ற அந்தக் கொலைஞனை, இயேசுவின் வழியில் மன்னித்து தன் மகனாக ஏற்றுக்கொண்டனர். மனமாற்றம் பெற்ற சம்மந்தர் சிங், தற்போது சகோதரி இராணி மரியாவின் கல்லறையில் அமர்ந்துகொண்டு அச்சகோதரியின் புனித வாழ்விற்குச் சான்று பகர்ந்து வருகின்றார். அவர் புனிதராகும் நாளுக்காக அவர் ஆவலோடுக் காத்துக்கிடக்கிறார். மன்னிப்பின் மகத்துவம் என்பது இதுதான். இது தீராத வலிநிறைந்த ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், இதுவே மனித உடன்பிறந்த உணர்வு நிலையைக் கட்டியெழுப்பக்கூடியது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தவறுவது மனித குணம், மன்னிப்பது தெய்வீகக் குணம் என்பார்கள். பலவீனமானவர்கள் பிறரை மன்னிக்கமாட்டார்கள். மன்னிப்பது என்பது மனவலிமையுடையோரின் குணம். மன்னிப்பது என்பது ஆன்மிக ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் நமது வாழ்விற்கு நிறைவளிக்கிறது. மேலும், பரிணாம அறிவியலின்படி, பழிவாங்கும் நோக்கில் எழும் எண்ணங்கள், எப்படி நமது போக்கின் வேகத்தைக் கூட்டுகிறதோ அவ்வாறே, மறுபுறம் மன்னிப்பதற்கு முன்வரும் நமது மனநிலையின் வேகத்தையும் கூட்டுகிறது. ஆகவே, நாம் எப்போதும் மன்னிக்கத் தூண்டும் மனநிலையின் வேகத்தைக் கூட்டி, பிறரை மன்னித்து ஏற்றுவாழக் கற்றுக்கொள்ளவேண்டும். முக்கியமாக, மன்னிக்கும் உயர்ந்த செயலில் நாம் ஈடுபடும்போது, ஆரோக்கியமான உறவுகள்,   மேம்பட்ட மன ஆரோக்கியம், குறைவான பதட்டம், மன அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், மனச்சோர்வின் குறைவான அறிகுறிகள், வலுவான நோயெதிர்ப்பு சக்தி, மேம்பட்ட இதய ஆரோக்கியம், மேம்படுத்தப்பட்ட சுயமரியாதை ஆகியவை ஏற்படுகின்றன. எனவேதான், மன்னிப்புப் பற்றிய தனது போதனைகளில், ஆன்மிக முதிர்ச்சியை மட்டுமல்லாமல் உளவியல் முதிர்ச்சியையும் முன்னிறுத்துகிறார் இயேசு. இதன் அடிப்படையில்தான் பகைவரிடம் அன்புகூரவும், நம்மை வெறுப்போருக்கு நன்மை செய்யவும், சபிப்போருக்கு ஆசி கூறவும்; இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுதல் எழுப்பவும், அறிவுறுத்துகிறார் இயேசு.   

மன்னிப்பதும் மன்னிப்புக் கேட்பதும், வாழ்க்கையில் நம்மை எவ்விதத்திலும் சிறுமைபடுத்தப் போவதில்லை. இன்னும் எஞ்சியிருப்பது எத்தனை ஆண்டுகள், மாதங்கள், வாரங்கள், நாட்கள், மணித்துளிகள் என்பது நமக்கே தெரியாது. ஆகவே, தாவீதைப்போல, நமதாண்டவர் இயேசுவைப் போல, பிறரை மனமுவந்து மன்னிக்கக் கற்றுக்கொள்வோம். மன்னிப்போம் மன்னிப்புப் பெறுவோம். இதற்கான இறையருளை இந்நாளில் இறைவனிடம் இறைஞ்சி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 February 2022, 14:25